TNPSC Thervupettagam

சந்திரயான் 3 காட்டும் பாதை

August 30 , 2023 501 days 554 0
  • உலகமே வியந்து பார்க்கும், ஒவ்வோர் இந்தியரும் பெருமிதப்படுகிற தருணங்கள் வெகு அரிதாகவே வாய்க்கின்றன. அப்படி ஒரு தருணம் கடந்த ஆகஸ்ட் 23 அன்று அமைந்தது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான் 3 விக்ரம் தரையிறக்கிக் கலம் (லேண்டர்) நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது. இதன் மூலம் நிலவில் கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய நான்காவது நாடு, நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கிய முதல் நாடு ஆகிய சாதனைகளைப் படைத்தது இந்தியா.
  • இந்தியா நிலவுக்கு அனுப்பிய மூன்றாவது விண்கலம் இது. 2008இல் சந்திரயான் 1 அனுப்பப் பட்டது. அதன் மூலம் சந்திரனின் தென்துருவத்தில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பது கண்டறியப்பட்டது. பிறகு 2019ஆம் ஆண்டு சந்திரயான் 2 அனுப்பப்பட்டது. ஆனால், தொழில்நுட்பக் கோளாறுகளால் அதைத் தரையிறக்க இயலவில்லை.
  • அந்த வகையில் 15 ஆண்டுகாலத் தொடர் முயற்சிக்குப் பிறகு, சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது மிக முக்கியமானது. அதுவும் இதுவரை யாரும் தரையிறக்காத தென்துருவத்தில் தரையிறக்கப்பட்டிருக்கிறது.
  • நிலவில் பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் என்றெல்லாம் நாம் கதைவிட்டுக் கொண்டிருந்த போது, 1959ஆம் ஆண்டுசோவியத் ஒன்றியம் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி விட்டது. அடுத்து ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கியும்விட்டது. நீங்கள் விண்கலன்களை இறக்கினால், நாங்கள் மனிதர்களை இறக்குவோம்என்று சூளுரைத்த அமெரிக்கா, 1969ஆம் ஆண்டு மனிதர்களை நிலவில் இறக்கி, வரலாற்றுச் சாதனையைப் படைத்தது.
  • இந்தியாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு விண்வெளி ஆய்வுத் துறையில் கவனம் செலுத்தினார் ஜவாஹர்லால் நேரு. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்டங்களை விரிவாக்கினார் விஞ்ஞானி விக்ரம் சாராபாய். சந்திரயான் 3 விக்ரம் தரையிறக்கிக் கலத்துக்கு இவர் பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் செயற்கைக் கோள்களை அனுப்புவதில் கவனம் செலுத்திய இந்தியா, நிலவு குறித்த ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தது.

சந்திரயான் 3

  • சந்திரயான் 1 மூலம் நிலவின் தென்துருவத்தில் உறைந்த நிலையில் நீர் இருப்பது தெரிய வந்தது. இந்த நீரைப் பயன்படுத்தி குடிநீர், எரிபொருள், ஆக்சிஜன் போன்றவற்றை உருவாக்க இயலுமா என்பதை ஆராய்ச்சி செய்வதற்கு சந்திரயான் 3 சேகரித்துத் தரும் தகவல்கள் முக்கியமானவை.
  • ஒருவேளை இதற்கான வாய்ப்புகள் இருந்தால், எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு இது உதவியாக இருக்கும். மேலும் ஹீலியம் உள்படக் கனிம வளங்கள் நிலவின் மேற்பரப்பில் அதிகம் இருப்பதால், அவற்றை பூமிக்கு எடுத்துவர இயலுமா என்பது குறித்து ஆய்வுகளை நடத்த இயலும். அதனால்தான் விண்வெளி ஆய்வில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்திய ஆய்வை முக்கியமாகக் கருதுகின்றன.
  • முழுக்க முழுக்க இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், மற்ற நாடுகளின் விண்கலங் களைவிடக் குறைவான செலவில் தயாரிக்கப்பட்டது.

ஏன் விண்வெளி ஆய்வு?  

  • பூமி, நிலவு, சூரியன், பிரபஞ்சம் எல்லாம் தோன்றியது எப்படி என்கிற காரணங்களை மனிதர்களின் தேடல்களாலும் ஆராய்ச்சிகளாலும்தான் இன்று ஓரளவு நாம் கண்டறிந்திருக்கிறோம். எனவே, அடிப்படையான ஆராய்ச்சிகள் இன்றியமையாதவை. செயற்கைக் கோள்கள் மூலம்தான் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளைக் கூடத் தொலைக்காட்சிப் பெட்டி மூலம் பார்த்து ரசிக்கிறோம்.
  • கைபேசிகள் மூலம் எங்கோ இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பேசி மகிழ்கிறோம். அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பெற்றிருக்கிறோம். இன்றைய மனிதர்களின் வாழ்க்கையை எளிதாகவும் வசதியாகவும் மாற்றிய மைத்ததில் விண்வெளி ஆய்வுகளின் பங்கு அவ்வளவு முக்கியமானது!
  • 55 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் நிலவு ஆராய்ச்சிகளில் முன்னிலை வகித்தபோது, அமெரிக்காவுக்கு அச்சம் வந்துவிட்டது. உடனே ஓர் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்தது. அன்றைய சோவியத் ரஷ்யா, ‘நிலா மனித குலத்துக்கானதுஎன்று அறிவித்துவிட்டது.
  • அதனால் நிலவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்கிற நிலை இருந்தது. ஆனால், 50 ஆண்டுகளில் அந்த ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. அதனால் இன்று விண்வெளி ஆய்வுகளில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, தனியார்களை நிலவு வணிகத்தில் அனுமதிக்க எண்ணுகிறது.
  • இப்படி நிலவுக்கான வணிக, அரசியல் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவும் இதில் ஈடுபடுவது எதிர்காலத்துக்கு நல்லதாக இருக்கும் என்கிறார்கள். இவை எல்லாம் அரசாங்கங்களின் விஷயம். இது போன்ற விண்வெளி ஆராய்ச்சிகளின் வெற்றியிலிருந்து நமக்கு ஒரு செய்தி இருக்கிறது.
  • பல நூற்றாண்டுகளாக, பல்வேறு நாட்டு அறிஞர்களால் ஒவ்வொரு விஷயமும் கண்டறியப்பட்டு, மேம்படுத்தப்பட்டு, அவற்றை எல்லாம் ஒருங்கிணைத்துப் பயன்படுத்தியதால்தான் நிலவுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்களை அனுப்ப முடிந்திருக்கிறது.
  • எந்த நாடு விண்வெளியில் எதைச் சாதித்தாலும் அது கூட்டுமுயற்சியால் கிடைத்த வெற்றிதான். இந்த அறிவியல் மனப்பான்மையைத்தான் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்த வேறுபாடும் இன்றி, சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கும்போது நம்மால் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories