- இந்திய குடும்பங்களின் சேமிப்பு 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதேநேரம், இந்தியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் சொத்து மதிப்பு 2 மடங்கு உயர்ந்து இருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
- சேமிப்பு பழக்கத்துக்கு பெயர்போனவர்கள் இந்தியர்கள். எதிர்கால நன்மையை கருதி டெபாசிட், தங்கத்தில் முதலீடு என வகை வகையாக சேமிப்பதில் இந்தியர்கள் வல்லவர்கள். இந்த நிலையில், குடும்ப சேமிப்பு பல தசாப்தங்களில் இல்லாத அளவில் சரிந்து, அவர்களின் கடன் சுமை இருமடங்காக அதிகரித்திருப்பது அவர்களுக்கு மட்டுமின்றி பொருளாதார சூழலுக்கும் எதிர்மறையான சமிஞ்ஞையாகவே பார்க்கப்படுகிறது.
- வீடு, வாகனம் போன்ற அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்ய துவங்கியுள்ளதால்தான், நாட்டில் குடும்பங்களின் சேமிப்பு குறைந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளதுடன், பொருளாதாரத்தில் எவ்வித தாக்கத்தையும் அது ஏற்படுத்தாது என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
- அதுபோல், குடும்பங்கள் தங்களது சேமிப்பை கொண்டு வீடு, வாகனங்களை வாங்கியிருந்தால் மக்களின் தலைமேல் உள்ள கடன் சுமை ஏன் இரண்டு மடங்கு அதிரிக்க வேண்டும் என்பது பொருளியல் வல்லுநர்களின் எதிர்க் கேள்வியாக உள்ளது.
- கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியா மட்டுமின்றி உலகளவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் சொத்துகள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பதே தரவுகள் காட்டும் உண்மை நிலை. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் மட்டும் இந்தியாவில் உள்ளபெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்புரூ.10 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.
- 2023 மே வரையிலான 3 ஆண்டுகளில்இந்தியாவில் உள்ள பெரும் செல்வந்தர்களின் நிகர சொத்து மதிப்பு 84 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் ஆய்வு தெரிவித்துள்ளது. அதேசமயம், சீனாவில் இது 80 சதவீதமாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 74 சதவீதமாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெரும் பணக்காரர்களில் 72 சதவீதம் பேருக்கு பங்குச் சந்தைகளில் இருந்தே அதிக ஆதாயம் கிடைத்துள்ளது. கரோனா காலத்தில் சாமானிய மக்களின் சொத்துகள் கரைந்து போன நிலையில் அதற்கு நேர் மாறாக பணக்காரர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது ஹுருண் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரோனா ஊரடங்கின்போது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ.90 கோடி அதிகரித்து 73 சதவீதம் உயர்வைக் கண்டது.
- 2019-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது2022-ல் நாட்டில் பணக்காரர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. அந்தஆய்வுகளின்படி 2021-22 நிதியாண்டில் 1,103 இந்தியர்கள் தலா ரூ.1,000 கோடிக்கும் மேல் சொத்துகள் சேர்த்துள்ளனர்.
- ப்ளூம்பெர்க் வெளியிட்ட பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் அடிப்படையில், இந்தியாவின் செல்வந்தர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். 2019 செப்டம்பர் முதல் 2023 செப்டம்பர் வரையிலான 4 ஆண்டுகளில் மட்டும் அம்பானியின் சொத்து மதிப்பு 47.3 பில்லியன் டாலரிலிருந்து (ரூ.3.87 லட்சம் கோடி) 92.4 பில்லியன் டாலராக (ரூ.7.57 லட்சம் கோடி) ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
- இந்தப் பட்டியலில் 65.5 பில்லியன் டாலர் (ரூ.5.37 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் கவுதம் அதானி இரண்டாவது இடத்தைதக்கவைத்துக் கொண்டுள்ளார். இவரது சொத்து மதிப்பானது 2019-ல் வெறும் 8.52 பில்லியன் டாலராக (ரூ.70 ஆயிரம் கோடி)மட்டும் இருந்தது இங்கு கூர்ந்து கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் தலைவர் ஷபூர் மிஸ்திரி 31.5 பில்லியன் டாலர் (ரூ.2.58 லட்சம் கோடி) சொத்துகளுடன் பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- இப்படி பட்டியலில் அதிக எண்ணிக்கையிலான பெரும் செல்வந்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு இடம்பிடிக்கும் நிலையில்,சாமானிய குடும்பத்தினர் தங்களது சேமிப்புகளை இழந்து கடனாளியாகியுள்ளது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் மக்களின் வாங்கும் சக்திதான் ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு கிரியா ஊக்கி.
- கடந்த 2008-ம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பெருமந்த நிலை பல நாடுகளை கடுமையாக பாதித்தது. எனினும், இந்தியாவில் அதன் தாக்கம் குறைவாகவே உணரப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் நமது குடும்பங்களின் சேமிப்பு பழக்கம்தான். தற்போது அந்த அடிப்படை ஆதாரமே ஆட்டம் கண்டுள்ளது. பொருளாதாரம் மட்டுமின்றி மக்களின் அன்றாட வாழ்வும் நிதி பாதுகாப்பு இல்லாத நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
- புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தின் மூலம் வருமானத்தை அதிகரித்து, பணவீக்கத்தை கட்டுப்படுத்தி இழந்த சேமிப்பை மீட்டுத் தரும் சூழலை உருவாக்குவதே தற்போது அரசின் முன் உள்ள தார்மீக கடமை. மக்களின் எதிர்பார்ப்பும் அதுவே!
நன்றி: இந்து தமிழ் திசை (25 – 09 – 2023)