TNPSC Thervupettagam

சமத்துவம் என்றொரு கனவு

August 28 , 2023 563 days 504 0
  • இன்றைய அரசியல் தலைவர்கள் ஆற்றும் உரைகள் பெரிதும் பிறரால் எழுதப்படுபவை. சுயபிம்பத்தைப் பெருக்கிக் காட்டவும் புகழைத் தேடவும் அலங்காரமான சொற்களால் தயாரிக்கப்பட்டவை. சர்வதேச அளவில் இதற்கென நிறைய நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. அவர்கள் அரசியல் தலைவர்களின் முக்கிய உரைகளைத் தயாரித்து அளிக்கிறார்கள். அதற்காகச் செலவிடப்படும் பணம் மிகப் பெரியது. பொது மேடையில் எப்படிப் பேச வேண்டும், என்ன உடை அணிந்துகொள்ள வேண்டும், எங்கே பேச்சை நிறுத்த வேண்டும், எப்படிப் பாவனை செய்ய வேண்டும் என்பதற்கான ஒத்திகைகள்கூட நடைபெறுகின்றன.
  • அந்த உரைகளுக்குக் கைதட்டுவதற்கான ஆள்களையும் அவர்களே ஏற்பாடு செய்துதருகிறார்கள். ஆனால், அது போன்ற உரைகளில் உண்மையின் குரல் ஒலிப்பதில்லை. அவை காகித மலர்கள்போல் இருக்கின்றன. அச்சிட்டுப் படிக்கும்போது சல்லடையில் தண்ணீர் அள்ளியது போன்ற உணர்வே ஏற்படுகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க உரை

  • நல்ல சொற்பொழிவு என்பது கேட்பவரின் இதயத்தைத் தொட்டு, அவர்களின் சிந்தனையிலும் செயலிலும் மாற்றத்தை உருவாக்கக்கூடியது. 1963இல் வாஷிங்டன் லிங்கன் சதுக்கத்தில் இரண்டரை லட்சம் மக்களின் முன்பாக மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆற்றிய உரை, அது போன்றதொரு நிகரற்ற உரை.
  • இணையத்தின் உதவியால் இன்று அந்த உரையைக் கேட்க முடிகிறது. எழுச்சிமிக்க மக்களின் கூட்டத்தைக் காணும்போது, அது எவ்வளவு முக்கியமான நிகழ்வு என்பதையும் உணர முடிகிறது மார்ட்டின் லூதரின் குரல் கம்பீரமானது, வசீகரமானது. அவரது உரையை ஒரு சொற்பொழிவு என்று சொல்வதைவிடவும் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட வாதம் என்றே கூற வேண்டும்.
  • மார்ட்டின் லூதர் நிதானமாக, அழுத்தமாக நீதியின் குரலை வெளிப்படுத்துகிறார். எழுத்து வடிவில் தயாரிக்கப்பட்ட உரை அது. ஆனால், அதை மனதிலிருந்தே மார்ட்டின் லூதர் பேசுகிறார். அவரது குரலின் வழியே அமெரிக்க தேசத்தின் வரலாறும் கறுப்பின மக்களின் துயர வாழ்வும் போராட்டத்தின் தேவையும் அழுத்தமாக வெளிப்படுகின்றன.

விடுதலைக்கான கனவு

  • நான் ஒரு கனவு காண்கிறேன்என்கிற அவரது முழக்கம் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியது. சத்தியத்தின் ஆற்றலை உணரவைத்தது. இந்த உரையில் எட்டு முறை தனது கனவைப் பற்றி மார்ட்டின் லூதர் குறிப்பிடுகிறார்.
  • கனவின் பக்கங்களைப் புரட்டி அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை விரிவாகச் சொல்கிறார். உண்மையில் தனக்குள் என்றைக்கோ உருவாகி, வளர்ந்து நிற்கும் மாறாக் கனவை மக்களிடம் நினைவுபடுத்துகிறார் என்றே சொல்ல வேண்டும். அமெரிக்கச் சமூகத்திடம் மட்டுமின்றி இனவெறியோடு நடந்து கொள்ளும் அனைவரின் முன்பும் அவர் தனது கனவை எடுத்துச்சொல்கிறார். அது சமத்துவத்துக்கான கனவு; சமூக நீதிக்கான கனவு; அடிமைப்படுத்தப்பட்ட இனம் தன் விடுதலைக்காகக் கண்ட கனவு!

தூய அன்பின் அழைப்பு

  • நிறபேதம், இனபேதம் கொள்ளாமல் மனிதர்களைச் சமமாகக் கருதவும் அவர் தம் உரிமைகளைப் பெறவும் போராட்டமே வழி, தீர்வு. முடிவில்லாத போராட்டமே நீதியைப் பெற்றுத் தருகிறது என்பதை மார்ட்டின் லூதர் கிங் உணர்ந்திருக்கிறார்.
  • அதிகாரத்தின் அடக்குமுறைகள் பற்றி அவருக்குப் பயமில்லை. தான் காலத்தின் பிரதிநிதி என்று உணர்ந்திருப்பதை அக்குரலில் காண முடிகிறது. போராட்டத்துக்கான அறைகூவல் என்றாலும், அதில் துளிகூட வெறுப்பில்லை. மோதலுக்கான தூண்டுதல் இல்லை. தூய அன்பின் அழைப்பாகவே ஒலிக்கிறது.
  • நாம் தனித்து நடக்கவும் முடியாது. திரும்பிச் செல்லவும் முடியாது என்று மார்ட்டின் லூதர் கிங் சொல்வது முற்றிலும் உண்மை. போராட்டக் களத்தில் நிற்பவர்களுக்கு என்றைக்குமான ஆப்த வாசகம் அது. அமெரிக்க மக்கள் அனைவரும் சமம் என்ற அரசியல் சாசன உறுதிமொழியை ஒரு காசோலையாக அடையாளப்படுத்தி, அந்தக் காசோலையைப் பணமாக்குவதன் பொருட்டே, நாம் தலைநகர் நோக்கிப் படையெடுத்திருக்கிறோம். நமக்கு நீதி வழங்க வேண்டிய வங்கி, அந்தக் காசோலையை ஏற்க மறுக்கிறதுஎன்று மார்ட்டின் லூதர் மிக எளிமையாக, நெருக்கமாகத் தனது கருத்தை மக்கள் மனதில் பதியவைப்பது சிறப்பாக உள்ளது.

நீதியின் வெளிச்சம் பரவ.

  • கறுப்பின மக்களையும் வெள்ளை இனத்தவரையும் சகோதர சகோதரிகளாகவே அவர் கருதுகிறார். ஒன்றாகக் கைகோத்து வாழ வேண்டும் என்றே வலியுறுத்துகிறார். கறுப்பின மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கான அந்தக் கூட்டத்தில், அறுபதாயிரம் வெள்ளையர்கள் கலந்துகொண்டிருந்தார்கள் என்பது முக்கியமானது.
  • பிரிவினைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாகி வரும் என் நண்பர்களுக்குச் சொல்கிறேன். இன்றும் நாளையும் நாம் துன்பங்களை எதிர்கொண்டாலும், ஒருநாள் இந்தத் தேசம் உயர்ந்து எழும்என்று மார்ட்டின் லூதர் கிங் சொன்னது, அந்தக் கனவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையாலே தான். இது அமெரிக்காவுக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கும் பொருந்தக் கூடியதே.
  • மாற்றத்துக்கான கனவு மட்டுமில்லை. அந்தக் கனவை எடுத்துச்சொல்லும் சிறந்த தலைவர்களும் தேவைப்படுகிறார்கள். இன்று நாம் அடைந்திருக்கும் வளர்ச்சியும் பெற்றிருக்கும் உரிமைகளும், இதுபோன்று கனவை முன்னெடுத்த மனிதர்களால் உருவானவையே. அநீதியின் இருள் நம்மைச் சுற்றிச் சூழ்ந்து வருகிறது. அதற்கு எதிராக நீதியின் வெளிச்சத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம். நீதியின் வெளிச்சத்தைப் படரவிடுகிறது என்பதாலே இன்றும் மார்ட்டின் லூதர் கிங்கின் உரை முக்கியமானதாகிறது.

நன்றி : இந்து தமிழ் திசை (28– 08 – 2023)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top