- தேவலோகத்தில் இந்திரர்கள் மாறுவார்கள், ஆனால் இந்திராணி மாறமாட்டார் என்று சொல்வார்கள். அதேபோல, பிகாரில் ஆட்சிகள் மாறும், ஆனால் முதல்வர் நிதீஷ் குமார் மாறமாட்டார் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒன்பதாவது முறையாகப் பதவி ஏற்றுக்கொண்டிருக்கிறார் முதல்வர் நிதீஷ். ஜிதன்ராம் மாஞ்சி 278 நாள்கள் நிதீஷ் குமாரால் பதவியில் அமர்த்தி வைக்கப்பட்டிருந்த இடைவெளி தவிர, கடந்த 2005 நவம்பர் 24 முதல் இதுவரை நிதீஷ் குமார்தான் தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார்.
- நிதீஷ் குமாருக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்று பாஜகவின் மத்திய, மாநிலத் தலைமைகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவந்த நிலையில், திடீரென்று மனமாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்கிற கேள்வி எழலாம். பிகாரில் 40 மக்களவைத் தொகுதிகள், "இந்தியா' கூட்டணியை பலவீனப்படுத்துவது, காங்கிரஸ் முன்வைத்த ஜாதி அரசியலை குறிவைப்பது என்கிற மூன்று காரணங்கள் வெளிப்படையாகவே தெரிகின்றன. மக்களவைத் தேர்தல் வெற்றி மிக முக்கியமான காரணம்.
- 2019 தேர்தலில் பிகார் மாநிலத்தில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 17 தொகுதிகளை பாஜக வென்றிருந்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்தால், அதனால் உருவாகும் சமூகக் கூட்டணியை, பாஜகவின் அயோத்தி எழுச்சியும், பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கும் ஈடு செய்துவிட முடியாது என்று பாஜக தலைமை உணரத் தொடங்கியது.
- பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செல்வாக்குள்ள பிரதமர் என்பதையும் தாண்டி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நிதீஷ் குமாரின் செல்வாக்கு கணிசமானது. அவை இரண்டும் இணையும்போது, ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியின் "முஸ்லிம் - யாதவ்' வாக்குவங்கியால் அதை எதிர்கொள்ள இயலாது.
- யாதவர்கள் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர் ஜாதியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், பாஸ்வான்கள், முஸாஹர்கள், ஏனைய பட்டியல் இனத்தவர் என்று பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியின் பின்னால் அணிதிரளும்போது அந்த வலுவான கூட்டணியை எதிர்கொள்ள எதிரணியினரால் இயலாது என்பதால்தான் பாஜக மீண்டும் தனது கதவுகளை நிதீஷ் குமாருக்குத் திறந்திருக்கிறது.
- ஜெயபிரகாஷ் நாராயணின் "நவநிர்மாண்' போராட்டத்தின் மூலம் பொதுவாழ்க்கைக்கு வந்த இளைஞர்கள்தான் நிதீஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பாஸ்வானும். அவர்களது வழிகாட்டியாக இருந்தவர் "ஜன நாயக்' என்று போற்றப்பட்ட கர்பூரி தாக்கூர். அவசரநிலை காலத்தில் அவர்கள் மூவருமே சிறை சென்றவர்கள். அவசரநிலையைத் தொடர்ந்து நடந்த மக்களவைத் தேர்தலில், லாலு பிரசாதும், ராம் விலாஸ் பாஸ்வானும் வெற்றி பெற்று எம்.பி.க்களானார்கள். ஆனால், நிதீஷ் குமாருக்கு அதிருஷ்டம் ஒத்துழைக்கவில்லை.
- 1977 மக்களவைத் தேர்தலிலும் சரி, அடுத்தாற்போல நடந்த 1980 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி அவரால் வெற்றிபெற முடியவில்லை. தனது மனைவியின் நகைகளை விற்றும், நண்பர்களிடமிருந்து நன்கொடை பெற்றும் 1985 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹர்நாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அன்று முதல் இன்றுவரை அவரது அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில்தான் இருந்து வருகிறது.
- 1990-இல் லாலு பிரசாத் யாதவ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு மூல காரணமே, தனது கல்லூரி நாள் நண்பரான நிதீஷ் குமார்தான். ஆனால், லாலு பிரசாத் யாதவின் ஊழல் ஆட்சியையும், அவர் நிலைநிறுத்திய யாதவர்களின் அடாவடி செயல்பாடுகளையும் நிதீஷ் குமார் ஏற்றுக்கொள்ளாததால், அவர்களது பாதை பிரிந்தது.
- 1998 வாஜ்பாய் அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராக இருந்தவர் நிதீஷ் குமார். வாஜ்பாய், அத்வானி காலத்தில் அவருக்கு பாஜகவுடன் இருந்த நெருக்கம் இப்போது இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
- 1996 முதல் பாஜகவுடனான நிதீஷ் குமாரின் நட்பும் பிரிவும் தொடர்கின்றன. பாஜக தீண்டத்தகாத கட்சியல்ல என்று முதன்முதலில் பகிரங்கமாக அறிவித்தவர் நிதீஷ் குமார்தான். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதும், திரும்பி வருவதும் நிதீஷ் குமாருக்குப் புதிதொன்றுமல்ல. 2013-இல் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வெளியேறிய நிதீஷ் குமார், நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துகொண்டார். இப்போது இணைந்திருப்பது மூன்றாவது முறை.
- கூட்டணியில் இருந்து நிதீஷ் குமார் வெளியேற லாலு பிரசாத் யாதவும், அவரது மகனும் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவும்தான் முக்கியமான காரணம். எத்தனையோ அரசியல் குட்டிக்கரணங்கள் போட்டிருந்தாலும் நிதீஷ் குமாரின் நேர்மையையும், எளிமையையும் யாரும் சந்தேகிக்க முடியாது. தேஜஸ்வி யாதவால் தனது அமைச்சரவைக்குக் கெட்ட பெயர் ஏற்படுகிறது என்கிற வருத்தம் நிதீஷ் குமாருக்கு இருந்தது. தன்னை பதவி விலகச் செய்து தனது மகனை முதல்வராக்கும் திட்டம் லாலு பிரசாத் யாதவுக்கு இருப்பதும் நிதீஷ் குமார் அறிந்ததுதான்.
- லாலு பிரசாத் யாதவின் கூட்டணியிலிருந்து வெளியேற தக்கதொரு தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிதீஷ் குமாருக்கு, கர்பூரி தாக்கூருக்கு "பாரத ரத்னா' வழங்கும் மோடி அரசின் முடிவு நல்லதொரு காரணமாக அமைந்துவிட்டது. நிதீஷ் குமாரின் முடிவு சந்தர்ப்பவாதம்தான். ஆனால், அரசியலில் எல்லாமே சந்தர்ப்பவாதம்தானே...
நன்றி: தினமணி (31 – 01 – 2024)