TNPSC Thervupettagam

சதி மாதா ரூப் கன்வர்

December 31 , 2023 203 days 184 0
  • அந்தப் பெண்ணின் பெயர் ரூப் கன்வர். 18 வயது ரூப் கன்வருக்கும் 24 வயது மால் சிங் ஷெகாவத்துக்கும் 1987 ஜனவரி 17இல் திருமணம். மணம் முடித்து ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் இருக்கும் தியோராலா கிராமத்துக்கு ரூப் கன்வர் குடிபெயர்கிறார். கோடிக்கணக்கான இந்தியப் பெண்களின் புகுந்த வீட்டுக் கனவுகளைபோல்தான் புது வாழ்க்கை குறித்த கற்பனைகளோடு ரூப் கன்வரும் தியோராலாவுக்கு வந்திருப்பார். ஆனால், எட்டே மாதங்களில் தன் வாழ்க்கை முடிந்துவிடக்கூடும் என்று அவர் நினைத்திருக்க மாட்டார்.
  • ராஞ்சியில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த ரூப் கன்வர், பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். 1987 செப்டம்பர் 3 அன்று தனக்கு வயிற்று வலி என்று சொன்ன ரூப் கன்வரின் கணவர், மறுநாள் இறந்துவிட்டார். அதன் பிறகு நடந்தவற்றை அந்த ஊர் மக்கள் சொன்னதாகப் பத்திரிகைகளில் பதிவான செய்தி இது:
  • கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத ரூப் கன்வர், கணவனோடு சேர்ந்து தானும் உயிர் துறக்க முடிவு செய்தார். தங்கள் குல வழக்கப்படி தன்னை மணப்பெண் போல் அலங்கரித்துக்கொண்டார். கணவனின் சடலத்தைத் தன் மடி மீது கிடத்திக்கொண்டு, கைகளை உயர்த்தி ஊர் மக்களை வாழ்த்தினார். பிறகு கணவன் சிதையில் தானும் வீழ்ந்து இறந்துபோனார்’.
  • ரூப் கன்வர் இறந்த செய்தி செப்டம்பர் 5 அன்று நாளிதழ் ஒன்றில் வெளியானது. அதைப் பார்த்தே தங்கள் மகள் இறந்த செய்தியை அவருடைய பெற்றோர் அறிந்துகொண்டனர். ஆரம்பத்தில் தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நினைத்த அவர்கள், மால் ஷெகாவத்தின் கிராமத்துக்குச் சென்று விசாரித்தபோது ஊரே ரூப் கன்வரைக் கொண்டாடியது. உடனே தங்கள் மகள் அவளாக விரும்பித்தான் இறந்திருப்பாள் என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டனர்.
  • ரூப் கன்வரைசதி மாதாவாகக் கொண்டாடியதுதான் இந்த விஷயம் வெளியுலகத்துக்குத் தெரிய காரணமாக அமைந்தது. ரூப் கன்வர் இறந்ததும் அவருக்குக் காணிக்கை அளிக்கப் பலரும் தேங்காய்களை வாங்கினர். அதிக அளவில் தேங்காய் விற்பனை ஆவதை அறிந்த உள்ளூர் வருவாய் அதிகாரிதான் விஷயத்தைக் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். அவர்கள் வந்து பார்த்த பிறகே ரூப் கன்வர் உயிருடன் எரிக்கப்பட்டது தெரியவந்தது.

விடையில்லாக் கேள்விகள்

  • இந்தச் சம்பவம் குறித்து அன்றையபம்பாய் பத்திரிகையாளர் சங்கத்தைச் சேர்ந்த மூன்று பெண் பத்திரிகை யாளர்கள் விசாரிக்கச் சென்றனர். அவர்கள் எழுப்பிய கேள்விகள், ரூப் கன்வரின் மரணத்தில் புதைந்திருந்த சந்தேக முடிச்சுகளை வெளிக் கொணர்ந்தன. ஜனவரி மாதம் திருமணம், செப்டம்பரில் ரூப் கன்வரின் கணவர் இறந்துவிடுகிறார். இந்த இடைப்பட்ட எட்டு மாதங்களில் பெரும்பாலும் தன் பெற்றோர் வீட்டில்தான் ரூப் கன்வர் தங்கி யிருந்தார். அதிகபட்சமாக 20 நாள்கள் மட்டுமே அவருடைய புகுந்த வீட்டில் இருந்திருக்கிறார். இந்த மூன்று வார வாழ்க்கைப் பயணமா கணவனுக்காக உயிரையே தருகிற அளவுக்கு ரூப் கன்வரை முடிவெடுக்க வைத்திருக்கும்? அந்தக் கிராமத்தில் ஒருவர்கூட,ரூப் கன்வர் சுயவிருப்பத்தின் பேரில்மாய்த்துக்கொண்டதைப் பார்க்க வில்லை என்று சொல்லியிருக்கின்றனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ரூப் கன்வரின் மரணம் புனிதப்படுத்தப்பட்ட விதமும் அரசியல் தலையீடுகளும் சந்தேகத்தை வலுப்படுத்தியதாக அந்தப் பத்திரிகையாளர்கள் தங்கள் கள ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
  • இந்த மரணத்தைசதிஎனப் புனிதப்படுத்துவதை எதிர்த்துப் பெண்ணிய அமைப்பினரும் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் சிலரும் குரல்கொடுத் தனர். அதற்குள் ரூப் கன்வருக்குக் கோயில் எழுப்ப நிதி வசூல் தொடங்கிவிட்டது. செங்கற்களால் சிறு அடித்தளமும் எழுப்பப்பட்டுவிட்டது. இதுபோன்ற செயல்கள் பெண்ணின் வாழ்வுரிமையைப் பறித்துவிடும் என்ப தோடு கணவன் இறந்த பிறகு பெண்கள் தங்களை மாய்த்துக்கொள்ளும் கட்டாயத்துக்கு ஆளாகக்கூடும் என்பதால் அப்போதைய மத்திய அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அன்றைய ஜனதா கட்சியின் ராஜஸ்தான் மாநிலத் தலைவர் கல்யாண் சிங் கால்வி, இந்தப் பிரச்சினையை ராஜபுத்திரர்களின் பண்பாட்டு அம்சமாக முன்வைத்தார். இதனைத் தொடர்ந்து ரூப் கன்வரின் மரணம் நாடு முழுவதும் விவாதத்தைக் கிளப்பியது.

சட்டமும் பண்பாடும்

  • ரூப் கன்வரின் மரணத்தைப் புனிதப்படுத்துவதோ அதைசதிஎனக் கொண்டாடுவதோ கோயில் எழுப்புவதோ கூடாது என 1987 செப்டம்பர் 15ஆம் தேதி ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் தடைவிதித்தது. ஆனால், அதையும் மீறி அக்டோபர் 28 அன்றுதர்ம ரக்ஷா சமிதிசார்பில் மாபெரும் ஊர்வலம் நடத்தப்பட்டது. ‘ஜெய் சதி மாதாஎன்கிற முழக்கத்துடன் பலர் அதில் பங்கேற்றனர். ரூப் கன்வர் இறப்புக்குப் பிறகு சில சடங்குகளை நடத்துவது குறித்து அப்போது பேட்டியளித்த கல்யாண் சிங் கால்வி, “யார் இறந்தாலும் 12 நாள்கள் கழித்துச் சடங்கு செய்வது எங்களது வழக்கம். அதைத்தான் ரூப் கன்வர் விஷயத்திலும் கடைபிடிக்கிறோம். உத்தரப் பிரதேசத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் இதுபோல் பெண்கள் பலர் உடன்கட்டை ஏறுகிறார்கள். சமணர்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்கிறார்கள். புத்தத் துறவிகள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கி றார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு இதை மட்டும் ஏன் பிரச்சினையாக்க வேண்டும்? கணவன் இறந்த பிறகு கைம்பெண் உயிர் துறப்பது எங்கள் பண்பாடு. அவர்கள் சதி மாதாவாகப் போற்றப்படுவார்கள். ‘சதியும்சக்தியும் எங்கள் பண்பாட்டின் அங்கம், சட்டம் இதில் தலையிட முடியாதுஎன்று குறிப்பிட்டார்.
  • இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு பெண்கள் மிக உயர்வான நிலையை எட்டிவிட்டார்கள் என்று நாம் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில்தான் பெண்கள் மீது சுமத்தப்பட்ட பழமைவாத அடக்குமுறைக்குப் பலி கொடுக்கப் பட்டார் ரூப் கன்வர். தன் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு அவர் கொல்லப்பட்டார் என்கிற தகவலை தியோராலா கிராமத்தைச் சேர்ந்த சிலர் பத்திரிகை யாளர்களிடம் தெரிவித்தனர்.
  • ராஜஸ்தானில் ஏதோவொரு கிராமத்தில் ஒரே ஒரு பெண் கொல்லப் பட்டது அல்லது தானாக முன்வந்து தன்னை மாய்த்துக்கொண்டது எப்படிப் பெண்களின் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் எனத் தோன்றலாம். பெண்களுக்கு நிகழும் அல்லது பெண் கள் மீது திணிக்கப்படும் எதுவும் தனித்த நிகழ்வல்ல. இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு ராஜஸ்தானில்சதியின் பெயரால் கொல்லப்பட்ட 38ஆவது பெண் ரூப் கன்வர். அவருக்கு இந்தச் சமூகமும் சட்டமும் நியாயம் வழங்கினவா?

நன்றி: இந்து தமிழ் திசை (31 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories