TNPSC Thervupettagam

ச.தமிழ்ச்செல்வன் 70: தமிழுக்கும் அறிவுக்குமான தொண்டு

July 7 , 2024 188 days 205 0
  • எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் முதல் தொகுப்பு ‘வெயிலோடு போய்’. அந்தத் தொகுப்பில் இருக்கிற மாரியம்மாளும் தங்கராசும் சுப்புராசும் கருப்பசாமியின் அய்யாவும் நான் அதுவரை பார்த்திராத, எழுதியிராத அபூர்வமான மனிதர்களாக இருந்தார்கள் என எழுத்தாளர் வண்ணதாசன் கூறியிருக்கிறார். ‘வெயிலோடு போய்’ சிறுகதை இயக்குநர் சசியின் இயக்கத்தில் ‘பூ’ திரைப்படமாக வெளியாகிப் பெரும் வெற்றிபெற்றது. இதற்காகத் தமிழ்ச்செல்வனுக்குச் சிறந்த திரைக்கதாசிரியர் விருதைத் தமிழ்நாடு அரசின் திரைப்படக் கழகம் வழங்கியது.
  • இதுவரை தமிழ்ச்செல்வனின் 52 நூல்கள் வெளிவந்துள்ளன. ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’ (வாசல் பதிப்பகம்), ‘பேசாத பேச்செல்லாம்’ (உயிர்மை பதிப்பகம்), ‘மிதமான காற்றும் இசைவான கடலலையும்’ (மொத்தக் கதைகளின் தொகுப்பு, தமிழினி பதிப்பகம்), ‘நான் பேச விரும்புகிறேன்’ (வம்சி பதிப்பகம்) ஆகிய நூல்கள் தவிர்த்து, ஏனைய நூல்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ‘நமக்கான குடும்பம்’, ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’ போன்ற இவருடைய சில நூல்கள் இதுவரை 27 பதிப்புகள் கண்டுள்ளன. இவ்விரு நூல்களும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அரசியலைக் கண்டு முகம் சுளித்து, அது ஒரு சாக்கடை என ஒதுங்கும் மக்களுக்கு அரசியல் என்றால் என்ன, அது நம் வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும்போது, அதை நாம் புறக்கணித்தால் என்ன நடக்கும் என்பதை மிக எளிய மொழியில் விவரித்திருக்கிறார் தமிழ்ச்செல்வன்.
  • அதேபோலக் குடும்பம் என்கிற அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை பற்றிய வரலாற்று உண்மைகளை அறிவியல்பூர்வமாக விளக்கி எழுதியிருக்கிற நூல் ‘நமக்கான குடும்பம்’. பல்வேறு திருமண வீடுகளில் இந்த இரண்டு நூல்களையும் பல்லாயிரக்கணக்கில் அச்சிட்டு அன்பளிப்பாக வழங்கப்படுவதைப் பரவலாகப் பார்க்கமுடிகிறது. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் அவர் எழுதிய ‘எசப்பாட்டு’ தொடர், பெண்களுக்கும் நமது சமூகத்துக்குமான ஊடாட்டங்களைப் பற்றிப் பேசுகிறது. ‘தெய்வமே சாட்சி’ நூல் நாட்டுப்புற தெய்வங்களாகத் தமிழ் மண்ணில் வழிபடப்பட்டு வரும் 60-க்கு மேற்பட்ட பெண்களின் கதைகளைக் கூறுகிறது. ‘சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்’ நூல், பாரம்பரிய உணவு வகைகளில் தொடங்கி இன்றைய பரோட்டா வரை செய்முறைகள், சுவை, வகை போன்றவற்றை விவரிக்கிறது. ஆனால், இது ஏதோ ‘அறுசுவை சமையல் கலைஞர்’ ஒருவரின் சமையல் குறிப்புகளின் தொகுப்பு அல்ல; ஆண்கள் சமைக்கத் தொடங்குவதுதான் அடுப்படிப் புகையிலிருந்து பெண்களை விடுவிக்கும் முயற்சியின் முதல்படி என்று கூறும் நூல்.
  • ‘கேட்டதால் சொல்ல நேர்ந்தது’ நூலில் இவரை நேர்காணல் செய்து பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் தொகுத்தவற்றில் சில இடம்பெற்றுள்ளன. தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, அந்தந்த நேரங்களில் தோன்றியவற்றைப் பதில்களாகச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார். ‘இன்னும் ஆழமான கேள்விகளுக்குத் தகுதியானவர்கள் நாங்கள்’ என்று பிரகடனம் செய்கிறார். தனது ஆழ் மனதில் இருக்கும் வேதனை ஒன்றையும் வெளிக்காட்டியிருக்கிறார்: ‘எப்போதும் கூட்டங்கள், போராட்டங்கள் என மக்களோடு இருக்கும் அதேநேரத்தில் பெரும் தனிமையுணர்வுடன்தான் அலைந்து கொண்டிருக்கிறேன், அந்தத் தனிமை பற்றி ஒரு கேள்வியும் இது வரை யாரும் கேட்டதில்லை என்பது சிறு வருத்தம் தருகிறது’ எனப் பதில் சொல்லியிருக்கிறார்.
  • ‘உயிர்மை’ இதழில் அவர் எழுதியிருந்த தொடர் ‘பேசாத பேச்செல்லாம்’, அதே தலைப்பில் நூலாகியுள்ளது. விடுபட்ட வார்த்தைகள், விடுபட்டுக் கடந்து போய்விட்ட பல சக மனிதர்கள், அவர்களோடு தன் வாழ்க்கை அனுபவங்கள் ஊடாடிய விதத்தை மிகவும் உணர்ச்சிமயமான மனநிலையில் கதைத் தன்மையுடன் இந்த நூலில் விவரிக்கிறார். இவரின் நூல்களிலேயே மிகவும் தனித்துவமானது ‘நான் பேச விரும்புகிறேன்’. உலகம் இன்று போற்றும் ஐந்து கலை ஆளுமைகளாக உள்ள ஃபிரீடா காலோ, இங்ரிட் பெர்க்மன், காகின், இகான் செலீ, லிவ் உல்மன் ஆகியோரைப் பற்றிய கவித்துவம் மிளிரும் கட்டுரைகள் இதில் உள்ளன. ‘புதுவிசை’ காலாண்டு இதழில் தொடராக வெளியான இக்கட்டுரைகளை ஆதிலட்சுமி என்ற பெயரில் தமிழ் எழுதியிருந்தார்.
  • இவரின் ‘பெண்மை என்றொரு கற்பிதம்’ நூல், மறைந்த ஏ.ஜி.எத்திராஜுலு மொழிபெயர்ப்பில் தெலுங்கில் ‘ஸ்த்ரீத்துவம் ஒக ஊகாலு’ என்ற தலைப்பில் பெயர்க்கப்பட்டுள்ளது. 32 சிறுகதைகளின் தொகுப்பு, கே.சண்முகம் அவர்களால் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, முன்னாள் அமைச்சர் எம்.ஏ.பேபியின் முன்னுரையுடன் வெளியாகவுள்ளது. வெஸ்ட் லேண்ட் ஆங்கிலப் பதிப்பகம், இவரின் எல்லாச் சிறுகதைகளையும் ஆங்கிலத்தில் வெளியிடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. மொழிபெயர்ப்பாளர் லதா ராமகிருஷ்ணன் அதைச் செய்யவுள்ளார். சில சிறுகதைகள் ஏற்கெனவே பிரெஞ்சு, ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
  • இந்திய விடுதலைப் போராட்டம் தொடர்பாக ‘வீர சுதந்திரம் வேண்டி...’ (ஜா.மாதவராஜுடன் இணைந்து எழுதியது), ‘1806 - வேலூர் புரட்சி’, ‘1947, திருநெல்வேலி வரலாற்று அசைவுகள்’, ‘வ.உ.சி.யின் தொழிற் சங்க இயக்கமும் சுதேசிக் கப்பலும்’ போன்ற பல வரலாற்று நூல்களை எழுதியிருக்கிறார்.
  • அறிவொளி இயக்க அனுபவங்களை ‘இருளும் ஒளியும்’ நூலாகவும் படைத்துள்ளார். தொழிற் சங்க இயக்கத் தோழர்களைக் கொண்டே மூன்று கலைக்குழுக்களை உருவாக்கிப் பல ஊர்களில் தெரு நாடகங்களை அரங்கேற்றியவர் தமிழ். ‘கு.அழகிரிசாமியின் படைப்புலகம்’, ‘கரிசல் நிலவியல் கதைகள்’ தொகுப்பு (மணிமாறனுடன் இணைந்து) போன்ற பெருநூல்களைத் தமிழ்நாடு அரசுக்காகத் தொகுத்துள்ளார். ‘இருட்டு எனக்குப் பிடிக்கும்’, ‘மூதாய்’, ‘காசு’, ‘சமையலறை அறிமுகம்’, ‘சயன்ஸ் படிச்சவன் சமைக்க மாட்டேன்னு சொல்ல மாட்டான்’ போன்ற நூல்களைச் சிறார்களுக்காகவும் எழுதியிருக்கிறார். ‘காலத்தின் ரேகை படிந்த புதுமைப்பித்தன் கதைகள்’, ‘சீவன்’ - கந்தர்வனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், ‘கெத்து’ இலட்சுமணப் பெருமாளின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், ‘நெல்லுச்சோறு’ தெற்கத்திச் சிறுகதைகள் எனப் பல்வேறு தொகுப்பு நூல்களையும் உருவாக்கியவர்.
  • மாநில அளவில் இளம் எழுத்தாளர்களுக்கான பயிலரங்குகளில் கருத்துக் கையேடுகளாக ‘ஒரே ஒரு ஊர்ல’, ‘தமிழ்ச் சிறுகதைகள்- நடை, உடை, பாவனை’ போன்ற தொகுப்புகளையும் தந்துள்ளார். கரிசல் குயில் கிருஷ்ணசாமி, திருவுடையான் போன்ற கரிசல் மண் மணக்கப் பாடும் கலைஞர்களை முன் வரிசைக்குக் கொணர்ந்தவர் தமிழ்.
  • தனது செயல்பாடுகளில் எப்போதும் ஒரு நிறைவின்மையுடனேயே தவிக்கும் உள்ளம் தமிழ்ச்செல்வனுடையது. அதனாலோ என்னவோ அவரின் களங்கள் வெவ்வேறாகி விரிவும் ஆழமும் கொண்டு நகர்ந்துகொண்டே இருக்கின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories