- சமகாலம் ஒரு புளிக்காத, நல்ல தயிர் சாதமாக இருந்தால் மட்டுமே சரித்திரம் ஒரு ருசியான ஊறுகாயாக உடன் வரும். துரதிருஷ்டவசமாகப் பாலஸ்தீன் விவகாரத்தில் சரித்திரம், சமகாலம் எல்லாமே ஒரே ரகம். அந்த 1967-ம் ஆண்டு 6 நாள் யுத்தத்தையும் அதனைத் தொடர்ந்து அல் அக்ஸாவில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சிக் கல்யாணத்தையும் விவரித்தது, பிரச்சினையின் அடிப்படை தெளிவாகப் புரிய வேண்டும் என்பதற்குத்தான். 67 என்றில்லை. கடந்த நூறாண்டுகளில் நீங்கள் எந்த ஆண்டை தொட்டாலும் அந்த மாதிரி ஒரு விவகாரமாவது அவசியம் சிக்கும். ஒன்று அந்தளவு வீரியத்துடன் இருக்கும். அல்லது அதைவிட வீரியத்துடன் இருக்கும். அதற்குக் குறைவாக ஒன்று காணக் கிடைக்காது.
- யாசிர் அர்ஃபாத் உயிருடன் இருந்த வரை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களை இரண்டு விதமாக நடத்திப் பார்த்தார். முதலாவது, அவரது தொடக்க கால ஆயுதப் போராட்டங்கள். ஃபத்தா (Fatah) என்பது அவர் தொடங்கிய இயக்கம். கொஞ்சம் இடதுசாரி. நிறைய தேசியவாதம். இதுதான் அடிப்படை. இதற்கு மேலே மதச்சார்பின்மை, அரபு சகோதரத்துவம், இரு நாடுகளாகப் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் தொடரலாம் என்கிற மனப்பான்மை, வல்லரசு நாடுகளின் தலையீடுகளை அறவே வெறுத்தல் போன்ற சேர்மானங்கள் இருந்தன. பாலஸ்தீன் போன்ற தீர்க்க முடியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இதெல்லாம் அவசியம் என்று அவர் கருதினார். மிகவும் கவனமாக, மதத்தை முன்னிறுத்தாமல், பாலஸ்தீனிய அரேபியர்களின் வாழ்வுரிமையை முன் வைத்தே அவரது போராட்டம் ஆரம்பமானது. எப்படி இஸ்ரேலிய யூதர்களுக்கு அது பூர்வீக மண்ணோ, அதே போலத்தான் பாலஸ்தீனத்து அரேபியர்களுக்கும். எனவே ஐ.நா.வின் பூர்வாங்க ஏற்பாட்டில் கண்டபடி இரு தேசங்களாகச் செயல்படலாம் என்பது அவரது நிலைபாடு.
- இது என்ன பெரிய நிலைபாடு, இதனைச் சொல்ல ஒரு பெருந்தலைவர் எதற்கு என்று முஸ்லிம்களில் ஒரு சாரார் அன்று அர்ஃபாத் மீது கடும் கோபம் கொண்டார்கள். அந்த நாட்களில் ஐ.நா.வும் அமெரிக்காவும் பிரிட்டனும் இதர ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலை ஏற்றுக் கொண்டாலும் மத்தியக் கிழக்கு நாடுகள் எதுவுமே இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.
- பாலஸ்தீனத்து அரேபியர்களைப் பொறுத்த வரை, இஸ்ரேல் என்கிற தேசத்தின் உருவாக்கமே ஒரு திட்டமிட்ட சதி. அவர்களது பூர்வீக நிலத்தை அநியாயமாக அபகரித்து யூதர்கள் வசம் ஒப்படைத்துவிட்டார்கள். அதோடு நிறுத்திக் கொள்ளாமல், மேற்கத்திய நாடுகளின் இடைவிடாத ராணுவ உதவிகள். உளவுத் துறை உதவிகள். அப்படிப் பூண்டோடு அழித்துவிட வேண்டும் என்று எண்ணும் அளவுக்கு பாலஸ்தீனர்கள் என்ன பிழை செய்து விட்டார்கள்?
- இன்று வரை விடையில்லாத இந்தக் கேள்விதான் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சினையை இப்போது வரை அப்படியே வைத்திருக்கிறது.
- ஆனால் யாசிர் அர்ஃபாத் உயிருடன் இருந்த வரை அமைதி முயற்சிகளுக்குப் பலன் இருக்கும் என்று நினைத்தார். நவீன காலத்தில் புரட்சிப் போராட்டங்களினும் அமைதிப் பேச்சு வார்த்தைகளே வெற்றிக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் என்று நம்பினார். அதன் தொடர்ச்சிதான் இஸ்ரேல் ஆட்சியாளர்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள், ஓஸ்லோ ஒப்பந்தங்கள் இன்ன பிற...
- ஆரம்பத்தில் அவரும் ஆயுதம் ஏந்திய போராளிதான். ஃபத்தா என்கிற இயக்கத்தை வழி நடத்தியது, பிறகு பாலஸ்தீனில் இயங்கிய அனைத்து விடுதலை இயக்கங்களையும் ஒருங்கிணைத்து, பி.எல்.ஓ. என்ற குடையின் கீழ் கொண்டு வந்து போராடியது, டிசம்பர் 1987-ல் முதல் முதலில் intifada (எழுச்சி என்று பொருள்) என்று உலகறிய ஒட்டுமொத்த பாலஸ்தீனியர்களையும் அணி திரட்டி இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கிளர்ச்சி இயக்கத்தை முன்னெடுத்தது என்று நிறைய செய்து பார்த்தார்.
- வன்முறை, அவ்வப்போதைய ஆத்திரத்தைத் தணித்ததே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு தரவில்லை. ஒவ்வொரு வன்முறை முயற்சியிலும் யூதர்கள் தரப்புக்குச் சில மரணங்களைத் தர முடிந்தாலும், அவர்களது பதிலடியில் இறந்த பாலஸ்தீன முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது மூன்று மடங்கு அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. இதனை உணர்ந்த பிறகுதான் அர்ஃபாத் மிகத் தீவிரமாக அமைதிப் பேச்சுவார்த்தைகளின் பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
- கடந்த 1993-ம் ஆண்டு ஓஸ்லோ பேச்சுவார்த்தைகள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. முதலில் வாஷிங்டனில் வைத்துப் பேசினார்கள். பிறகு கெய்ரோவில். அமெரிக்கா மத்தியஸ்த வேலை பார்த்தது. அப்போதைய இஸ்ரேல் பிரதமர் இட்ஸாக் ராபின் (Yitzhak Rabin) பி.எல்.ஓ.வை ஒரு வழியாக அங்கீகரித்தார். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் மேற்குக் கரை மற்றும் காஸாவில் பாலஸ்தீனியர்கள் தங்களைத் தாமே ஆட்சி செய்து கொள்ளலாமென்று முடிவானது.
- இந்த ஒப்பந்தத்தின் மாபெரும் சிக்கல், அடிப்படைப் பிரச்சினையைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் கையெழுத்தானதுதான். பாலஸ்தீனத்தின் அடிப்படைப் பிரச்சினை எது? ஜெருசலேம். அங்குள்ள அல் அக்ஸா. அழுகைச் சுவர். அதைப் பற்றி ஒப்பந்தத்தில் ஒன்றும் கிடையாது.
- இன்னொன்று, மேற்குக் கரையில் இஸ்ரேல் அரசு ‘பயிரிட்ட’ யூதக் குடியேற்றங்கள். இது எல்லா ஆதிக்க சக்திகளும் அடித்துத் துரத்த விரும்பும் தரப்பு வசிக்கும் பகுதிகளில் காலம் காலமாகச் செய்கிற திருவிளையாடல். அங்குள்ள யூதக் குடியேற்றங்கள் விலக்கிக் கொள்ளப்படுமா என்பது குறித்தும் ஓஸ்லோ ஒப்பந்தத்தில் ஒரு வரி கிடையாது.
- சுருக்கமாகச் சொல்வதென்றால் அவசரப் பசிக்கு ஒரு வடை தின்று டீ குடிப்பது போல ஓர் ஒப்பந்தம். இப்போதைக்கு மேற்குக் கரையையும் காஸாவையும் நீங்கள் ஆண்டுகொள்ளுங்கள். மற்றதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
- பாலஸ்தீனர்கள் தரப்பில் இதற்குப் பெரிய ஆதரவு இருக்க வாய்ப்பில்லை என்றே உலகம் நினைத்தது. ஆனால், நடந்தது நேரெதிர். கொதித் தெழுந்தது யூதர்கள்தாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (16 - 10 – 2023)