TNPSC Thervupettagam

சர்க்கரை நோய்: சீனாவின் முயற்சி பலிக்குமா?

November 14 , 2024 14 hrs 0 min 10 0

சர்க்கரை நோய்: சீனாவின் முயற்சி பலிக்குமா?

  • சமீபத்​தில், சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்​சியில் சீனா முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டி​யுள்ளது. இதுவரை ‘சர்க்கரை நோயைக் கட்டுப்​படுத்த முடியும்; ஆனால், குணப்​படுத்த முடியாது’ என்று இருந்த நிலைமையை சீனா மாற்றிக்​காட்​டி​யுள்ளது. அதாவது, ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ (Stem Cell Therapy) மூலம் சர்க்கரை நோயைக் குணப்​படுத்த முடியும் என்று இதுவரை விலங்​கினங்​களில் மட்டுமே உறுதி​செய்​யப்​பட்​டிருந்த ஆய்வை முதன்​முறையாக மனிதர்​களிடம் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. இது சர்க்கரை நோய்க்கான சிகிச்​சையில் புதியதொரு திருப்பு​முனையை ஏற்படுத்​தி​ உள்ளது. சீனாவின் இந்தச் சாதனைதான் இப்போது உலகளாவிய மருத்​துவர்​களிடம் பேசுபொருளாகி​யுள்​ளது.
  • 2021ஆம் வருடக் கணக்கெடுப்​பின்படி, உலகில் 50 கோடி பேருக்குச் சர்க்கரை நோய் இருக்​கிறது. இந்தியாவில் 7.7 கோடி பேர் சர்க்கரை நோய் உள்ளவர்கள். அடுத்த ஐந்து ஆண்டு​களில் இரண்டரைக் கோடி பேருக்குப் புதிதாகச் சர்க்கரை நோய் வருவதற்கு (Pre-diabetic) வாய்ப்​பிருக்​கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் (ICMR), சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து வெளியிட்​டுள்ள சமீபத்திய புள்ளி​விவரம் ஒன்று தெரிவிக்​கிறது. இதே நிலைமை நீடித்​தால், அடுத்த 15 ஆண்டு​களில் இந்தியாவில் சர்க்கரை நோயாளி​களின் எண்ணிக்கை இரட்டிப்​பாகி​விடுகிற ஆபத்தும் இருக்​கிறது.

சர்க்கரை நோய் தரும் நெருக்​கடிகள்:

  • சர்க்கரை நோயைத் தனிப்​பட்​டதொரு நோய் என்று கடந்துபோக முடியாது. பயனாளிக்குப் பலமுனைத் தாக்குதல்​களைத் தரக்கூடிய நோய் இது. சர்க்கரை நோய் உள்ளவர்​களில் 100இல் 76 பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 35 பேருக்குச் சிறுநீரகப் பாதிப்பு, 30 பேருக்கு இதயப் பாதிப்பு, 27 பேருக்கு விழித்திரை பாதிப்பு, 28 பேருக்குப் புறநரம்பு பாதிப்பு, 4 பேருக்குக் காலில் ரத்தக்​குழாய் பாதிப்பு என இதன் நெருக்​கடிப் பட்டியல் நீள்கிறது. இவற்றைச் சமாளிக்க ஆயுள் முழுக்க மாத்திரை சாப்பிட வேண்டும்; இன்சுலினும் தேவைப்​படும்; மாதம் ஒருமுறை மருத்​துவப் பரிசோதனை, மூன்று மாதங்​களுக்கு ஒருமுறை சிறப்புப் பரிசோதனைகள், வருடத்​துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை கட்டாயம்.
  • உலகளவில் எடுத்த கணக்கெடுப்பில் சுகாதா​ரத்​துக்காக ஒதுக்​கப்பட்ட நிதியில் 10% சர்க்கரை நோய்க்​காகவே செலவிடப்​படு​கிறது என்கிறது சர்வதேச சர்க்கரை நோய் நிறுவனம். இந்தியாவில் ஒரு தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்​பின்படி, சர்க்கரை நோய் உள்ள ஒருவர், தன் மாத வருமானத்தில் சராசரியாக 20% சர்க்கரை நோய் சிகிச்​சைக்கு ஒதுக்க வேண்டும் என்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ என்னும் ஒற்றைத் தீர்வில் சர்க்கரை நோய் குணமாகிறது என்று வந்திருக்கும் செய்தி, மருத்​துவத் துறையினருக்கும் பொதுச் சமூகத்​துக்கும் மகிழ்ச்​சியைத் தந்திருக்​கிறது.

முதலாம் வகைச் சர்க்கரை நோய்:

  • ரத்தச் சர்க்​கரையைக் கட்டுப்​படுத்த இன்சுலின் என்னும் இயக்குநீர் கணையத்தில் சுரக்க வேண்டும். சர்க்கரை நோயில் முதலாம் வகை, இரண்டாம் வகை என இரண்டு வகை உண்டு. முதலாம் வகைச் சர்க்கரை நோய் ‘தன்னுடல் தாக்கும் நோய்’ (Auto immune disease) வகையைச் சேர்ந்தது. இந்த நோயில் கணையத்​திலிருந்து இன்சுலின் துப்பு​ர​வாகச் சுரக்​காது. காரணம், இன்சுலினைச் சுரக்கிற ஐலெட் செல்கள் கணையத்தில் முழுவதுமாக அழிந்​து​போ​யிருக்​கும்.
  • ஆகவே, முதலாம் வகைச் சர்க்கரை நோயாளி​களுக்கு உடலில் சுரக்காத இன்சுலினை ஈடுகட்ட வெளியி​லிருந்து இன்சுலினைச் செலுத்த வேண்டும். இவர்களுக்கு இன்சுலின்தான் மருந்து. வாழ்நாள் முழுவ​திலும் இவர்கள் இன்சுலின் ஊசி போட்டாக வேண்டும். இதற்கு ஆகும் செலவு அதிகம். இந்தியாவில் உள்ள சர்க்கரை நோயாளி​களில் 10% பேர் முதலாம் வகையைச் சேர்ந்​தவர்கள். இவர்களில் பெரும்​பாலானோர் குழந்தைப் பருவத்​திலிருந்தே இன்சுலின் சிகிச்​சையில் இருப்​பவர்கள். இவர்களுக்​குத்தான் சீனா மகிழ்ச்​சியான செய்தியை அறிவித்​திருக்​கிறது.

சீனாவின் ஆராய்ச்சி:

  • சீனாவின் டியான்ஜின் (Tianjin) மாவட்​டத்தில் 25 வயது நிரம்பிய பெண்ணுக்கு முதலாம் வகைச் சர்க்கரை நோய் இருந்தது. பெய்ஜிங் பல்கலைக்​கழகத்தை (Peking University) சேர்ந்த 35 அறிவிய​லா​ளர்கள் கொண்ட குழு ஒன்று இந்தப் பெண்ணுக்கு ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ மேற்கொள்ள முடிவு செய்தது.
  • ‘ஸ்டெம் செல்’ என்பது உடலின் அடிப்படை செல். ஒரு மரத்தின் விதையுடன் ஸ்டெம் செல்லை ஒப்பிடலாம். ஒரு விதையானது மரத்தின் வேர், தண்டு, கிளை, இலை, பூ, காய், கனி எனப் பல அவதாரங்கள் எடுப்​பது​போல், ஒரு ஸ்டெம் செல்லானது மீண்டும் அதே வகை ஸ்டெம் செல்லாக​வும், உடலின் எல்லா உறுப்பு​களுக்கும் தேவையான சிறப்பு செல்களாகவும் பிரிந்து, வளர்ந்து, அந்தந்த உறுப்புகளை உருவாக்குகிற தன்மை கொண்டது.
  • ஒரு ‘ஸ்டெம் செல்’லிலிருந்து நமக்குத் தேவையான செல் வகையை உருவாக்​கிக்​கொள்ள முடியும் என்பது அதன் தனித்​தன்மை. இந்த அறிவியலின் அடிப்​படை​யில்தான் சீனப் பெண்ணுக்கு ‘ஸ்டெம் செல்’ சிகிச்சை மேற்கொள்​ளப்​பட்டது. பெய்ஜிங் அறிவிய​லா​ளர்கள் அந்தப் பெண்ணின் கொழுப்பு செல்களை முதலில் சேகரித்​தனர். அவற்றி​லிருந்து ஸ்டெம் செல்களைப் பெற்றுக்​கொண்​டனர். பின்னர், சில வேதிப்​பொருள்​களைக் கலந்து, அந்த செல்களை ‘பன்திறன் செல்’களாக (Pluripotent cells) மாற்றினர்.
  • பூரி மாவைத் தண்ணீர்​விட்டுப் பிசைந்​து​கொண்​டால்தான் நமக்குத் தேவையான மாவு உருண்டைகள் கிடைக்​கும். அப்படி, ஸ்டெம் செல்களை ‘பன்திறன் செல்’களாக மாற்றிக்​கொண்​டால்தான் அந்தப் பெண்ணுக்குத் தேவையான எண்ணிக்கைக்கு ஐலெட் செல்களைப் பெறுவதற்குச் செயற்கை வழியில் தூண்ட முடியும். அந்தப் பன்திறன் செல்களை எலிகளிடத்தில் பதியம் செய்து, இன்சுலினைச் சுரக்கச் செய்யும் ஐலெட் செல்களாக அவை வளர்கின்றனவா என்பதை உறுதி செய்து​கொண்​டனர்.
  • அதன் பின்னர், எலிகளிட​மிருந்து ‘பன்திறன் செல்’களைப் பிரித்​தெடுத்து, அந்தப் பெண்ணின் வயிற்றுத் தசையில் பதியமிட்​டனர். 75 நாள்கள் கழித்து, அப்பெண்​ணுக்கு இன்சுலின் சுரக்கத் தொடங்​கியது. இதுவரை அவர் போட்டுக்​கொண்டு வந்த இன்சுலின் ஊசி மருந்தை நிறுத்​தி​விட்​டனர்.
  • இப்போது ஒரு வருடம் கடந்து​விட்டது. அப்பெண் இன்சுலின் ஊசி உதவியில்​லாமல் இயல்பான வாழ்க்கை வாழ்கிறார். குறிப்பாக, அவர் இனிப்பு சாப்பிடு​கிறார். என்றாலும், ரத்தச் சர்க்கரை அவருக்கு அதிகரிக்க​வில்லை. ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ மூலம் சர்க்கரை நோயைக் குணப்​படுத்திக் கொண்ட முதல் நபர் என்று மருத்துவ வரலாற்றில் அந்தச் சீனப் பெண் இடம்பெறுகிறார்.

சவால்கள் என்னென்ன?

  • சீனாவின் இந்தச் சாதனையை மருத்துவ உலகம் கொண்டாடும் வேளையில், இந்தியாவின் பிரபல சர்க்கரை நோய் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? ‘இந்தியா​விலும் இதுபோன்ற ஆய்வுகள் நடைபெறுகின்றன. இன்னும் அவை முடிவு காணவில்லை. சீனாவின் சாதனையை வைத்து முதலாம் வகைச் சர்க்கரை நோயாளி​களுக்கு வழக்கமான இன்சுலின் சிகிச்​சையில் உடனடியாக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. இனியும் நிறைய பேரிடம் இந்த ஆய்வை விரிவுபடுத்த வேண்டும்.
  • இப்போது குணமாகி​யுள்​ளதுபோல் மற்றவர்​களுக்கும் சர்க்கரை நோய் குணமாகிறதா? எத்தனை வருடங்​களுக்கு இந்த ஸ்டெம் செல்கள் வேலை செய்யும்? பயனாளியின் தடுப்​பாற்றல் மண்டலத்தில் பிரச்சினை ஏற்படு​கிறதா என்பது போன்ற பல கேள்வி​களுக்கு விடை தேட வேண்டும். இவற்றின் பாதுகாப்புத்​தன்மை குறித்துக் குறைந்தது ஐந்து ஆண்டு​களுக்​காவது கண்காணிக்க வேண்டும். அடுத்து, ஸ்டெம் செல்களைப் பயனாளியின் உடல் ஏற்றுக்​கொள்​கிறதா, நிராகரிக்​கிறதா என்பதும் தெரிய வேண்டும். நிராகரிப்பதாக இருந்​தால், அதைத் தடுக்கும் மருந்​துகளைச் சாப்பிட வேண்டி​யிருக்​கும். அதற்குத் தனியாகச் செலவாகும்.
  • ஒரு நபருக்கு ஸ்டெம் செல்கள் உற்பத்தி செய்வதற்குப் பல மாதங்கள் ஆகும். அதற்கு ஆகும் செலவும் பல லட்சங்​களைத் தாண்டும். இது சாமானியர் கைக்கு எட்டுமா என்பது குறித்தும் யோசிக்க வேண்டும்’ என்று இந்த ஆய்வில் எட்டப்பட வேண்டிய எதிர்​காலத் தீர்வு​களையும் அவர்கள் முன்வைக்​கின்​றனர். மருத்துவ அறிவியல் மனிதர்​களுக்கு மகத்தான தீர்வு​களைத் தந்திருக்​கிறது. சீனாவின் முயற்​சியும் அந்தப் பட்டியலில் சேருமா என எதிர்​காலத்தில் தெரியவரும்!
  • நவ. 14: உலகச் சர்க்கரை நோய் நாள்

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories