TNPSC Thervupettagam

சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பு

October 13 , 2023 439 days 506 0
  • இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று பரபரப்பான பேசுபொருளாக மாறியிருக்கிறது பிகார் மாநில அரசு நடத்தி, வெளியிட்டுள்ள சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்கள். பிகாருக்கும் சமூகநீதிக்கும் நெருங்கிய உறவு உண்டு. நிதீஷ் குமார் தலைமையிலான அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி வெளியிட்டிருப்பதன் மூலம் பிகார் சமூகநீதியின் மண் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • பிகாரைத் தொடா்ந்து கா்நாடக அரசும், ஒடிஸா அரசும் தாங்கள் ஏற்கனவே நடத்தி முடித்த சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளன. மராட்டியம், இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. மத்தியில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதன் தலைவா்களில் ஒருவரான இராகுல் காந்தி அறிவித்திருக்கிறார். ஆனால், தமிழக அரசோ, தமிழகத்தை ஆளும் திமுகவோ சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஒற்றை வார்த்தைக் கூட உதிர்க்காதது ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • சாதிவாரி கணக்கெடுப்பு என்பது சாதிகளின் வலிமையை அறிவதற்கான போட்டி அல்ல. மாறாக, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்கான கருவி ஆகும். ‘ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்ட வேண்டும்’ என்பார்கள். சமூகநீதியும் அவ்வாறு அளந்து வழங்கப்பட வேண்டியது தான். அதற்காகத்தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக அவசியமாகிறது.
  • சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் அது சாதிவாரியாக மக்களின் தலைகளை மட்டும் எண்ணுவதில்லை. அவா்களின் கல்வி நிலை, வேலைவாய்ப்பு நிலை, பொருளாதார நிலை, சொந்த வீடு, நிலம், வாழ்வாதார வகைகள் உள்ளிட்ட 20 வகையான தகவல்களைத் திரட்டுவது ஆகும். இத்தகைய தகவல்களைத் திரட்டிய பிறகு, அவற்றின் அடிப்படையில் மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலைகளை மேம்படுத்தத் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதுதான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கமாகும்.
  • சமூகநிலையிலும், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களை, அவை அனைத்திலும் முன்னேற்றுவதற்கான சமூகநீதி நடவடிக்கைதான் இட ஒதுக்கீடு ஆகும். சாதிகளின் அடிப்படையில் சமூகத் தளத்தில் மக்கள் புறக்கணிக்கப்படுகிறாா்கள் என்பதால், அதே சாதிகளின் அடிப்படையில் அவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் சமுகநீதியின் அடிப்படைத் தத்துவம் ஆகும்.
  • அவ்வாறு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டின் அளவு சரியாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், சில தருணங்களில் முறையாக வழங்கப்படாத மருந்தே நஞ்சாக மாறிவிடுவதைப் போல, இட ஒதுக்கீடே சமூக அநீதியாக மாறிவிடக்கூடும். ஒரு சமூகத்திற்கு அதன் மக்கள்தொகையை விட அதிகமாக அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், இன்னொரு சமூகத்திற்கு அதன் மக்கள்தொகையைவிட குறைவாகவே இட ஒதுக்கீடு கிடைக்கும். அது மிகப்பெரிய சமூக அநீதியாக அமைந்து விடும். அதனால்தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்; அதனடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இதுதான் சமூகநீதிக்காகப் பாடுபடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.
  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது புதிதாக உருவாக்கப்பட்ட தத்துவம் அல்ல. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பிருந்தே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 100 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு வசதியாகவே 1872-ஆம் ஆண்டில் தொடங்கி 1931-ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1941-ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப் போர் காரணமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.
  • இந்தியா விடுதலை அடைந்த பிறகு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது சமூகநீதிக்கு வழிகோலும் என்பதற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாமல் நிறுத்தப் பட்டது. அதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளைக் காரணம் காட்டி, அதுவரை நடைமுறையில் இருந்து வந்த இட ஒதுக்கீடுகளும் ரத்து செய்யப்பட்டன. அதனால்தான், இப்போது சமூகநீதியில் நூற்றாண்டுக்கு முன்பிருந்த நிலையை எட்டுவதற்கு சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.
  • தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கடந்த 45 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனா் மருத்துவா் இராமதாசு வலியுறுத்தி வருகிறார். 43 ஆண்டுகளுக்கு முன் 1980-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் வன்னியா் சங்கம் என்ற அமைப்பை நிறுவிய அவா், அதற்கான தொடக்க விழாவில் நிறைவேற்றிய முதல் தீா்மானமே, ‘சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்’ என்பதுதான். அதன்பின் இதுவரை பல்லாயிரம் முறை இந்தக் கோரிக்கையை அவா் வலியுறுத்தியுள்ளார்.
  • மருத்துவா் இராமதாசு முதன் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தியபோது, அதற்கான தேவை எவ்வளவு இருந்ததோ, அதை விட ஆயிரம் மடங்கு இப்போது தேவை அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. அதற்கெல்லாம் மேலாக, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்கே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு அவசியமாகிறது.
  • தமிழ்நாடு உட்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், மத்தியிலும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது என்றாலும், எதுவுமே அண்மைக்கால மக்கள்தொகைப் புள்ளிவிவரத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை. அனைத்து இட ஒதுக்கீடுகளும் கடைசியாக ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் 1931-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் வழங்கப்படுகின்றன. இதனை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை.
  • தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 2010-ஆம் ஆண்டு தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், ‘69% இட ஒதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும்’ என்று ஆணையிட்டது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் விவரங்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69% இட ஒதுக்கீட்டைக் காப்பாற்ற முடியாது என்பதுதான் உண்மை.
  • இப்படியாக எந்த வகையில் பாா்த்தாலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், மிகக் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால், சமூகநீதியே எங்கள் உயிர்மூச்சு என்று கூறும் திமுக, இது குறித்து மூச்சே விடவில்லை.
  • தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்ற ஒன்றல்ல.13 கோடி மக்கள்தொகை கொண்ட பிகாரில் ரூ. 500 கோடிக்கும் குறைவான செலவில், 2.64 லட்சம் அரசு ஊழியா்களைக் கொண்டு 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எந்தக் குறையும் இல்லாமல் நடத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால், 7.64 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக நடத்தி முடிக்க முடியும்.
  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படியாகவும் எந்தத் தடையும் இல்லை. பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் அம்மாநில உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த கூடுதல் விவரங்களை வெளியிடக்கூடாது என்று கடந்த அக்டோபா் 7-ஆம் நாள் தொடரப்பட்ட புதிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், இன்றைய சூழலில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதென்பது அலையில்லாத நீா்நிலையில் நீரோட்டத்தின் போக்கில் நீந்துவதைப் போல எளிதானது.
  • ஆனாலும், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது குறித்து அரசு இதுவரை எதுவும் கூறாமல் அமைதி காப்பதன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் தமிழகத்தை ஆளும் கட்சியான திமுகவே இந்தக் கோரிக்கையைத் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்காகவே அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கிய மு.க. ஸ்டாலின், அதன் சார்பில் 3.4.2023, 19.9.2023 ஆகிய நாட்களில் இரு தேசிய மாநாடுகளை நடத்தினார். இரு மாநாடுகளிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அவா் குரல் கொடுத்தார்.
  • எனினும், இரண்டாது மாநாடு நிறைவடைந்து இரண்டாவது வாரத்தில் பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்து எந்தக் கருத்தையும் தமிழக அரசு தெரிவிக்காதது சமூகநீதி மீதான அரசின் அக்கறை குறித்த ஐயத்தை ஏற்படுத்துகிறது. அந்த ஐயத்தைப் போக்கவும், தமிழ்நாட்டில் சமூகநீதியைக் காக்கவும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம். இதை உணா்ந்து அதற்கான ஆணையை அரசு விரைவில் பிறப்பிக்கும் என்று நம்புவோம்.

நன்றி: தினமணி (13 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories