- பாபா சாஹேப் அம்பேத்கர் ‘சாதியை ஒழிப்பது எப்படி?’ என்ற தன்னுடைய நூலில் இந்து மதக் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்; “இப்படிப்பட்ட ஒரு மதம் அழிக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்ல எனக்குத் தயக்கமே இல்லை, இந்த மதத்தை அழிப்பதில் ஈடுபடுவது எந்த வகையிலும் மதத்துக்கு எதிரான செயலாகிவிடாது” என்று அவர் எழுதியிருக்கிறார்.
- அது இந்து மதத்தை ஒழிக்க விடுக்கப்பட்ட அழைப்பா – இல்லை; எந்தவித சிந்தனையும் இன்றி பின்பற்றப்படும் இந்து மதப் பழக்கங்கள் தொடர்பாக அப்படி எழுதினார்; அதிலும், ‘மிகச் சிலர்தான்’ அந்த மதத்தைக் கட்டுப்படுத்துவர்களாக இருக்கின்றனர், அவர்களும் சாதி வெறியில் ஊறியவர்களாக இருக்கிறார்கள் என்பதால் அப்படிக் குறிப்பிட்டார். இந்து மதத்தை எப்படிச் சீர்திருத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.
- பிராமண சமூகத்தைச் சேர்ந்த பலரும் ‘சாதி’ என்பது இயற்கையிலேயே உண்டானது, அவரவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டது, இந்து மதத்தின் உள்ளார்ந்த அம்சம் என்று இன்னமும் நம்புகின்றனர். அவர்களில் சற்றே முற்போக்கானவர்கள், சாதியை அடிப்படையாக வைத்து நடத்தும் வன்செயல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்கின்றனர், சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று அவர்களும் கோருவதில்லை.
- ‘வர்ணம்’ – ‘ஜாதி’ என்பதற்குள்ள வேறுபாடுகளை விளக்குவதாக நினைத்து, கடும் சிக்கலில் அவர்களே ஆழ்ந்துபோகின்றனர். அவர்கள் அனைவருமே இந்து மதம் தொடர்பாக அம்பேத்கர் எழுதிய அனைத்தையும், இந்து மதத்தின் மீதான தாக்குதல்களாகவே – கண்டனங்களாகவே பார்க்கின்றனர்.
- ஒரு சிந்தனை அல்லது கருத்தாக்கத்தின் மீது முன்வைக்கப்படும் ஆழமான விமர்சனங்கள் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறது என்பது அது வைக்கப்படும் சூழ்நிலை, இடம், விமர்சிக்கும் நேரம் ஆகியவற்றையும் பொருத்தது. ‘சனாதனம்’ குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்காக அவரைக் கண்டிக்கும் பலரும், ‘நான் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன்’ என்று அம்பேத்கர் கூறியதை இந்தத் தருணத்தில் பொருத்தமில்லாமல் சுட்டிக்காட்டுகின்றனர்.
- இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர் என்று அம்பேத்கர் தன்னை எப்போதும் கூறிக்கொண்டதில்லை. பிறப்பின் காரணமாக - இந்து மதத்தின் அருவருப்பான சமூகப் படிநிலையில் - ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவராகிவிட்டார். இறப்பதற்கு முன்னால் அவர் ‘இந்து’ என்ற அடையாளத்தையும் துறந்துவிட்டார்.
- சனாதனம் = இந்து மதம்
- ‘சனாதன தர்மம்’ என்றால் அது ‘இந்து மதம்தான்’ என இன்று பார்க்கப்படுகிறது; இந்து மதத்தின் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும், மெய்யியல் பின்பற்றல்களும் ‘சனாதனம்’ என்று பொருள்கொள்ளப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால், இஸ்லாமியர்கள் இந்த நாட்டுக்குள் வருவதற்கு முன்னால் இங்கு பின்பற்றப்பட்டுவந்த கடவுள் வழிபாடு – இதர நடைமுறைகள் அனைத்துமே இந்து மதத்துடையதாகப் பார்க்கப்படுகிறது. ‘சனாதனம்’ என்றால் இதுதான் என்று மேலோட்டமாகப் பார்க்கும் வழக்கம் புதிது.
- இந்த எண்ணத்தைப் பரப்பியவர்கள் பிராமணர்கள் என்பதையும் மறுக்க முடியாது. சனாதனம், இந்து என்பதற்கான பொருள்கள் ஒன்றல்ல, பல; இவற்றைச் சேர்ப்பதும், கழிப்பதும், வளைப்பதும், மெருகூட்டுவதும், தலைகீழாகப் புரட்டுவதும் அவர்களுக்குக் கடினமான செயல் அல்ல. அந்த வார்த்தைக்குப் பொருள் என்ன என்பது இடம், காலம், பின்னணி, காரணம் ஆகியவற்றைப் பொருத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது.
- நான் ஒரு பிராமண வீட்டில் பிறந்து வளர்ந்தேன். மதம் தொடர்பான சடங்குகள் அங்கே நடைபெறும். வேதங்களிலிருந்தும் உபநிஷத்துகளிலிருந்தும் எடுக்கப்பட்ட சுலோகங்கள் எனக்குக் கற்றுத்தரப்பட்டன. புராணங்களிலிருந்தும் காப்பியங்களிலிருந்தும் பல கதைகளைக் கூறியே என்னை வளர்த்தனர். ‘இந்த நம்பிக்கைகள்தான் சனாதனம்’ என்று என்னிடம் ஒருபோதும் வீட்டில் கூறியதில்லை. நான் அவற்றை ‘இந்து மதம்’ சார்ந்ததாகவே அறிந்திருந்தேன். இன்னும் சிலர் அவை இந்துத்துவம்கூட அல்ல - பிராமணத்துவம் என்றும் சொல்லக்கூடும். அப்படிச் சொல்வது சரியாகக்கூட இருக்கும்.
- ஆன்மிக உரையாடல்களின்போதும் மெய்யியல் வாத – பிரதிவாதங்களின்போதும் துறவிகளும் பண்டிதர்களும்தான் ‘சனாதன தர்மம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அல்லது மதம் தொடர்பான சடங்குகளின்போது, அவையெல்லாம் ‘சனாதனத்தின் அம்சங்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கக்கூடும். இவர்களும் தனிப்பட்ட முறையில் பிராமண சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கு அணுக்கமானவர்கள். பக்தியில் தோய்ந்த பிராமணர் அல்லாதவர்கள் தங்களைச் ‘சனாதனிகள்’ என்று அழைத்துக்கொள்வதில்லை, அவர்கள் மாரியம்மன், காமாட்சி, சிவன், முருகன் மற்றும் இதர தேவதைகளை வணங்குகிறவர்கள். இந்து மதத்தின் ஓரங்கமாகத் தங்களைக் கருதுவார்கள். இந்துத்துவம்தான் சனாதனம் என்பது மோசடியானது.
- நூறாண்டுகளாக - அல்லது கடந்த சில பத்தாண்டுகளாக தீவிர இந்துத்துவர்கள்தான் ‘சனாதன தர்மம்’ என்ற வார்த்தையை ஒரு ஆயுதமாகவே மாற்றிவிட்டனர். இந்த வார்த்தைக்கு அவர்கள் தரும் விளக்கம்தான் காலத்தைப் பின்னோக்கி நகர்த்திவிட்டது. ‘சனாதனம் என்றால் இரக்கமுள்ளது, அனைத்துத் தரப்பையும் அரவணைப்பது, தன்னுள் ஆழ்ந்து இறையருள் பெற நினைப்பது’ என்ற பொருளில் அவர்கள் அந்த வார்த்தையைப் பயன்படுத்தவில்லை; ‘மற்றெல்லா இறை நம்பிக்கையைவிட உயர்ந்தது, மிகவும் நுட்பமானது, காலத்தால் முற்பட்டது, மற்றெந்த நம்பிக்கையும் இதற்கு ஈடாகாது, இதனிடம் மண்டியிட்டு நிற்க வேண்டியன’ என்ற பொருளிலேயே பயன்படுத்துகின்றனர்.
- சனாதனம் – இந்துத்துவம் என்ற இரண்டு வார்த்தையையும் இந்து மத வலதுசாரிகள் இணைத்துவிட்டனர். இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தும் பலரும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பட்டியல் இனத்தவர்களைத் தாக்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களுடைய தாக்குதலால் ஏற்படும் அவப்பெயர் அவர்களுக்கு மட்டும் போய்ச் சேர்வதில்லை. அரசியல், மத, ஆன்மிக, சமூக மேடைகளில் இருந்துகொண்டு மதவெறியைத் தூண்டுகிறவர்கள் அதன் விளைவுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். சனாதன தர்மம் என்ற ஆயுதம், மக்களை பிளவுபடுத்திப் பார்ப்பதாக மாறிவருகிறது.
சாதியத்துக்கு அங்கீகாரம்
- தங்களுடைய சாதி அமைப்புக்கு அங்கீகாரம் தர மறுப்பவர்கள்கூட, சனாதன தர்மம் என்ற வார்த்தை சரிதான் என்று வாதிடுகின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசினார்: “நம்முடைய நாட்டில் சமூக அசமத்துவம் நிலவுகிறது என்ற நெடிய வரலாறு நமக்கிருக்கிறது. நம்முடைய சகோதரர்களையே நாம் சமூக அமைப்பில் பிற்படுத்தப்பட்டவர்களாக தாழ்த்தி வைத்திருக்கிறோம்; அவர்களுடைய வாழ்க்கைத் தரம் பிராணிகளைவிட மோசமானபோதும் நாம் கவலைப்படவில்லை. இது இரண்டாயிரம் ஆண்டுகளாகவே தொடர்ந்துவந்திருக்கிறது. இந்தச் சாதிப் பாகுபாடு இருக்கும் வரை இடஒதுக்கீடு என்ற செயல்பாடும் தொடரும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். சாதிப் பிரிவினை குறித்து, இடஒதுக்கீடு என்ற சமூகநீதிக் கோட்பாட்டுக்கு மட்டும் தொடர்புபடுத்திப் பேசியிருக்கிறார். சாதி என்பது தொடரும் தீமை, அதை ஒழித்தே ஆக வேண்டும் என்று அவர் பேசவில்லை.
- சாதி அடுக்கில் மேல்நிலையில் இருக்கும் ஒவ்வொரு இந்துவும் இந்த சாதிப் பெருமை தனக்கு ஊட்டப்பட்டது என்பதை உணர்ந்து அதைத் தூக்கியெறிந்து மாற வேண்டும். வர்ணாசிரமம் சரிதான் என்று இன்றும் நியாயப்படுத்துகிற மடாதிபதிகளும் ஆன்மிகப் பேச்சாளர்களும் இருக்கின்றனர். இந்தச் சாதிப் பிரிவினை எப்படி வந்தது, அதை வலியுறுத்தும் மத சாஸ்திரங்கள் என்ன, எந்தச் சூழ்நிலையில் அவை எழுதப்பட்டன, சாதி அடிப்படையில் சக மனிதர்களை இழிவுபடுத்தும் இந்த வழக்கம் எப்படி வந்தது, ஏட்டில் இருந்த இவை நடைமுறைக்கு எப்படி வந்தன என்றெல்லாம் நடுநிலையோடு ஆராய்ந்து, களைய வேண்டும்.
- பல ஆன்மிக உபன்யாசகர்கள் சாதிக்குரிய உரிமைகளோடு வலம்வரும் சிலரை மரியாதையுடன் நடத்துகின்றனர், மதவெறுப்பு கூடாது என்று கூறி அவர்களை மனம் மாற்றுவதில்லை. சனாதன தர்மம் என்பது மனிதர்களை மட்டுமல்ல பிராணிகளை, பறவைகளை, தாவரங்களைக்கூட அரவணைப்பது என்று கூறுகிறவர்கள் சாதியடுக்கில் மேலே இருப்பவர்கள் கீழே இருப்பவர்களை மனிதாபிமானமற்று நடத்தும்போதும் தாக்கும் போதும் அங்கு சென்று அவர்களை நல்வழிப்படுத்துவதில்லை, ஒதுங்கியிருந்துவிடுகின்றனர். தங்களுடைய சனாதன தர்மத்தைப் பின்பற்றும் சகோதரர்களின் தவறான செயலுக்கு அவர்கள் எந்தவிதப் பொறுப்பையும் எடுத்துக்கொள்வதில்லை.
- சனாதன தர்மத்தைக் காக்க விரும்புகிறவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், இந்து மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்தான் உள்ளிருந்துகொண்டு அதற்கு ஆழ்ந்தத்தன்மையை அளிக்க வேண்டும். அம்பேத்கர் கூறியபடி இந்துக்கள்தான் தங்களை ஆழ்ந்த மறுபரிசீலனைக்கு உள்படுத்திக்கொள்ள வேண்டும். “எதுவுமே நிரந்தரமானவை அல்ல, எதுவுமே காலாகாலத்துக்கும் அப்படியே மாறாததும் அல்ல, எதுவுமே சனாதனமும் அல்ல, எல்லாமே மாறும் தன்மையுடையவைதான், தனிமனிதருக்கு மட்டுமல்ல – சமூகத்துக்கும் மாற்றம் அவசியம் வேண்டும்” என்று அம்பேத்கர் கூறியதை இந்துக்கள் சிந்திக்க வேண்டும். மேல்பூச்சு ஒப்பனையை மாற்றுவது குறித்து அம்பேத்கர் கூறவில்லை, மெய்யியல் கருத்துகள் அடிப்படையிலேயே பெரிய மாறுதல் வேண்டும் என்றார்.
நன்றி: அருஞ்சொல் (27 – 09 – 2023)