TNPSC Thervupettagam

சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?

February 3 , 2025 2 hrs 0 min 9 0

சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கை நிறைவேறுமா?

  • அரசுப் பள்ளிகளின் செயல்பாட்டிலும் மாணவர்களின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கும் சத்துணவுப் பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் நிலையில், அவர்கள் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் திட்டம், அது தொடங்கப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டுவதாக இருந்தது. காமராஜர் தொடங்கி வைத்த இத்திட்டம், எம்ஜிஆர், மு.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிகளில் மேம்படுத்தப்பட்டது.
  • பல குழந்தைகளைப் பள்ளியில் சேர வைப்பதும் இடைநிற்றலுக்கு உள்ளாகாமல் படிப்பைத் தொடர வைப்பதும் இதன் சாதனைகள்; ஆயிரக்கணக்கான பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவது இதன் இன்னொரு சிறப்பு. கணவரை இழந்த, ஆதரவற்ற பல பெண்களுக்குச் சத்துணவுத் திட்டம் அடைக்கலம் அளிப்பதாக இருக்கிறது. எனினும், பிற அரசு ஊழியர்கள் காலத்துக்கேற்றவாறு ஊதிய உயர்வு உள்ளிட்ட உரிமைகளைப் பெற முடிகிற நிலையில், சத்துணவுப் பணியாளர்கள் அவற்றைப் பெற முடியாமல் தவிப்பது துரதிர்ஷ்டவசமானது.
  • தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் ஏறக்குறைய ஒன்றரை லட்சம் சத்துணவுப் பணியாளர்கள் தேவை. ஆனால், ஏறக்குறைய 70 சதவீதப் பணியிடங்கள் காலியாக உள்ளன. 2017இலிருந்து பணியாளர் சேர்க்கை நடைபெறவே இல்லை. 200 மாணவர்களுக்கு ஒரு சத்துணவு அமைப்பாளரும் ஒரு சமையலரும் ஓர் உதவியாளரும் இருக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகமானால், அதற்கேற்பக் கூடுதலாக உதவியாளர்கள் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை.
  • ஓர் அமைப்பாளர் 4 சத்துணவு மையங்களுக்கும் சில மாவட்டங்களில் 9 மையங்களுக்கும் கூட, பணிபுரியும் நெருக்கடி நிலவுவது நிதர்சனம். காலை 9 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை மட்டுமே இவர்களது பணி நேரமாக இருப்பினும், அதற்குள் இவர்களின் வேலை நிறைவடைவதில்லை. உதவியாளர் இன்றி ஒரே ஆள் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குச் சமையல் செய்வதில் உள்ள சிரமங்களை யாரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். பணிபுரியும் பெண்களில் பலர் 40 வயதுக்கும் மேற்பட்டோர்.
  • இவர்களுக்கு இருசக்கர வாகனம் ஓட்டத் தெரியாததால், தலையில் பாத்திரத்துடன் நடந்தே அடுத்த பள்ளிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. பல சத்துணவு மையங்களில் தண்ணீர், மின்சார இணைப்புகள்கூட இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், பணியாளர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. கழிப்பிட வசதிகளுக்குக்கூட இவர்களுக்கு உத்தரவாதம் இல்லை என்பதே கள நிலவரம்.
  • சத்துணவு அமைப்பாளரது ஊதியம் ரூ.12,000-ரூ.24,000 ஆகவும், சமையலர் - உதவியாளர் ஊதியம் ரூ.3.000-ரூ.8,000 ஆகவும் உள்ளது. இந்தக் காலத்திலும் இவர்களது ஓய்வூதியம் ரூ.2,000 மட்டுமே. தங்களுக்கு இளநிலை உதவியாளருக்கான ஊதியம் அளிக்கப்பட வேண்டும் எனவும் ஓய்வூதியம் ரூ.9,000 ஆக உயர்த்தப்பட வேண்டும் எனவும் இவர்கள் நீண்ட காலமாகக் கூறிவருகின்றனர். 8,997 பேரை மாதத்துக்கு ரூ.3,000 எனத் தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தப்போவதாகத் தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ளது. இதற்கு எதிராகவும் சத்துணவுப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
  • தமிழக அரசுக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்த காலை உணவுத் திட்டத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க நடந்த முயற்சி விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், அது கைவிடப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்தப் பணிகள் சத்துணவுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டால், நிர்வாக நோக்கில் பொருத்தமானதாகவும் சராசரி அரசு ஊழியருக்கான ஊதியம் கேட்கும் சத்துணவுப் பணியாளர்களின் திறனைப் பயன்படுத்துவதாகவும் இருக்கும்.
  • கல்வியில் உணவையும் இணைத்துச் சமூக நீதியை நிலைநாட்டும் அரசின் பணிக்குச் சத்துணவுப் பணியாளர்களே அச்சாணியாக உள்ளனர். இவர்கள் தங்கள் உரிமைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் சூழல் இனியும் தொடரக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories