- ராமலிங்கம் எனும் வள்ளலார் பிறந்து 200 ஆண்டுகள் (1823-2023) நிறைவடைந்துவிட்டன. வள்ளலார் பிறந்து செயலாற்றிய பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழ்ச் சமூகம், பல்வேறு தளங்களிலும் மாற்றத்தை எதிர்கொண்ட காலப்பகுதி ஆகும். இன்றைய நவீனத் தமிழரசியலின் தோற்றுவாய்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றியவைதாம். சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்திய அந்நூற்றாண்டில், சமய வாழ்விலிருந்து சமூக மாற்றத்துக்கான நுழைவாயிலைத் திறந்துவைத்தவர் வள்ளலார்.
சமயமும் சடங்கும்
- இந்திய நெறியின் சமயக் கண்ணோட்டம் மனித வாழ்வின் அறவியல் பரிமாணத்தைத் தொடக்கக் காலத்தில் கொண்டிருந்தது. இயற்கையின் புதிர்களோடு தொடர்புடைய கடவுளர்கள் சமூக வாழ்வினை நிர்மாணிக்கும் நிலையிலிருந்து, சடங்குகளின் மேலாதிக்கம் தலைதூக்கத் தொடங்கிய காலப்பகுதியில், அதன் அறவியல் பரிமாணத்தை இழந்துவிட்டது. சடங்குகள் எனப்படுபவை கெட்டிதட்டிப்போன சமூக ஏற்றத்தாழ்வுகளைப் பாதுகாக்கும் மரபுகளாக, ஆதிக்க நடைமுறைகளாக மாறிவிட்டன. மனிதனுக்கான சமயம் எனும் நிலையிலிருந்து, சமயத்துக்காக மனிதன் என்பதாகக் கீழிறங்கிவிட்டது.
வள்ளலாரும் சன்மார்க்கமும்
- வள்ளலார் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிரிட்டன் காலனியம் இந்நூற்றாண்டில் ஏற்படுத்திய சமூக மாறுதல்களில் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளானவற்றில் இந்திய சமயநெறிகளும் அதன் மரபுகளும் முதன்மையானவை. அந்நெருக்கடியின் துணை விளைவாகவும் எதிர் விளைவாகவும் தோன்றியவைதான் இந்திய சமயச் சீர்திருத்த இயக்கங்கள். ஆரிய சமாஜம் கண்ட தயானந்த சரஸ்வதி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோர் அதன் முகங்கள்.
- இத்தகைய எதிர் விளைவுகளிலிருந்து தோன்றாமல், சமய வாழ்வின் நீண்ட வரலாற்றில் அந்நியமாகிப் போயிருந்த அறவியல் பரிமாணத்தை மீண்டும் நிலைநிறுத்தி, சமய வாழ்விலும் சமூக வாழ்விலும் தமிழ்ச் சமூகத்தை மாறுதலுக்கான பாதையில் கொண்டுவந்து நிறுத்திய தமிழின் அசல் சிந்தனையாளர் வள்ளலார்தான்.
- வள்ளலார் சைவ சமய நெறிகளில் ஆழ்ந்த ஈடுபாட்டைத் தனது பதின்ம வயதுகளில் தொடங்கியவர். அதன் அனைத்துப் பரிணாமங்களையும் உள்வாங்கியவர்; தனது இறுதி ஆண்டுகளில் சைவம், வைணவம் முதலிய எந்தச் சமயங்களிலும் பற்றுவைக்க வேண்டாம் என்றார். சாதி சமய வழக்கெல்லாம் பொய்யென்றார், சாத்திரம், ஆச்சாரம் அனைத்தும் பிள்ளை விளையாட்டு என்று ஒதுக்கித் தள்ளினார். சடங்குகளின் பெயரால் மனிதர்களிடமும் இயற்கையிடமும் அந்நியப்பட்டுப்போன இறைவனைத் தன்னைப் போல் பிறரைக் காணும் ‘சன்மார்க்க’ நெறியில் காண உலகத்தார் அனைவரையும் அழைத்தார்.
- ஓங்கி உயர்ந்திருந்த கோயில்களும், நீண்ட நிலங்களைச் சொத்தாகக் கொண்டிருந்த சைவ மடங்களும் சடங்குகளைப் பாதுகாக்கும் ஆதிக்க நிறுவனங்களாய் மாறியிருந்ததைக் கண்டு மனம் நொந்தார். சாத்திரங்கள், சடங்குகள், மந்திரங்கள் எல்லாம் மறைத்துவைத்திருந்த இறைவனை எளிய ‘அருட்பெருஞ்ஜோதி’யில் கண்டடைந்தார்.
- சாதி, சமய, பால், இன வேறுபாடுகள் களைந்து மக்கள் அனைவரும் தன்னைப் போல் பிறரைப் பாவிக்கும் ஜீவ ஒழுக்கத்தையும், உலக உயிர்கள் அனைத்தையும் ஒன்றெனப் பாவிக்கும் ஆன்ம ஒழுக்கத்தையும் கண்டார். ஒத்தாரும் உயர்ந்தவரும் தாழ்ந்தவரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும் எனும் சமத்துவ வேண்டுதலை உலகத்தார் முன்வைத்தார்.
சன்மார்க்கமும் சோஷலிஸமும்
- பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பா கார்ல் மார்க்ஸ்-எங்கெல்ஸின் வழி அறிவியல் வழிப்பட்ட சோஷலிஸச் சிந்தனையை உலகுக்குப் பிரகடனம் செய்தபோது, உலக உயிர்கள் அனைத்திடமும் சமத்துவத்தை வலியுறுத்தும் அறவியல் சோஷலிஸம் வள்ளலார் வழி தமிழுக்கு வந்தது. மார்க்ஸியத்தின் மொழியில் சொல்வதானால், வள்ளலாரை ஒரு கற்பனாவாத சோஷலிஸ்டாக வரையறுக்க முடியும்.
- பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்திய வரலாறு என்பது பஞ்சங்களின் நூற்றாண்டாக இருந்தது. ஏறத்தாழ முப்பது பஞ்சங்கள் தாக்கிய அந்நூற்றாண்டில், மனிதர்களை வாட்டி வதைத்த பசியினைப் பிணியெனக் கண்டு, அதனைக் களைவதற்காக வள்ளலார் உருவாக்கிய, ‘சத்திய தரும சாலை’ அவரது சமத்துவ நோக்கத்தின் உயரிய நிறுவனமாகும். தொழிலாளர்களுக்காகத் தனது சொத்துகள் அனைத்தையும் இழந்து சோஷலிஸ முயற்சிகளில் ஈடுபட்ட ராபர்ட் ஓவன் (1771-1858) என்பாரை, ‘மனிதர்களின் பிறவித் தலைவர்களுள் ஒருவர்’ என எங்கெல்ஸ் குறிப்பிட்டார்; அத்தகைய பொருத்தப்பாட்டுக்கு உரியவர்தான் வள்ளலார்.
யாருக்கானவர் வள்ளலார்
- ஆதிக்கமும் வன்முறையும் தன்னலமும் பொருளாதிக்க வெறியும் செல்வாக்கு செலுத்தும் மானுட குலத்தின் வரலாற்றில், சமத்துவத்துக்கான குரல்கள் அவ்வப்போதுதான் தோன்றுகின்றன. தமிழ்ச் சமூக வரலாற்றில் அத்தகைய சமத்துவக் குரலின் நவீன வடிவமாக வெளிப்பட்டவர் வள்ளலார். இன்றைக்கும் அவரை எவ்வாறு மதிப்பிடுவது எனும் சர்ச்சைகள் தொடர்கின்றன.
- அவர் வாழ்ந்த காலத்திலும் அவரது மறைவுக்குப் பின்பும்கூடப் பலதரப்பட்ட விமர்சனங்கள் அவரைத் தொடர்ந்தன. மரபைக் காப்பாற்றத் துடிக்கும் வைதிகர்களும், அதை மறுக்கும் பகுத்தறிவாளர்களும் அவருக்கு உரிமை கோருகின்றனர். உண்மையில், வள்ளலார் யாருக்கானவர் என நோக்கும்போது யாரெல்லாம் ‘சமத்துவ’த்துக்கு விழைகிறார்களோ, யாரெல்லாம் பிற உயிர்களுக்காக இரங்கும் உயிர்ம நேயத்துக்கு விழைகிறார்களோ அவர்களுக்கு உரியவராகிறார்.
- அளவுகடந்த பொருளாதிக்கமும், சாதி, மதக் காழ்ப்புகளும் செல்வாக்கு செலுத்தும் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு மனித வாழ்வை மட்டுமல்ல... பூகோளத்தின் இருப்பையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. ஆதிக்கம், போட்டி, சகிப்பின்மை ஆகியவை மனித இனத்தின் அறவியல் இருப்பை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருக்கும் சூழலில், வள்ளலாரை மீள வாசிப்பதும் அவருடைய சன்மார்க்கத்தை நேர்மையாகப் பரிசீலிப்பதும் நமது கடமையாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (05 - 10 – 2023)