- வைர வர்த்தகத்தில் உலகின் மையமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் உருவெடுக்கவுள்ளது. இந்நகரம் சமீப காலம் வரை சர்வதேச அளவில் வைர மெருகூட்டலுக்கான தலைநகரமாக மட்டுமே அறியப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அதி நவீன சூரத் வைர மையம் (எஸ்டிபி) விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில், சூரத் இனி உலக வைர வர்த்தகத்தின் கூரையாக மாறும். உலக நாடுகளில் வெட்டியெடுக்கப்படும் 95 சதவீத வைரங்கள் சூரத் நகரில்தான் மெருகூட்டப் படுகின்றன. இதனால் அது வணிகர்களால் டயமண்ட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது.
- பல தசாப்தங்களுக்கு முன்பு சூரத் நகரில் வணிகத்தை தொடங்கிய ஏழை கைவினைக் கலைஞர்கள் பலர் இன்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். தற்போது இந்நகரில் அமைந்துள்ள 6 ஆயிரம் சிறு மற்றும் பெரிய வைரத் தொழில்கள் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், வைரத்தை வெட்டுதல், பட்டைதீட்டுதல், அதை விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்படுள்ளது.
என்ன சிறப்பம்சம்?
- அமெரிக்காவில் உள்ள ராணுவ தலைமையகமான பென்டகன்தான், அதிக பரப்பில் இயங்கி வரும் உலகின் விஸ்தாரமான அலுவலக கட்டடங்களை உள்ளடக்கிய தளமாக கடந்த 80 ஆண்டுகளாக கோலோச்சி வருகிறது. பென்டகன் அமைந்துள்ள மொத்த தளப் பரப்பு 66.73 லட்சம் சதுர அடியாகும். ஆனால், சூரத்தில் அமைக்கப்பட்டுள்ள எஸ்டிபி வைர சந்தை பென்டகன் சாதனையை முறியடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எஸ்டிபி 35.5 ஏக்கர் வளாகத்தில் 67.28 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
- எஸ்டிபி வளாகத்தில் 9 டவர்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு டவரிலும் 15 தளங்கள் 81 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. இதில் 4,700 வைர வணிக அலுவலகங்கள் செயல் பட முடியும். 65,000 பேர் பணியாற்ற முடியும். ஒவ்வொரு தளங்களுக்கும் சென்று வருவதற்காக 131 மின்தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன.
- 200 காவலர்கள் 4,000 ஸ்மார்ட் சிசிடிவி கேமராக்கள் மூலம் வளாகத்தின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பர். இரண்டு தளங்களில் 4,500 கார்கள் மற்றும் 10,000 பைக்குகளை நிறுத்தும் வகையில் இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு டவரிலிருந்து மற்றொரு டவருக்கு செல்ல விரும்பும்போது தரைதளத்துக்கு செல்லாமல் 6 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் செல்லும் வகையில் எஸ்டிபி வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தக் கட்டிடத்தை இந்திய கட்டிடக் கலை நிறுவனம் மார்போ ஜெனிஸ் வடிவமைத்துள்ளது. இந்தக் கட்டிடத்தைக் கட்ட 4 ஆண்டுகள் ஆகியுள்ளன.
மும்பையின் முக்கியத்துவம் குறையும்
- வைரங்களை வெட்டுதல் மற்றும் மெருகூட்டுதல் போன்ற வேலைகள் சூரத்தில் நடக்கிறது. ஆனால், அவற்றை வணிகம் செய்வதற்கு வியாபாரிகள் மும்பை செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அந்த குறையினை தீர்ப்பதற்கும், செலவு, பயண நேர விரயத்தை தவிர்ப்பதற்கும் வைரத்தின் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் ஒரே இடத்தில் நடைபெறும் வகையில் மிகப்பெரிய முதலீட்டில் எஸ்டிபி உருவாக்கப்பட்டுள்ளது.
- எஸ்டிபி மூலம் 1.5 லட்சம் பேருக்கு வைரம் வணிகம் சார்ந்த தொழில்களில் நேரடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான திட்டம் 2017 காலகட்டத்தில் உருவானதாகவும், குழு உறுப்பினர்கள் லாப நோக்கமற்ற இந்த எஸ்டிபி அமைப்பை உருவாக்க ரூ.3,200 கோடி வரை நிதி திரட்டியதாகவும் தெரிவிக்கின்றனர்.
- கஜோத் அருகே டயமண்ட் ரிசர்ச் அண்ட்மெர்கன்டைல் (டிரீம்) சிட்டியில் அரசிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்தி எஸ்டிபி சந்தையை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டாலும் கரோனா காரணமாக சுணக்க நிலை ஏற்பட்டது. இருப்பினும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2022-ல் இந்த திட்டம் முடிக்கப்பட்டது. இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து இந்தாண்டு நவம்பரில் எஸ்டிபி செயல்பாட்டுக்கு வரும் என்று வைர வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
வைரச் சந்தையில் கோலோச்சும் இந்தியா
- உலகளவில் வைர வர்த்தக சந்தையின் மதிப்பு 2022-ல் 95 பில்லியன் டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.8 லட்சம் கோடி. வைரத்துக்கான தேவை அதிகரித்து வருவதையடுத்து உலக வைர சந்தை 5.2 சதவீத வளர்ச்சியை எட்டி 2030-ல் 140 பில்லியன் டாலராக அதிகரிக்கும் (ரூ.11.50 லட்சம் கோடி) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்தியாவில் வைர சந்தையின் மதிப்பு 2022 நிலவரப்படி 19 பில்லியன் டாலராக (ரூ.1.56 லட்சம் கோடி) உள்ளது. இது, 26 பில்லியன் டாலராக 2030-ல் (ரூ.2.13 லட்சம் கோடி) அதிரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வைரங்கள், ரத்தினங்கள், ஆபரணங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டே எஸ்டிபி சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த வர்த்தக மையம் இந்தியாவின் வைரம், ரத்தினம் மற்றும் ஆபரணங்கள் சார்ந்த தொழிலை உலகமே கவனிக்கும் வகையில் அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (14– 08 – 2023)