TNPSC Thervupettagam

சமையல் எண்ணெயில் கலப்படமா

September 6 , 2023 490 days 418 0
  • கல்தோன்றி முள் தோன்றாக் காலத்துக்கு முன்பு (அதாங்க சமூக ஊடகங்கள் வருவதற்கு முன்பு), வதந்திகளும் பொய்ச் செய்திகளும் வாய்வழியே பரவிக்கொண்டிருந்தன.  தம்மிடம் தேங்கிவிட்ட சேலைகளை விற்பதற்கு, துணிக்கடை முதலாளி எவரோ புனித மாதத்தில் தங்கைகளுக்கு அண்ணன்கள் பச்சை நிறச் சேலை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றொரு புரளியைக் கிளப்பிவிட்டார்.  அண்ணன்கள் பாசமலராகப் பொங்கி பச்சை சேலைகளை வாங்கிக் கொடுத்தார்கள்.
  • அக்‌ஷய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் சேருமென்று இன்னொரு வதந்தி. லட்சக்கணக்கான மக்கள் தங்கம் வாங்க, தங்க நகை வணிகர்களிடம் செல்வம் சேர்ந்தது. சமூக ஊடகங்கள் வந்த பின்னர், வதந்தி பரவும் வேகம் மின்னலை மிஞ்சியது. இன்று பொய்களும் வதந்திகளும் உண்மையைக் கடலின் அடியாழத்தில் அமிழ்த்திவிட்டன எனத் தோன்றுகிறது.
  • வாட்ஸப் பல்கலைக்கழகங்களின் பணி, எந்த ஒரு சர்வதேசப் பல்கலைக்கழகத்தைவிடவும் செயல்திறன் மிகுந்ததாக மாறிவிட்டது. மெத்தப்படித்த என் உறவினர் மோதிலால் நேரு இஸ்லாமியர் என அல்லாவின் மீது சத்தியம் செய்து சொல்கிறார். ஃபரூக் அப்துல்லாவும், ராஜீவ் காந்தியும் சகோதரர்கள் என்றும். உண்மையைத் தேடப் போய் உறவு முறிந்ததுதான் மிச்சம்.
  • அப்படிப்பட்ட வதந்திகளில், உணவு பற்றிய வதந்திகளும் பொய்ச் செய்திகளும் முக்கியமானவை. இஸ்லாமியர்கள் பிரியாணி வழியே இந்துக்களின் ஆண்மையை அழைக்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் என்றொரு வதந்தி. சமையல் எண்ணெயில் பாரஃபின் எண்ணெய் கலந்திருக்கிறது என்றொரு பொய்ச் செய்தி. இதைப் பரப்புபவர்கள் பெரும்பாலும் உள்ளூர் செக்கெண்ணெய் உற்பத்தியாளர்கள். இந்தக் கட்டுரையில், சமையல் எண்ணெய் பற்றிய இரு வதந்திகளின் பின்னால் உள்ள உண்மையைக் காண முயற்சி செய்வோம்.

சமூக ஊடகம்

  • அண்மையில் முகநூலில் ஒரு அன்பர் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:
  • “உங்கள் எண்ணையில் பாரபைன் இருக்கா..?
  • நிச்சயம் இருக்கு. அதுவும் பாதிக்கு மேல் பாரபைன் எண்ணையைதான் நீங்கள் சமைக்கு பயன்படுத்துகிறீர்கள். பெட்ரோலியத்தின் கடைசி கட்ட கழிவுதான் பாரபைன். இதற்கு நிறம், மணம், குணம் கிடையாது. இது லிட்டருக்கு 30 முதல் 40 ரூபாய்தான் விலை வரும்.  லிட்டர் 450க்கு மேல் விற்க வேண்டிய நல்லெண்ணை 250க்கும் லிட்டர் 350 விற்கப்பட வேண்டிய தேங்காய் எண்ணை ரூ.200க்கும் எப்படி விற்கிறார்கள்?
  • இந்தோனேசியா, மற்றும் மலேசியாவில் உற்பத்தி செய்யப்படும் பாமாயில் அங்கேயே லிட்டர் 200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. அதை இறக்குமதி செய்து எப்படி இங்கே 100 ரூபாய்க்கும் குறைவாய் விற்கிறார்கள்?  பாரபைன் கலக்காமல் இது எதுவுமே சாத்தியமில்லை. பாரபைன் தொடர்ந்து பயன்படுத்துவதால் குடல் மற்றும் ஜீரண உறுப்புகள் கெட்டுப்போகிறது. சிறுநீரகம் பழுதடைகிறது. கொழுப்பு,மற்றும் சர்க்கரை நோய்க்கு வழி வகுக்கிறது.
  • நம்மூர் ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணை கடலை எண்ணைகளை விற்காமல் ஏன் எங்கிருந்தோ இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை விற்கிறார்கள்? உலக வங்கி இதற்காக ஏன் கடன் கொடுக்கிறது? உலகலாவிய மருந்து நிறுவனங்களுக்கும் உலக வங்கிக்கும் என்ன தொடர்பு?
  • இந்தியாவில் வருடத்திற்கு பல லட்சம் கோடி மருந்துகள் விற்பனையாகிறது. அத்தனை நோய்களோடு வாழ்கிறோம். இதன் பின்னணி என்ன?  எதுவாகவும் இருக்கட்டும்... அது உலக அரசியல். அதற்கு பலிகடா ஆகாமல் நாம் கார்ப்பரேட்டுகளின் கையில் சிக்காமல் உள்ளூர் விவசாயி ஆட்டி அரைத்து கொடுக்கும் செக்கு எண்ணைகளை பயன்படுத்தி நம் நலனையும் நம் சந்ததிகள் நலனையும் காப்போம்!”
  • இதை எழுதியவர் உள்ளூர் செக்கு எண்ணை உற்பத்தியாளர்.
  • சில மாதங்களுக்கு முன்பு இன்னொரு அன்பர் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் எல்லாம் க்ரூடாயிலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அதனால்தான், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் விலை குறைவாக இருக்கிறது என எழுதியிருந்தார். இதை உள்ளூர் செக்கெண்ணெய் உற்பத்தியாளர்கள் பலரும், நம்புகிறார்கள். சமூக ஊடகங்களில் இதுபோன்ற செய்திகளைப் பரப்புகிறார்கள்.
  • உணவுப் பதப்படுத்துதல் பற்றி அறியாத சாதாரண நுகர்வோருக்கு இதனால் பெரும் குழப்பம் நேர்கிறது. இந்த வதந்திகள் பரவும் வேகத்தைக் கண்டு, படித்த பலருமே குழம்பிவிடுகிறார்கள்.
  • இத்தகைய தகவல்கள் தவறானவை. மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்குபவை. இதன் ஆரம்பப் புள்ளி, நம்ம ஊரில் எண்ணெய் விலை மிக அதிகமாக இருக்கிறது. ஆனால், இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் விலை குறைவாக இருக்கிறது. எனவே, கலப்படமாகத்தான் இருக்கும் என்னும் ஊகம். எனவே, இதைக் கொஞ்சம் ஆராய்ந்து பார்ப்போம். 

எண்ணெய் வித்துகளும், உற்பத்தியும்

  • நல்லெண்ணெய் 450க்கு விற்கும்போது எப்படிச் சிலர் 250க்கு விற்கிறார்கள் எனக் கேட்கிறார் முகநூலில் மேற்சொன்ன செய்தியை வெளியிட்ட அன்பர். நாம் தேடிப்பார்த்தபோது இதயம் நல்லெண்ணெய் லிட்டர் 490 ரூபாய்க்கும், ஆனந்தம் நல்லெண்ணெய் 475க்கும் விற்கிறது. இவர் யாரைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை.
  • இரண்டாவது மலேசியாவில் ரூபாய் 200க்கு விற்கும் பாமாயில், இந்தியாவில் நூறு ரூபாய்க்குக் குறைவாக விற்கிறது எனச் சொல்கிறார். உண்மையில் மலேசியாவில் 80-90க்குதான் விற்கிறது. எனவே, அந்தத் தகவல் தவறானது. ஆனால், அவர் முன்வைக்கும் வாதத்தில் ஒரு விஷயத்தை விளக்க வேண்டியுள்ளது. நல்லெண்ணெய் லிட்டர் 450க்கு விற்கையில், பாமாயில் எப்படி நூறு ரூபாய்க்குக் குறைவாக விற்கிறது?
  • இங்கேதான் நாம் பல்வேறு எண்ணெய் வித்துக்களின் உற்பத்திச் செயல்திறனையும், வேளாண் பொருளாதார அடிப்படைகளையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
  • நம் ஊரில், எண்ணெய் வித்துக்கள் பொதுவாக மானாவாரி நிலங்களில் விளைகின்றன. மழை என்பது சரியாகக் கணிக்க முடியாத ஒன்று என்பதால், மானாவாரி உழவர்கள், எண்ணெய் வித்துக்களுக்கு தேவையான உரம் போட மாட்டார்கள். பூச்சி மருந்து அடிக்க மாட்டார்கள். எனவே, அதன் மகசூல் மிகக் குறைவாக இருக்கும்.  நீர்ப்பாசனம் கொடுத்துப் பயிரிட்டாலும், கடலை, எள் போன்ற பயிர்களின் உற்பத்தித் திறன் மிகக் குறைவு.
  • எடுத்துக்காட்டாக, ஒரு ஹெக்டேர் நீர்ப்பாசன நிலத்தில் நல்லபடியாக எள் விளைந்ததென்றால், அதில் மகசூல் 1 முதல் 1.2 டன் எள் கிடைக்கும். அதிலிருந்து 500 முதல் 600 கிலோ வரை நல்லெண்ணெய் கிடைக்கும்.  அதேசமயத்தில், மலேசியாவில் ஒரு ஏக்கர் நிலத்தில், 4 டன் பாமாயில் கிடைக்கும். இந்தியாவில் எள் மூலம் கிடைக்கும் நல்லெண்ணெய் உற்பத்தியைவிட 660% அதிக உற்பத்தித் திறன் கொண்டது பாமாயில் பனை. எனவேதான், பாமாயில் விலை குறைவாக உள்ளது.

குஜராத் நவநிர்மாண்

  • பாமாயில் விளையும் மலேசிய, இந்தோனேசிய நாடுகளில் மழைப் பொழிவு மிகவும் அதிகம். பாமாயிலின் இந்த அதீத உற்பத்தித்திறன், பாமாயிலை ஒரு வெற்றிகரமான பணப்பயிராக மாற்றிவிட்டது. மலேசியாவும், இந்தோனேசியாவும் தங்கள் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள்.
  • இது தவிர, ரஷ்யா, உக்ரைன் நாடுகளில், சூரியகாந்தி ஒரு பெரும் பயிர். அவர்களும் தேவைக்கதிகமாக உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். 30 கோடி மக்கள்தொகையைக் கொண்ட அமெரிக்காவில் 2% மக்கள் மட்டுமே வேளாண்மையில் உள்ளார்கள். அமெரிக்கப் பண்ணையின் சராசரி அலகு 440 ஏக்கர்.  அவர்கள் அளவுக்கு அதிகமான சோயா எண்ணையை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கிறார்கள். இதனால், சர்வதேச சந்தையில் உணவு எண்ணெய் விலைகள் குறைவாக உள்ளன.
  • இந்தியாவில் 1970களின் முற்பகுதியில், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி குறைந்து, சமையல் எண்ணெய் விலைகள் அதிகரித்தன. 1973ஆம் ஆண்டு, சமையல் எண்ணெய் விலை உயர்வின் காரணமாக, கல்லூரி மெஸ்களின் கட்டணங்கள் உயர்ந்தன. இதை எதிர்த்து குஜராத் மாநிலத்தில் மாணவர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள். 70களின் வேலையில்லாத் திண்டாட்டம், அரசு மீதான அதிருப்தி முதலியவற்றின் வெளிப்பாடாக அது அமைந்தது. ‘குஜராத் நவ்நிர்மாண்’ என்னும் மாபெரும் போராட்டமாக அது வெடித்து, எமர்ஜென்சியில் முடிந்தது.
  • அடுத்து ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு, சமையல் எண்ணெய் விலைகளைக் குறைக்க சமையல் எண்ணெயை இறக்குமதி செய்ய அனுமதித்தது. மலேசியா அப்போதுதான் பாமாயில் உற்பத்தியில் மேலெழத் தொடங்கியிருந்தது.

எண்ணெய் இறக்குமதி

  • இறக்குமதி கொட்டத் தொடங்கியவுடன், எண்ணெய் விலைகள் குறைந்தன. 1980களின் மத்தியில், இந்தியாவில் அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை தொடங்கியது. அதன் காரணங்களை அரசு ஆராய்ந்தபோது, ஒரு சுவாரஸ்யமான உண்மை தெரியவந்தது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அடுத்ததாக அதிக அந்நியச் செலாவணியைக் கோருவது சமையல் எண்ணெய் இறக்குமதி என்பதே அது.
  • அதை நிறுத்த வேண்டுமெனில், இந்தியா சமையல் எண்ணெயில் உற்பத்தித் தன்னிறைவை அடைய வேண்டும் என்பதே தீர்வு என முடிவெடுத்த, ராஜீவ் காந்தி அரசு, சாம் பிட்ரோடா தலைமையில், தொழில்நுட்ப இயக்கத்தின் கீழ், சமையல் எண்ணெய்த் தன்னிறைவை அடைய, ஆப்ரேஷன் கோல்டன் ஃப்ளோ (Operation Golden Flow) என்னும் திட்டம் தொடங்கப்பட்டது.
  • இதில் 1986ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தத் திட்டம், நான்கே ஆண்டுகளில், உணவு எண்ணெய்த் தன்னிறைவை எட்டியது. தேசியப் பால்வள நிறுவனம் அறிமுகப்படுத்திய ‘தாரா’ என்னும் உணவு எண்ணெய் ப்ராண்ட், அறிமுகப்படுத்தப்பட்ட 2 ஆண்டுகளில், உணவு எண்ணெய்ச் சந்தையில் 50%தைப் பிடித்தது. ஏழு மாநிலங்களில் எண்ணெய் வித்து உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் தொடங்கப்பட்டன.
  • உலக வர்த்தக விதிகளின்படி, 300% இறக்குமதி வரிகளை இந்தியா விதித்துக்கொள்ள இடம் இருந்தது. ஆனாலும், இந்தியா 90% இறக்குமதி வரிகளை மட்டுமே விதித்து, உள்ளூர் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை உயர்த்தி, தன்னிறைவை 1990ஆம் ஆண்டு எட்டியது. ஆனால், 1994ஆம் ஆண்டு, நரசிம்ம ராவ் அரசு, இறக்குமதி விதிகளைத் தளர்த்தியது. அமெரிக்க அழுத்தத்துக்குப் பணிந்து, சோயா எண்ணெய்க்கான இறக்குமதி வரிகளை 45% எனக் குறைத்தது.
  • நரசிம்ம ராவ் ஆட்சிக்குப் பின் வந்த தேவே கௌடா மற்றும் குஜ்ரால் ஆட்சிக்காலத்தில், இறக்குமதி வரிகளை 20% எனக் குறைத்தார் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். எண்ணெய் வித்துத் துறைக்கான சாவுமணி அன்று அடிக்கப்பட்டது. இதில் 1990ஆம் ஆண்டு தன்னிறைவை அடைந்து, உணவு எண்ணெய் இறக்குமதியை நிறுத்திய இந்தியா, அடுத்து வந்த அரசுகள் இறக்குமதி வரிகளைக் குறைத்தனால், இன்று உணவு எண்ணெய்த் தேவையில் 80-85% இறக்குமதி செய்யும் பரிதாபமான நிலையை அடைந்துள்ளது.

க்ரூடாயில் என்பது என்ன?

  • அதன் பிறகு, உற்பத்தியாளர்கள் போராடி, 40-45% வரை இறக்குமதி வரிகளை மீண்டும் உயர்த்தினாலும், அது போதவில்லை. கடந்த சில ஆண்டுகளில் எண்ணெய் விலை மீண்டும் உயர, தற்போதைய மோடி அரசு மீண்டும் இறக்குமதி வரிகளை 5 முதல் 12% எனக் குறைத்துள்ளது.
  • எனவே, இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்களின் விலை குறைவாக இருப்பதற்கு, அந்த எண்ணெய் வித்துகளின் உற்பத்தித் திறனும் நம் நாட்டின் குறைவான இறக்குமதி வரிகளுமே காரணமே ஒழிய அதில் பாரஃபைன் எண்ணெய் கலப்படம் செய்வதால் அல்ல.
  • இரண்டாவது வதந்தி, இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்கள், க்ரூடாயிலில் இருந்தது சுத்திகரிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது. இது வதந்தி அல்ல உண்மைதான். ஆனால், க்ரூடாயில் என்பது என்னவெனப் புரிந்துகொண்டால், இந்த உண்மையை மேலும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.
  • க்ரூடாயில் என்றால், கச்சா எண்ணெய் என்று, அதாவது சுத்திகரிக்கப்படாத எண்ணெய் என்று அர்த்தம். மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்படும் எரிபொருள் எண்ணெய் கச்சா எண்ணெய். அது சுத்திகரிக்கப்பட்டு, பெட்ரோல், டீசல், பாரஃபின் எண்ணெய், ப்ளாஸ்டிக் எனப் பல பொருட்களாக மாறுகிறது. அதேபோல, தாவர எண்ணெய் வித்துக்களில் இருந்தது பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் க்ரூட் வெஜிடபிள் ஆயில் (crude vegetable oil). கடலையில் இருந்தது பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் க்ரூட் கடலெண்ணெய்.
  • அது கடலை வாசனையுடன், மஞ்சளாக இருக்கும். தேங்காயில் இருந்தது பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய் க்ரூட் தேங்காய் எண்ணெய். இது முற்றிய தேங்காய் வாசனையுடன், வெளிர் மஞ்சளாக இருக்கும். இதேபோல சூரியகாந்தி, கடுகு, எள் எனப் பல எண்ணெய் வித்துக்களில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய்களும் க்ரூட் வெஜிடபிள் ஆயில் என்றே அழைக்கப்படுகின்றன.

அது வேறு, இது வேறு!

  • க்ரூட் பெட்ரோலியம் என அழைக்கப்படும் கச்சா எண்ணெயும், க்ரூட் வெஜிடபிள் ஆயில் என அழைக்கப்படும் தாவர எண்ணெயும் வேறு வேறு.
  • இதில் க்ரூட் வெஜிடபிள் ஆயில் வகைகளான கடலெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அப்படியே உபயோகிக்கலாம். உணவு அந்த எண்ணெய் வாசனையைக் கொண்டிருக்கும். சில க்ரூட் வெஜிடபிள் எண்ணெய்களை அப்படியே உபயோகிக்க முடியாது. எடுத்துக்காட்டாக, பருத்தி விதை எண்ணெய். கச்சா பருத்தி விதை எண்ணெயில் காசிப்பால் என்றொரு பொருள் இருக்கும். அது உடல் நலத்துக்குக் தீங்கானது.
  • கச்சா சூரியகாந்தி எண்ணெயில், மெழுகு போன்ற ஒரு பொருள் இருக்கும். அதை நுகர்வோர் விரும்புவதில்லை. அதேபோல கச்சா பாமாயிலில் இருக்கும் பாம் ஸ்டியரின் உடல் நலத்துக்கு நல்லதல்ல. அது சுத்திகரிப்பில், பாமோலீன் என்றும் பாம் ஸ்டியரின் என்றும் பிரிக்கப்பட்டு, பாமோலீன் மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
  • இதில் 1970 / 80களுக்குப் பிறகு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களை உபயோகிப்பது நுகர்வோரால் விரும்பப்பட, இன்று பெரும்பாலான எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டே பயன்படுத்தப்படுகின்றன.

தாவர எண்ணெயைச் சுத்திகரித்தல் என்றால் என்ன?

  • சுத்திகரித்தலில் மூன்று நிலைகள் உள்ளன. ரீஃபைனிங் (refining), ப்ளீச்சிங் (Bleaching) மற்றும் டீயோடரைஸேஷன் (Deodarisation).  ரீஃபனிங் என்பது, கச்சா எண்ணெயில் உள்ள ஃப்ரீ ஃபேட்டி (free fatty acids) அமிலங்களை நீக்குவதாகும். அடுத்து எண்ணெயின் நிறம் நீக்கப்படுதல் (beaching). மூன்றாவது நிலையில், எண்ணெயின் மணம் நீக்கப்படுதல் (deodourisation).
  • சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மணமற்றதாக, வெளிர் நிறத்தில், மிகத் தெளிவான திரவம்போல இருக்கும். நம்ம ஊரில் ஃபேர் அண்ட் லவ்லி தடவினால் சருமம் வெளுப்பாகும் என்றொரு மூட நம்பிக்கை இருப்பதுபோல, இந்த சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மீதான நுகர்வோர் மயக்கம் முக்கியக் காரணமாக இருப்பதால், இது அதிகம் விரும்பப்படுகிறது. தேங்காய் எண்ணெய், கடலெண்ணெய், நல்லெண்ணெய் முதலியவற்றை அப்படியே உபயோகிக்கலாம் என்றாலும் இன்று நுகர்வோர் அவற்றைப் பெரிதாக விரும்புவதில்லை.

உணவில் கலப்படம் எவ்வளவு சாத்தியம்?

  • இந்தியாவில் உணவுப்பற்றாக் குறை நிலவிய காலங்களில் கலப்படம் எனது மிகவும் சாதாரணமாக இருந்தது. அரிசியில் கல் என்பது அந்தக் கால உண்மை. அரிசியைப் புடைக்காமல் அன்று உலையில் போட மாட்டார்கள். கடலெண்ணையில் விளக்கெண்ணெய் கலப்பதும், கடலெண்ணையில் பாரஃபின் எண்ணெய் கலப்பதும், டீயில் மரத்தூள் கலப்பதும் சகஜமாக இருந்தன. பருப்பில் கடுகில் என எல்லாவ்வறிலும் கலப்படம் இருந்த காலம் ஒன்று இருந்தது
  • ஆனால், காலப்போக்கில் மிகக் கடுமையான சட்டங்கள் காரணமாக அவை வெகுவாகக் குறைந்துவிட்டன. அரிசியில் கல் போன்ற பிரச்சினைகள், மேம்பட்ட தொழில்நுட்பம் காரணமாகக் குறைந்துவிட்டன. இன்று, கலப்படத்தை எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. வணிகத்தில் போட்டிகளும் அதிகமாகிவிட்டன.
  • இன்று கலப்படம் செய்து அதனால் உயிர்ச் சேதம் ஏற்பட்டால், பொதுவெளியில் அந்த வணிக நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டம், பெயரிழப்பு போன்றவை, கலப்படத்தால் பெறும் லாபத்தைவிட அதிகம்.  எனவே, இன்று எந்தப் பெருநிறுவனமும், தன் தொழிலின் ஒரு பகுதியாகக் கலப்படம் செய்ய மாட்டார்கள் என உறுதியாகச் சொல்லலாம். ஆனாலும், கடந்தகால அனுபவங்களின் எச்சம் நம்முள் இருப்பதால், சிலர் கிளப்பிவிடும் வதந்திகளை மக்கள் நம்பத் தலைப்படுகிறார்கள்.
  • அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அண்மையில் என் வழிகாட்டியும் நண்பருமான ஜெயமோகன் குழுமத்தில் ‘பால்’ தொடர்பாக எழுந்த சர்ச்சை. அவர் வட இந்தியா சென்றிருந்தபோது, ஒரு சாலையோரத் தேநீர்க் கடையில் தேநீர் அருந்தினார். அந்தப் பாலின் சுவையிலேயே அது கலப்படம் செய்யப்பட்ட பால் எனத் தெரிந்துகொண்டார். அதன் சுவை அவருக்கு அன்று முழுவதும் குமட்டலை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது.
  • ஒரு இலையை வைத்தே கானகத்தை உருவாக்கிக்கொள்ளும் இலக்கியவாதி அவருக்குள் இருந்து விழித்துக்கொள்ள, அவர் செயற்கைப் பாலைப் பற்றி எழுதினார். ஒரு காலத்தில் ஊர் முழுக்க கால்நடைகள் இருந்தன. இன்று கால்நடைகள் எங்குமே தென்படுவதில்லை. எனவே, இன்று இந்தியா முழுக்க செயற்கைப்பால்தான் உற்பத்தி செய்யப்படுகிறது என எழுதினார்.
  • அதன் எதிர்வினையாக, “இன்று இந்தியக் கால்நடையில் பால் உற்பத்தித் திறன் அதிகரித்துவிட்டது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போலவே கால்நடைக் கணக்கெடுப்பும் நிகழ்கிறது. அதன்படி, இந்தியக் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்தே உள்ளது. 1970களின் 17 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, இன்று 200 மில்லியன் டன்னுக்கும் அதிகமாகிவிட்டது” என்று தரவுகளை முன்வைத்து எழுதினேன். பாலில் கலப்படம் உண்டு. சிறு ஊர்களில், பேக் செய்யப்படாமல் விற்கப்படும் பாலில் அந்த சாத்தியங்கள் உண்டு. ஆனால், பேக் செய்யப்படும் அமுல், ஆவின், ஆரோக்யா போன்ற பெரும் நிறுவனங்களில் அது சாத்தியமே இல்லை என எழுதினேன்.
  • அதற்கான எதிர்வினைகள் மிகவும் பாமரத்தனமாக இருந்ததுதான் ஆச்சர்யமளித்தது.  நான் உண்மையைக் காண மறுக்கிறேன். தரவுகளை நான் தற்காக்கும் தொழிலுக்குச் சாதகமாக வளைத்து விவாதிக்கிறேன் என்றே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது.  இதுபோன்ற வாதங்கள், நம் பழங்கால அனுபவங்களில் இருந்தே எழுகின்றன.
  • ஆனால், பல துறைகளில், கடந்த 50-60 ஆண்டுகளில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக உணவில் கலப்படம் என்பதையெல்லாம் பெரிய நிறுவனங்கள் செய்யவே இயலாத வண்ணம் சட்டங்களும், நடைமுறைகளும் உருவாகிவந்துள்ளன. எனவே, பெருநிறுவனங்களில் குறிப்பாக பிரபலமான ப்ராண்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள், எண்ணெய்களை, கலப்படம் என்னும் பயமில்லாமல் வாங்கி பயன்படுத்தலாம்.

நன்றி: அருஞ்சொல் (06 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories