சமத்துவ அரசியலும் தேச வளர்ச்சியும்
- ஒரு நாட்டின் வளர்ச்சி அல்லது வீழ்ச்சிக்குக் காரணம் என்ன என்பதை 2024ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற டேரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் கண்டறிந்தனர். இதற்கான ஆய்வை ஐரோப்பிய நாடுகளின் காலனிகளில் அவர்கள் நடத்தினர்.
- அனைத்துத் தரப்பினரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகள் (inclusive Socio-political, economic institutions), ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. சுரண்டலை ஊக்குவிக்கும் அமைப்புகள் (Extractive Institutions) நாட்டின் ஏற்றத்தாழ்வுகளை நிரந்தரமாக அதிகரிக்கின்றன. சமூக, அரசியல் மாற்றமின்மைக் கொள்கை சுரண்டலை ஊக்கப்படுத்துகிறது என்பதை ஆய்வு மூலம் அவர்கள் உறுதிப்படுத்தினர்.
- இதே கருத்தை உலக வங்கியும் உறுதிசெய்கிறது. நாட்டின் தனிமனித வருமானத்தை லஞ்சக் கட்டுப்பாடு, மக்களின் குரலுக்குச் செவிசாய்க்கும் அரசு, அரசின் செயல்திறன், நிலையான அரசியல்தன்மை, வன்முறையற்ற சமூகம், சீரான சட்டம் ஒழுங்கு போன்ற காரணிகள் தீர்மானிக்கின்றன.
- சுரண்டல் அமைப்புகள் மக்களை ஏழைகளாக்கி, வளங்களைச் சுரண்டி, வளர்ச்சியைத் தடுக்கின்றன. மேட்டிமைக் குடிகள் தாங்கள் தொடர்ந்து வளம்பெற இந்த அமைப்புகளைக் கட்டமைத்துள்ளனர். அனைவருக்கும் பொருளாதார வாய்ப்புகளை வழங்கும் அமைப்பு, ஜனநாயகபூர்வமான அரசு, அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை உறுதிசெய்யும் அமைப்புகள் எப்படி உருவாகி வந்தன, அவை உலகின் போக்கில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தின என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அடிமை முறை ஒழிந்தது:
- ஐரோப்பாவில், 14ஆம் நூற்றாண்டு வரை நிலப்பிரபுத்துவம் இருந்தது. முதலாளிகளின் கட்டுப்பாட்டில் தொழிலாளிகள் இருந்தனர். கூலி குறைவு. அதன் மீதும் வரி விதிக்கப்பட்டது. தொழிலாளிகள் நிலங்களைவிட்டு வெளியே செல்ல முடியாது. அது ஒரு சுரண்டும் பொருளாதாரச் சமூகமாக இருந்தது. பிளேக் கொள்ளை நோய் (Bubonic Plague) 1346இல் ஐரோப்பாவை அழித்தது. ஏராளமான தொழிலாளிகள் இறந்தனர். தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. தொழிலாளர்கள் கூலி அதிகம் கேட்டதால் வேறுவழியின்றிக் கூலி உயர்த்தப்பட்டது. பிரிட்டன், மேற்கு ஐரோப்பாவில் அடிமை முறைக்குக் கொள்ளை நோய் முடிவுகட்டியது.
- இதன் விளைவாக, அனைவருக்குமான பொருளாதார அமைப்பு உருவானது. மேலும், முதலீடுகளும் வர்த்தகமும் கண்டுபிடிப்புகளும் ஊக்குவிக்கப்பட்டன. சந்தைப் பொருளாதாரம் வளர்ந்தது. புதிய சிந்தனைகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் காப்புரிமை வழங்கப்பட்டது. சொத்துரிமை வழங்கப்பட்டது.
- சட்டம் ஒழுங்கு பேணப்பட்டது. கட்டுப்பாடற்ற வரி (Arbitrary taxation) விதிப்பு நிறுத்தப்பட்டது. ஏகாதிபத்தியம் (Monopoly) நிறுத்தப்பட்டது. சாலைகள், கால்வாய்கள், ரயில்வே போன்ற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், தொழில் வளர்ச்சிகள் ஏற்பட்டன. தொழில்நுட்பம் வளர்ந்தது. தொழில் புரட்சியை நோக்கி நகர்ந்தது. பழமையிலிருந்து விடுதலை கிடைத்தது.
முடிவுக்கு வந்த மன்னராட்சி:
- 1688இல் பிரிட்டனில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. தேவாலயங்கள், அரசர், அமைச்சர்கள், மேட்டிமைக் குடிகளின் அதிகாரம் குறைக்கப்பட்டது. அதிகாரம் பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அரசு தனித்து இயங்கியது. மக்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட்டது. அரசின் நடவடிக்கையில் மக்கள் தலையிட முடிந்தது.
- இது சீர்மிகு புரட்சி (Glorious Revolution) ஆகும். இந்தப் புரட்சியானது பன்முகத்தன்மை வாய்ந்த சமூகத்தை (Pluralistic society) கட்டமைத்தது. இது உலகில் முதன்முதலில் அனைவருக்குமான அரசியல் நிறுவனத்தை (Inclusive Political Institutions) உருவாக்கியது. சொத்துரிமை, நிதிச் சந்தை, வெளிநாட்டு வர்த்தகம், மேலும் தொழில் துறைக்கான தடைகளை இந்தச் சீர்மிகு புரட்சி நீக்கியது. அது பொருளாதாரத் தேவைகளையும், சமூகத்தின் குறிக்கோள்களையும் எட்டுவதாக அமைந்தது.
மாற்றத்தை ஏற்படுத்திய புரட்சி:
- 1789ஆம் ஆண்டுவரை ஃபிரான்ஸ் சர்வாதிகார மன்னரின் கீழ், பிரபுக்கள் (The Aristocrats), மதகுருமார்கள் (The clergy), மற்றவர்கள்/விவசாயிகள் (The Peasants) என மூன்று பிரிவுகள் இருந்தன. ஒவ்வொருவருக்கும் தனித்தனிச் சட்டங்கள். பிரபுக்கள், மதகுருமாரிடம் அதிக நிலம் இருந்தது. இவர்கள் வரி கட்டத் தேவையில்லை. விவசாயிகள் அதிக வரி கட்ட வேண்டும். மன்னர், பிரபுக்கள், மதகுருமார்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தனர்.
- அரசியல் அதிகாரம் அவர்களின் கையில் இருந்தது. கிராமங்களில் வாழ்க்கை இன்னும் மோசமாக இருந்தது. அடிமைகள் உற்பத்தியைப் பெருக்கினர். பிரெஞ்சு புரட்சி ஏற்பட்ட பின்னர் புதிய அரசமைப்புச் சட்டம் உருவானது. தேசிய சட்டமன்றம், நிலப் பிரபுத்துவ (feudal system) முறையை ஒழித்தது. சொத்துள்ளவர்களிடமிருந்து வரி வசூல் செய்யப்பட்டது.
- பிரபுக்களும் மதகுருமார்களும் வரி செலுத்தினர். இப்புரட்சி ஐரோப்பா எங்கும் பரவியது. அது சர்வாதிகாரத்தை ஒழித்தது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றானது. நிலப்பிரபுத்துவம், உற்பத்திச் சங்கங்கள் ஒழிக்கப்பட்டன. 1793இல் ராணுவத்தில் கட்டாய வேலைக்கு மக்கள் அமர்த்தப்பட்டனர்.
- பிரெஞ்சு ராணுவம் பெரிதாக வளர்ந்தது. மேற்கு ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரியாவைக் கைப்பற்றியது. அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் பொருளாதார நிறுவனங்கள் ஐரோப்பாவில் உருவாகின. பிரெஞ்சு புரட்சி எட்டாத ஹங்கேரி, ரஷ்யா, போலந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் பெரும்பாலும் தேக்க நிலையில் இருந்தன.
- 17ஆம் நூற்றாண்டு வரை ஜப்பானில் மன்னராட்சி-அடிமை முறை இருந்தது. 1853இல் மேத்யூ சி பெரி அமெரிக்கப் போர்க் கப்பல்களைக் கொண்டுவந்து எடோ (டோக்கியோ) துறைமுகத்தின் முன்பு வர்த்தகத்துக்காகப் போரிட்டார். டொங்குவா அரசாட்சிக்கு எதிராக, மெஜ்ஜி அரசியல் புரட்சி ஏற்பட்டது. அது அனைவரையும் உள்ளடக்கிய அரசமைப்பை உருவாக்கியது. அது பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்தியது. அதன் மூலம் ஜப்பான் பெரும் வளர்ச்சியை அடைந்தது.
- 1933இல் பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபர் ஆனார். பொருளாதாரம் பெரும் மந்த நிலையில் (Great Depression) இருந்தது. 25% தொழிலாளிகள் வேலையில்லாமலும் வறுமையிலும் இருந்தனர். தொழில் உற்பத்தி இல்லை. முதலீடுகள் இல்லை. அப்போது புதிய ஒப்பந்தத்தை ரூஸ்வெல்ட் கொண்டுவந்தார்.
- தேசியத் தொழில் துறை மீட்புச் சட்டம் கொண்டுவந்தார். பொதுப்பணித் துறை மாபெரும் சாலைகளை அமைத்தது. சமூகப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. குழந்தைகள், வேலையில்லாதவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலன்கள் பாதுகாக்கப்பட்டன. தேசியத் தொழிலாளிகள் உறவு சட்டம், தொழிலாளர் சங்கங்களை அமைக்கவும் அவர்கள் நலன்களைப் பேசவும் வழிவகை செய்தது.
நாடுகள் பின்தங்கக் காரணம்:
- புவியியல் அமைப்பு, பண்பாடு, சுயநலநோக்கு கொண்ட தலைவர்கள் மட்டுமே நாடுகளின் வளர்ச்சியின்மைக்குக் காரணமாக இருப்பதில்லை. சரியாகக் கட்டமைக்கப்படாத சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளும் காரணமாக உள்ளன. அமெரிக்காவில் ஏழ்மையானவர்களுக்கும் சுகாதாரம், கல்வி, பொதுச்சேவைகள் சமமாகக் கிடைக்கின்றன. ஆனால், மெக்ஸிகோவில் அவ்வாறு இல்லை.
- இரண்டாம் உலகப் போருக்கு முன்பு வட கொரியாவிலும் தென் கொரியாவிலும் பொருளாதாரமும் சமூகக் கட்டமைப்பும் ஒன்றாக இருந்தன. இன்றைக்கு வட கொரியாவின் பின்தங்கிய நிலைக்குச் சமமற்ற அரசியல் பொருளாதார அமைப்புகளே காரணம்.
- தொழில் புரட்சியினால், ஏற்பட்ட நன்மைகளால் இந்தியா அதிக அளவில் பயனடையவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்திய சாதிய முறை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு உதவவில்லை என்றும் சாதிய அடுக்குமுறை நாட்டின் வளர்ச்சியை மட்டுப்படுத்தியதோடு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு உட்பட பல்வேறு தளங்களிலும் தேக்கநிலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய அரசியல் பொருளாதார நிறுவனங்கள் உள்ள நாடுகளில் சமூகம் சமவளர்ச்சியடைகிறது.
- அவை புதிய தொழில்நுட்பத்துக்கான முதலீடுகள், பொருளாதார, அரசியல் வளர்ச்சிக்கான திறன்களை மேம்படுத்துதல் போன்றவற்றுக்கு வாய்ப்புகளை வழங்குகின்றன. மேலும் அரசியல் அதிகாரப் பகிர்வு பன்மைத்துவத்தை வளர்க்கிறது. இது சட்டம் ஒழுங்கு, சொத்துரிமை, சந்தைப் பொருளாதாரத்துக்குச் சம வாய்ப்பை வழங்குகிறது. இந்த வரலாற்றை உணர்ந்துகொண்டவர்கள் சமத்துவ அரசியலின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வார்கள்!
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2025)