- சாதி ஆணவப் படுகொலைகள் தொடர் கதையாகிவிட்ட சூழலில், கொல்லப்படும் ஆணின் வாழ்க்கைத் துணைவிக்கான பாதுகாப்பு / எதிர்காலம் குறித்துச் சமூகத்தில் பலரிடம் தெளிவான பார்வை இல்லை; சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சர்மிளாவின் மரணம் வரை இதற்கான உதாரணங்கள் நீள்கின்றன. பாதிக்கப்படும் பெண்களுக்கு வெறுமனே பச்சாதாபம் காட்டுவதைத் தாண்டி, அவர்களுக்கான சட்டபூர்வமான உதவிகளை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வும் மிகமிக அவசியம்.
- சென்னை பள்ளிக்கரணையில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சர்மிளாவும் (22), இருசக்கர வாகனம் பழுதுபார்க்கும் வேலை செய்துவந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரவீனும் (25) காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
- மூன்று மாதங்கள் கடந்த நிலையில், சர்மிளாவின் அண்ணனும் அவரது நண்பர்களும் பிரவீனைத் தாக்கிக் கொன்றனர். இச்சம்பவத்துக்குப் பின்னர், பிரவீனின் வீட்டில் தங்கியிருந்த சர்மிளா, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொண்டார்.
- இந்த நிகழ்வில், சர்மிளா சாதி ஆணவப் படுகொலையினால் பாதிக்கப்பட்ட நபர்; அதாவது தண்டனைக்குரிய ஒரு கொடுங்குற்றத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட ‘பாதிக்கப்பட்டவர்’ (Victim). இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை நாம் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்டவரும் பாதிக்கப்படுதலும்:
- இந்தியக் குற்றவியல் நீதி அமைப்பில், ஒரு தண்டனைக்குரிய குற்றம் நடைபெற்று, அதனால் பாதிப்புக்குள்ளாகும் நபர், குற்றம் நடைபெற்ற நேரத்திலிருந்து ‘பாதிக்கப்பட்டவர்’ ஆகிறார். குற்றத்தினால் பாதிப்படைதல் என்பது இந்தியச் சமூகத்தில் இரண்டு நிலைகளில் நிகழ்கிறது.
- முதன்மை நிலை பாதிப்பு (Primary victimization) என்பது பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் புரிந்தவருக்கும் இடையில் இருப்பது. இரண்டாம் நிலை பாதிப்பு (Secondary victimization) குற்றத்துக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர் சமூகத்துடன் தொடர்புகொள்ளும்போது ஏற்படுவது என்று குற்றவியல் கோட்பாட்டாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
- இரண்டாம் நிலையானது, பெரும்பாலும் முதன்மை நிலையைவிடக் கூடுதல் பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இது பாதிக்கப்பட்டவரை, பல்வேறு வடிவங்களில் மீண்டும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை உள்ளிட்ட பல்வேறு வன்முறை வடிவங்களாக இது நேர்கிறது.
- பாதிக்கப்பட்ட பெண்கள் பாதிப்பிலிருந்து மீண்டுவந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப, குடும்பம் தொடங்கி அனைத்து சமூக நிறுவனங்களும் அவர்களுக்குத் துணைபுரிய வேண்டும். அதற்கு மாறாக, நடைபெற்ற குற்றம் குறித்து சமூகத்தில் உருவாக்கப்படும் எதிர்மறைக் கருத்துகள் அப்பெண்களை மீண்டும்பாதித்து, மீளாத அச்ச உணர்வை அவர்களிடம்விதைக்கின்றன. பெரும்பாலும், கொடுங்குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பொது வெளியில் சாதாரணமாக இயங்க முடியாமல் போவதற்கு இது முக்கியக் காரணம்.
குற்றவியல் நீதி அமைப்பு:
- ஒவ்வொரு சாதி ஆணவப் படுகொலையில் பாதிப்புக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரலாகப் பல்வேறு சமூக–அரசியல் இயக்கங்களும், செயல்பாட்டாளர்களும் களத்தில் நிற்கிறார்கள். சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தனிச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் தொடர்ந்து நீடிக்கிறது.
- இதனுடன், இந்தியக் குற்றவியல் நீதி அமைப்பும், சமூகமும் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கைக்கு எந்தவிதமான ஆதரவு அமைப்புகளை உருவாக்கியிருக்கின்றன என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். குற்றவியல் நீதி அமைப்பில் ‘மறுசீரமைப்பு நீதி’ (Restorative justice) என்பது, பாதிக்கப்பட்ட நபரோடு துணைநின்று அவர் எதிர்கொண்ட குற்றத்தின் அனைத்துப் பங்குதாரர்களையும் அக்குற்றத்தின் பாதிப்புகளைக் களைவதற்கான செயல்பாடுகளைக் கூட்டாக மேற்கொள்ள வலியுறுத்துகிற கருத்தாகும்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ‘மறுசீரமைப்பு நீதி உதவி’ என்பது குற்றவியல் நீதி அமைப்புக்கு அப்பாற்பட்டும், பாதிப்பிலிருந்து பாதிக்கப்பட்டவரை முழுமையாக மீட்பதையும் குறிக்கோளாகக் கொண்டது. இது அடிப்படையில் இரண்டு நோக்கங்களை உள்ளடக்கியது.
- ஒன்று, பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டெடுத்து இயல்பு நிலைக்குத் திருப்புதல்; மற்றொன்று, அவர் மீண்டும் பாதிக்கப்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கையாளுதல். இந்த இரண்டாம் நோக்கத்துக்கு யார் உத்தரவாதம் தருவது என்பது முக்கியமான கேள்வி. குற்றத்தினால் நேரும் பாதிப்புகளில் ஒன்றான உளவியல் பாதிப்புக்கு (ஒரு வகையில் இதுவும் இரண்டாம் நிலை பாதிப்படைதலின் தொடர்ச்சியே) என்ன மாதிரியான தீர்வு முகமைகள் நம்மிடம் உள்ளன?
பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மையங்களின் நிலை:
- டெல்லி மாணவி நிர்பயா வழக்குக்குப் பிறகு, மத்திய அரசின் மகளிர் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், வன்முறையால் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களின் பாதுகாப்பு-மறுவாழ்வுக்காகச் செயல்படுத்திவரும் திட்டங்களில் ஒன்று ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ (One Stop Centres – OSC).
- இந்த மையங்கள் குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை உள்ளிட்ட அனைத்து வகையான வன்முறைகள் / குற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்குத் தற்காலிக அடைக்கலம் தரும் இடமாகச் செயல்படுகின்றன. அவர்களுக்கு நேரும் பல்வேறு வகைப்பட்ட பாதிப்புகளுக்கும் இங்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களை இயல்பு நிலைக்குத் திருப்பும் பணியை இந்த மையங்கள் மேற்கொள்கின்றன.
- இந்தியாவில் 729 மாவட்டங்களில் 733 மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இத்திட்டத்துக்கு நிர்பயா நிதி மூலம் அளிக்கப்பட்ட ரூ.735 கோடி நிதியில், ரூ.328 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டிருப்பதாக பட்ஜெட் நிர்வாகப் பொறுப்புக்கூறுதல் மையம் (Centre for Budget and Governance Accountability [CBGA]) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 38 ஒன் ஸ்டாப் மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இரண்டு மையங்கள் இயங்குகின்றன. தமிழ்நாட்டில் இந்நிதியில் 2023ஆம் ஆண்டு வரை 23% மட்டுமே இம்மையங்களின் செயல்பாட்டுக்காகச் செலவு செய்யப்பட்டிருக்கிறது.
- எனவே, இம்மையங்களின் செயல்பாடுகளை ஆராய வேண்டியது அவசியமாகிறது. இது ஒருபுறம்இருக்க, இப்படியான மையங்கள் செயல்பட்டுக்கொண்டிருப்பதுகூடத் தெரியாமல்தான் பாதிப்புக்கு உள்ளாகும் பெரும்பாலான பெண்கள் இருக்கிறார்கள்.
- சாதி ஆணவப் படுகொலையினால் பாதிக்கப்படுவர்களுக்காக, பாதிப்புக்கு முன்பாகவே நேரடியான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நபருக்காக - அவர்களது குடும்பத்துக்காக ஒரு பாதுகாப்பு இல்லத்தை மாவட்டம்தோறும் உருவாக்குவது குறித்து மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என ‘சக்திவாகினி எதிர் யூனியன் ஆஃப் இந்தியா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதனை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
- சமூக அழுத்தத்தில், பெண்கள் எங்கு பாதிப்புகளை எதிர்கொள்கிறார்களோ அங்கேயே (அதாவது குடும்பம் / வீடு உள்ளிட்ட பாதிப்புகள் மீண்டும் தொடர வாய்ப்புள்ள இடங்களிலேயே) இருக்க வேண்டிய சூழல்தான் பெரும்பாலும் நிலவுகிறது.
- பாதிக்கப்பட்ட பெண்களின் அச்சத்தைப் போக்கி அவர்களுக்கு நம்பிக்கையும் பாதுகாப்பும் வழங்க வேண்டிய இடங்களாக இம்மையங்கள் இருக்க வேண்டியதை அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் அல்லவா? சாதி ஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாக்க அரசின் முகமைகள் எந்தவித தன்னார்வ நடவடிக்கையையும் தமிழ்நாட்டின் தலைநகரிலேயே எடுக்கவில்லை என்றால், கிராமப்புறங்களின் நிலை என்ன?
- இந்தியாவின் குற்றவியல் அமைப்புகள் குற்றங்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கான உதவிகளை (Victim assistance) சாதி ஆணவப் படுகொலைக்கும் சேர்த்தேதான் வழங்கியிருக்கின்றன. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை.
யார் பொறுப்பு?
- ஆக, சர்மிளா தனது உயிரை மாய்த்துக்கொண்டதற்கு யார் பொறுப்பு? ஊடகங்களில், பொது நிகழ்வுகளில் அவரின்கண்ணீரை மட்டுமே பார்த்துக் கதை சொல்லிக்கொண்டிருந்த சமூகமா? சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச் சட்டத்தையும் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் இன்னமும் உறுதிசெய்யாத அரசு அமைப்புகளா? அல்லது ஒவ்வொரு மரணத்தையும் செய்தியாக மட்டுமே கடக்கப் பழகியிருக்கும் பொது சமூகத்தின் சாதிய மனநிலையா? இதற்கெல்லாம் எப்போதுதான் விடை கிடைக்கும்?
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 05 – 2024)