- இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நம் அனைவருக்கும் உணவுப் பழக்கங்கள், ஆரோக்கியம், உடல் செயல்பாடு தொடர்பான ஒரு பதற்றம் வந்திருக்கிறது.
- “நிமிடத்துக்கு இருபது முறை இருக்க வேண்டிய சுவாச எண்ணிக்கை எனக்கு இருபத்தைந்து முறை இருக்கிறது... இது நார்மலா டாக்டர்?” என்ற சந்தேகங்கள் முளைத்திருக்கின்றன.
- ‘ஆரோக்கியமாக இருப்பது எப்படி?’ என்பதை அவர்கள் தங்களுக்கு வரும் தகவல்களைக் கொண்டு, சோதனை செய்து பார்க்கிறார்கள்.
- உடல் ஆரோக்கியத்தின் மீது அத்தனை கவனமாக இருக்கும் மக்கள், இதில் சிறிதளவேனும்கூட மன ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனையானது.
- உலக சுகாதார நிறுவனத்தின் வரையறைப்படி ஆரோக்கியம் என்றால், அது ஒருங்கிணைந்த உடல், மனம் மற்றும் சமூக ஆரோக்கியமே! ஆனால், நாம் உடல் ஆரோக்கியத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு மற்ற இரண்டையும் புறக்கணிக்கிறோம்.
- உண்மையில், உள்ளமும் சமூகமும் ஆரோக்கியமாக இல்லாமல் உடல் ஆரோக்கியம் சாத்தியம் இல்லை.
- 2000-ல் ஐநா சபையின் ‘நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளில்’ பசி, வறுமை ஒழிப்பு, குழந்தைகள் இறப்பைத் தடுத்தல் ஆகியவற்றோடு மனநலத்தை மேம்படுத்தலும் இடம் பெற்றிருந்தது.
- ஏனென்றால், புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவும், மாறிவரும் வாழ்க்கை முறைகளின் காரணமாகவும் மனநலச் சீர்கேடுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
- மக்களை நோய்மையில் ஆழ்த்தும் ஐந்து முக்கியமான நோய்களில் ஒன்றாக மனச்சோர்வும் இடம்பிடித்திருக்கிறது. மனநோய்கள் மிகப் பெரிய பொருளாதார இழப்புகளை உலகம் முழுக்க ஏற்படுத்துகின்றன, இளைய வயதினரின் மரணத்துக்கு முதன்மையான காரணமாகத் தற்கொலை இருக்கிறது.
- அது மட்டுமில்லாமல், சமீப காலங்களில் பெருகியிருக்கும் உடல்நலச் சீர்கேடுகளுக்கும் மனநலமின்மையே காரணம் என சர்வதேச சுகாதார அமைப்புகள் வலியுறுத்துகின்றன. நாடு, இனம், மொழி தாண்டி மனநலக் கோளாறுகள் அனைவருக்கும் பொதுவானவை.
- ஏழை-பணக்காரர், ஆண்-பெண் என்ற வேறுபாடுகளைத் தாண்டி, எல்லோருக்குமே வரக் கூடியவை.
- ஆனால், மனநலப் பாதிப்புகள் வருவதற்கான காரணங்களும், மனநலச் சேவைகளும் இப்படி எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கிறதா? உலகம் முழுக்க 30% மக்களுக்கு மனநலப் பாதிப்புகள் இருக்கின்றன என்கின்றன ஆய்வுகள்.
- இதில் பெரும்பாலானவர்கள் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் எளிய மக்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதற்கான எந்தச் சேவையும், சிகிச்சையும் கிடைப்பதில்லை.
- மனநலச் சேவைகள் வழங்குவதில் வளர்ந்த நாடுகளைவிட வளரும் நாடுகள் மிகவும் பின்தங்கியிருக்கின்றன என்கின்றன அந்த ஆய்வுகள்.
முதன்மையானதாக இருக்க வேண்டும்
- மனநோய்களினால் பாதிக்கப்படும் மக்களில் 80% பேர் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான் இருக்கிறார்கள்.
- இங்கு நிலவும் சமத்துவமற்ற மனநலச் சேவைகளும், எளிய மனிதர்களின் மீது உருவாகும் சமூக அழுத்தமும், புதிய பொருளாதார நெருக்கடிகளும் பெருகிவரும் மனநலக் கோளாறுகளுக்கு முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
- வளரும் நாடுகளில் அதிகமாக இருக்கும் மனநலம் மீதான எதிர்மறையான பார்வை, மனநோய் தொடர்பாகக் கொண்டிருக்கும் போலி நம்பிக்கைகள் போன்றவை சரியான மனநலச் சேவைகள் கிடைப்பதைத் தடுப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
- மனநோய்களின் தாக்கமும் பாதிப்பும் பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினரிடமும், மொழி, இனரீதியாக ஒடுக்கப்பட்டவர்களிடமுமே அதிகமாக இருப்பதால், மனநலச் சேவைகளுக்கான தேவையும் இவர்களுக்குத்தான் அதிகம்.
- ஆனால், மனநலச் சேவைகளை எளிதில் பெற முடியாத நிலையிலும் இவர்கள்தான் இருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் நிறைந்த சமூகத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான சுகாதாரச் சேவைகள் கிடைப்பதில்லை.
- அதிலும், குறிப்பாக மனநலச் சேவைகள் என்று வரும்போது, விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
- மனநலச் சீர்கேடுகளினால் உண்டாகும் வேலையிழப்பு, வறுமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பல்வேறு உடல் நோய்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்சினைகளினால் இவர்களே நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
- அனைவருக்கும் பொதுவான மனநல சேவைகள் கிடைப்பதை உறுதிசெய்வதன் வழியாகவே, சமூகத்தில் நலிவடைந்தவர்களும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பதை நம்மால் உறுதிசெய்ய முடியும்.
- பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை “உடல் மற்றும் மன ஆரோக்கியத்தின் உயரிய நிலையை அடைய அனைவருக்கும் உரிமை உண்டு” என்கிறது.
- ஒவ்வொரு சமூகமும் அதன் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் சுகாதாரச் சேவைகளை நிவர்த்திசெய்ய வேண்டும்.
- முழு ஆரோக்கியத்தை அடைவதற்கான முயற்சிகளில் மன ஆரோக்கியத்தை முதன்மையாகக் கொள்ள வேண்டும்.
- தனிமனித உரிமைகள், சமூகநீதி போன்றவற்றைக் கருத்தில்கொள்வதன் வழியாகவே, சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களின் மனஆரோக்கியத்தை உறுதிசெய்ய முடியும்.
- அதே போல மனநோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியமும் மனித உரிமைகளும் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படு வதற்கான முயற்சிகளையும் அரசு எடுக்க வேண்டும்.
- மனம் என்பது உடலின் ஒரு அங்கமாக இருப்பதுபோல சமூகத்தின் அங்கமாகவும் இருக்கிறது. உடல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தின் வழியாகவே அடைய முடியும்.
- மனதின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால், அதன் ஆரோக்கிய மின்மைகளை நாம் வெளிப்படையாகப் பேச வேண்டும். மன ஆரோக்கியமின்மைகள் தனி மனிதப் பிரச்சினை மட்டுமல்ல... அது சமூகத்தின் பிரச்சினையும்கூட.
- எனவே, மனதைப் பற்றியோ அதன் ஆரோக்கியமின்மைகளையோ பேசுவதற்குத் தயக்கம் கூடாது. தனிமனிதரின் மன ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் முயற்சிகளை அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்ய வேண்டும்.
- தங்குதடையற்ற மனநலச் சேவைகள் நாட்டின் கடைக்கோடிக் கிராமத்தைச் சென்றடைவதிலும், அதைப் பெறுவதில் இருக்கும் இடையூறுகளைக் களையும் முயற்சிகளிலும் அரசு முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
- சமத்துவமற்ற உலகில் ஆரோக்கியத்துக்கான வழிமுறைகளும், அதனை மீட்டெடுப்பதற்கான சேவைகளும் எல்லோருக்கும் அத்தனை எளிதானதாகவும், சமமானதாகவும் கிடைப்பதில்லை.
- தனிப்பட்ட ஒருவரின் ஆரோக்கியம் என்பது அந்த தனிமனிதரின் பொறுப்பு மட்டுமல்ல, அது முழுவதும் ஒரு அரசின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை அரசு உணர வேண்டும். அப்படிப்பட்ட ஆரோக்கியத்தை உறுதிசெய்யும்போது மனநலம் அதில் முதன்மையானதாக இருக்க வேண்டும்.
- அக்டோபர் 10: உலக மனநல நாள்
நன்றி: இந்து தமிழ் திசை (11 - 10 - 2021)