TNPSC Thervupettagam

சனாதனமும் திராவிடமும்

October 29 , 2019 1854 days 1336 0
  • சனாதன தர்மம் என்பது பாரத தேசத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு வாழ்வியல் முறை. சனாதனம் என்பதற்கு எப்போதும் இருப்பது, நிலைத்திருப்பது, அழிவற்றது என்பதே பொருள். இந்த வாழ்வியல் முறை நிலையானது என்பது அதன் முழுமையான பொருள்.
  • அறிவியல் தொடங்கி தத்துவங்கள், கோட்பாடுகள், நம்பிக்கைகள் வரை அனைத்துத் துறைகளையும் தனக்குள் கொண்டு ஒற்றை ஒளியாய் உயர்ந்து பல்லாயிரம் ஆண்டுகள் இங்கே நிலைத்திருக்கும் தத்துவம் அல்லது வாழ்வியல் அறம்.

தமிழ்ச் சமூகம்

  • சனாதனத்துக்கு எதிரான போர், தமிழ்ச் சமூக மரபிற்கு முற்றிலும் மாறான எதிரி நிலையில் இருப்பது சனாதன தர்மம் என்று தற்போது தமிழகத்தில் பிரசாரம் செய்யப்படுகிறது.
  • இந்தத் தேசத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்தவர்கள், அதனை திராவிட நாகரிகம் என்று நிறுவுகிறார்கள்.
  • கீழடி அகழாய்வும் இன்னும் பல தமிழகத் தொல்லியல் ஆய்வுகளும் நமது தொன்மையைப் பறைசாற்றி வருகின்றன. கலாசாரம், வழிபாடு, அறம் சார்ந்த நம்பிக்கைகள் என்று பாரதம் முழுவதும் இந்த மரபின் தொடர்ச்சி இருப்பதாகக் கருத முடியும். 
  • அதேபோல வேதத்தின் காலத்தைக் கணக்கிடுவதிலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்ற முடிவை அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்.
  • ஒரு தேசத்தில் இரு பெரும் முதுமொழிகள் பயின்று வந்திருக்கின்றன. அந்த மொழி பேசுவோர் தங்களுக்குள் பரிவர்த்தனைகள் செய்துகொண்டு மிகச் சிறப்பு மிக்க ஒரு கலாசாரத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
  • அதன் நீட்சி இன்றளவும் சற்றும் தொய்வின்றி தேசத்தில் நிலைபெற்றிருக்கிறது.

அரை நூற்றாண்டுகள்

  • திராவிடம் என்ற சொல் தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டுக் காலமாக அதிக அளவில் புழங்கி வருகிறது. தமிழ் என்பது மொழி, தமிழர் என்பது அம் மொழியைப் பேசுவோர்,
  • திராவிடம் என்ற கோட்பாடு எப்போது உயிர்பெற்றது? திராவிடம் என்பது தமிழைக் குறிக்கும் சொல் என்கிறார்கள். மனுஸ்மிருதி தொடங்கி பல வடமொழி இலக்கியங்களும் திராவிடர் என்ற சொல்லை தேசத்தின் தென் பகுதியில் வாழ்ந்த மக்களைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தியிருக்கின்றன.
  • ஏழாம் நூற்றாண்டில் தென்னிந்திய மக்களை திராவிடர் என்று குமாரில பட்டர் குறித்தார். 
  • திராவிட சித்தாந்திகள் ஆரம்பத்தில் தென்னிந்திய மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி பேசும் மக்களையும் பிரதேசத்தையும் குறித்தே திராவிட நாடு என்ற கொள்கையை முன்வைத்தனர்.
  • இந்தக்  கொள்கையை தமிழர் அல்லாத பிற மொழி பேசும் தென்னிந்திய மக்கள் ஏற்கவில்லை. அதனால் திராவிடம் என்பது தமிழரை மட்டும் குறிப்பதாக சுருங்கிப் போனது. அதிலும், சில பிரிவினரைப் புறந்தள்ளி இன்னும் சுருக்கப்பட்டது.
  • வடமொழியில் வழங்கும் இந்தச் சொல் வடவரின் ஆதிக்கத்திலிருந்து நம்மவரைப் பாதுகாப்பது என்ற சித்தாந்தத்துக்கான சொல்லாக அமைந்திருப்பதே முரண்.

திராவிடர் 

  • திராவிடர் என்று கூறிக் கொள்வோர் இறை நம்பிக்கை அற்றவர்களாகத் தங்களை முன்னிறுத்துகிறார்கள். இறை நம்பிக்கை என்பது தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு இருந்து வருவது; யாரோ புகுத்தியது அல்ல. தொல்காப்பியம் தொடங்கி சங்க இலக்கியங்களில் பயின்று இறை சிந்தனை இங்கே வேரூன்றியிருக்கிறது. 
  • சனாதனத்துக்கு எதிராக நிற்போர் இரண்டு காரணங்களை முன்வைக்கின்றனர். ஒன்று, சனாதனம்தான் இந்த நாட்டில் ஜாதியப் பாகுபாட்டை ஏற்படுத்தி அதனை ஊக்குவித்தும் வருகிறது. மற்றொன்று, மதத்தின் பெயரால் அரசியல், அதனோடு தொடர்புடையதே ஜாதியம் என்றும் சாதிக்கிறார்கள்.
  • தமிழர்களின் வாழ்வியல் முறையில் இந்த இரு கோட்பாடுகளும் எப்போது தொடங்கின? இலக்கியங்கள் கூறும் சான்றுகளைப் பார்த்தால் ஜாதியம் என்பது அநாதி காலமாக இருந்து வந்திருக்கிறது.
  • பிறப்பால் ஜாதியைக் கூறுவது, அதற்குள் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பித்தது ஆகியவை அனைத்தையும் நாம் தொல்காப்பியம் தொடங்கி இன்று வரை காண்கிறோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற கோட்பாட்டை திருக்குறள் லட்சியமாக வைக்கிறது. அந்த லட்சியம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் எட்டப்படவில்லை.
  • தொல்காப்பியத்தில் திருமணம் செய்து கொள்வதற்கான பொருத்தங்களைப் பற்றிக் கூறும்போது ஒத்த குடிப்பிறப்பும் என்றுதான் தொடங்குகிறது. அதேபோல் பிரிவு பற்றிக் குறிப்பிடும்போது ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன என்கிறது. உயர்ந்தோர் என்ற பாகுபாடு இருக்குமேயானால் அதன் எதிர்ப்பதமும் சமூகத்தில் இருந்துதானே தீரும்.
  • ஜாதி இரண்டொழிய வேறில்லை என்று தமிழ் மூதாட்டி ஒளவையார்  பாடும் ஜாதி என்ற கட்டமைப்பு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என்று அவர் குறிப்பிடும்போது, இந்த இரண்டுமே சமூகப் பாகுபாட்டில் இருந்தன என்பதை அறிந்து கொள்ளலாம்.

சங்க இலக்கியங்கள்

  • சங்க இலக்கியங்களிலும் புலவர் பெருமக்களின் பெயர் தொடங்கி ஜாதி மற்றும் அதற்கான சான்றுகள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றளவும் ஜாதியப் பாகுபாடு தமிழ்ச் சமூகத்தில் புரையோடிப் போன நிலையில் இருக்கிறது. இவை களையப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் உருவாக நமக்குள் இருக்கும் பிணக்குகள் தீரவேண்டும்.
  • ஆனால், இதனை சனாதனம்தான் கற்றுத் தந்தது என்று சாதிப்பதும் ஜாதியம் தமிழரின் மரபு அல்ல என்று வாதிடுவதும் பிரச்னையைத் தீர்ப்பதற்கான வழியாகாது. 
  • அடுத்து, சமயம் என்பது தமிழருக்கு இருந்ததில்லை என்பதாக ஒரு கருத்தைப் பரப்புகிறார்கள். முற்றிலும் தவறான வாதம். கடவுள் வாழ்த்து இல்லாமல் எந்த இலக்கியமும் காணப்படவில்லை.
  • சனாதனம் கூறும் பல தெய்வ வழிபாட்டை தமிழர் மரபும் நிலப் பாகுபாட்டில் ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு தலைமை தெய்வத்தைக் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.
  • நிலத்துக்கான முதற்பொருள் கூறும்போது தெய்வம் எனத் தொடங்குகிறது. முதன்மையானதாக நிற்பது தெய்வம் என்பதை தொல்காப்பியம் ஏற்றுக்கொண்டிருக்கிறது.
  • தமிழர் மரபை என்றைக்கும் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம் கூறும் தெய்வ நம்பிக்கை, ஊழ் பற்றிய கருத்தும் எதன் பாற்பட்டவை? ஊழ் பற்றிய நம்பிக்கையை சங்க இலக்கியங்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், பெருங்காப்பியங்கள் எனஎல்லாவற்றிலும் காண்கிறோம்.
  • மறுபிறப்பு நம்பிக்கை வானியல் சார்ந்த அறிவு, அது சார்ந்த நம்பிக்கைகள் வழிபாட்டு முறைகள் கடவுள் எனும் சொல் ஆகியவை அனைத்தையும் சங்க இலக்கியத்தில் காண்கிறோம்.
  • மறுபிறப்பு மேலுலகம் துறவு ஊழ் நீத்தார் கடன் என்று சனாதன தர்மம் பேசும் பலவற்றையும் திருக்குறள் தெளிவாகப் பேசுகிறது. 

வேதநெறி

  • வேதநெறி என்பதும் தமிழர் நெறி என்பதும் வேறு வேறானவை என்று சாதிக்க முயற்சிக்கும்போது சங்க இலக்கியங்களில் பயின்று வரும் முனிவர்கள், தேவர்கள், வேதம் பற்றிய குறிப்புகள், யாகம், வேள்வி நடத்தும் விதம் போன்ற பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருப்பதை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
  • சனாதனம் என்றும் தமிழர் நெறி என்றும் எதனையும் பகுத்துக் கூறுவதைக் காட்டிலும் இரண்டுக்குமான பொதுமைகளை ஏற்றுக்கொண்டு இரண்டும் நம்முடையதே என ஏற்பதே சரி.
  • வேதம் தமிழ் செய்த நம்மாழ்வார் என்று வைணவமும், வேத நெறி தழைக்க சைவத் துறை விளங்க என்று சைவமும் கூறுவதையும் அதைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்று இன்றுவரை போற்றுவதும் மறுப்பதற்கில்லை.
  • தமிழகத்தில் அமைந்திருக்கும் ஆலயங்களும் சமய இலக்கியங்களும் இந்த மண்ணின் மக்களின் சமயப் பற்றுக்கு எடுத்துக்காட்டு. மத நம்பிக்கைகளிலும் மரபுகளிலும் பொதுமைப் பண்புகள் நிறைந்திருக்கின்றன. சனாதன தர்மம் நான்கு வகை ஜாதியப் பாகுபாடுகளை மட்டுமே சுட்டியிருக்கிறது. ஆனால், இன்றைக்கு ஆயிரக்கணக்கான ஜாதிப் பிரிவுகளும் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற புரையோடிய நிலையும் எங்கிருந்து தோன்றின? 
  • திராவிடர் என்போர் இந்தத் தர்மத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் என்ற கொள்கையை முன் வைத்தவர்கள் யார் என்று பார்த்தால், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த, இந்தியாவைக் கண்கொண்டு பார்த்திராத ஐரோப்பியர்கள் அல்லது மதத்தைப் பரப்புவதற்காகத் தென்னகம் வந்த பாதிரியார்கள்.
  • ஏன் இத்தகைய வேறுபாடுகளை அவர்கள் கற்பித்தார்கள்?   இதற்கான விடையை நடுநிலையோடு நின்று சிந்தித்து, தரவுகளை ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டியது தமிழ்ச் சமுதாயத்தின் பொறுப்பு.  
  • நிலவுடைமைச் சமூகம் என்றைக்குத் தொடங்கியதோ அன்றைக்கே மனிதர்களிடையே இது என்னுடையது என்ற சுயநலம், உயர்வு-தாழ்வு கற்பித்துக் கொள்ளப்பட்டது. இதிலிருந்து மாறி சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் எனும் கருத்தை சனாதன தர்மம், தமிழர் நெறி ஆகிய இரண்டும் போதிக்கின்றன. லோகா சமஸ்தா சுகினோ பவந்து சர்வே ஜனா சுகினோ பவந்து என்கிறது வடமொழி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றும் அறியேன் 
  • பராபரமே (தாயுமானவர்) என்கிறது தமிழ் நெறி. பாரதத்தில் இடத்திற்கேற்ப மொழி மாறுபடலாம்; அறம் மாறுபடுவதில்லை.

நன்றி: தினமணி (29-10-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories