TNPSC Thervupettagam

சர்வதேச நீதிமன்றம்

January 24 , 2024 216 days 369 0
  • தனி நபர்களுக்கோ, அமைப்புகளுக்கோ, மாநிலங்களுக்கோ பிரச்சினை ஏற்படும்போது அதைத் தீர்க்க மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் போன்ற நீதித் துறை அமைப்புகள் உள்ளன. அந்த வகையில் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல்கள் உருவாகும்போது அதற்குத் தீர்வு காண உருவாக்கப்பட்ட அமைப்பு சர்வதேச நீதிமன்றம்.
  • இஸ்ரேல்-ஹமாஸ் போரில், இஸ்ரேல் மீது இனப்படுகொலை வழக்கைத் தென் ஆப்ரிக்கா தொடுத்ததைத் தொடர்ந்து சர்வதேச நீதிமன்றம் உலகம் முழுவதும் தற்போது கவனம் பெற்றிருக்கிறது.

சர்வதேச நீதிமன்றம் எதற்காக

  • சர்வதேச நீதி மன்றம் (ICJ) ஐக்கிய நாடுகள் அவையின் முதன்மை நீதித் துறை அமைப்பாகும். இரண்டு நாடுகளுக்கு இடையே ஏற்படும் மோதல்களைத் தீர்ப்பதற்காக 1945இல், ஐக்கிய நாடுகள் அவையினால் சர்வதேச நீதிமன்றம் நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் நெர்தர்லாந்தின் தி ஹேக் நகரில் அமைந்திருக்கிறது.
  • சர்வதேச நீதிமன்றம் 15 நீதிபதிகளைக் கொண்டிருக்கிறது. நீதிபதிகள் அனைவரும் .நா. பொது அவை - பாதுகாப்பு மன்றத்தால் ஒன்பது ஆண்டுக் காலப் பதவிக் காலத்
  • துக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் டானஹ்யூ உள்ளார்.
  • ஏன் முக்கியம்? .நா. அவையில் உள்ள 193 உறுப்பு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேச அளவில் செயல்படும் ஒரே நீதிமன்றம் இதுமட்டுமே. மேலும் உலகளவில் அமைதி, பாதுகாப்பு ஏற்பட முக்கியப் பங்களிப்பை அளிப்பதுடன் இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சினை, மோதலாக மாறாமல் இருப்பதற்கான தீர்வையும் சர்வதேச நீதிமன்றம் வழங்குகிறது.

எம்மாதிரியான வழக்குகள் பதியப்படுகின்றன

  • .நா. அவையில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாது, .நா. அவையால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள், நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் சட்ட விளக்கங்கள் சார்ந்த கேள்விகளுக்கும் சர்வதேச நீதிமன்றம் ஆலோசனைகளை அளித்துவருகிறது.இவ்வாறாக, ‘சர்ச்சைக்குரிய வழக்குகள்’, ‘ஆலோசனை நடவடிக்கைகள்என இரண்டு வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குகள் பதியப் படுகின்றன.
  • 2023 டிசம்பர் 29 அன்று, இஸ்ரேல் மீது இனப் படுகொலை குற்றச்சாட்டைத் தொடுத்த தென் ஆப்ரிக்காவின் வழக்கைச் சர்ச்சைக்குரிய வழக்குக்கு உதாரணமாகக் கொள்ளலாம். மேலும், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட முதல் சர்ச்சை வழக்கும் இதுவே.
  • ஆலோசனை நடவடிக்கைகளுக்கு உதாரணமாக, காலநிலை மாற்றம் தொடர்பாக உறுப்பு நாடுகளின் கடமைகள் என்னென்ன என்பது குறித்து ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு சர்வதேச நீதிமன்றத்திடம் .நா. அவை 2023 மார்ச் மாதம் கோரிக்கை விடுத்ததைக் குறிப்பிடலாம். இது போன்ற வழக்கு விசாரணைகளில் நீதிபதி கூட்டுத் தீர்ப்பையோ தனிப்பட்ட கருத்தையோ முடிவாக வழங்கலாம்.

யாரெல்லாம் வழக்கு பதியலாம்

  • சர்வதேசச் சமூக நலன் பாதிப்புக்குள்ளாகும்போது, மோதலில் நேரடியாகத் தொடர்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் .நா. அவையில் உள்ள
  • எந்த ஒரு உறுப்பு நாடும், மற்ற உறுப்பு நாட்டுக்கு எதிராகவும் வழக்கைத் தொடுக்கலாம்.
  • இதற்குச் சான்றாக, ‘காம்பியா எதிர் மயன்மார்வழக்கை எடுத்துக்கொள்ளலாம். ரோஹிங்கியா முஸ்லிம் விவகாரத்தில் மயன்மாருக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டைச் சர்வதேச நீதிமன்றத்தில் காம்பியா முன்வைத்தது. இந்த மோதலில் ஆப்ரிக்க நாடான காம்பியாவுக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றாலும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் சார்பாக மயன்மாருக்கு எதிராக இவ்வழக்கை காம்பியா தொடுத்தது.

சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகள் என்ன

  • வழக்கு விசாரணைகளில் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு இல்லை. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தங்கள் தேசிய அதிகார வரம்புகளுக்கு உட்பட்டுச் செயல்படுத்துவது சம்பந்தப்பட்ட நாடுகளைப் பொறுத்தது.
  • பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சர்வதேச நீதிமன்றத்தின் முடிவுகளை .நா. அவையின் உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு இணக்கமான போக்கையே கடைப்பிடிக்கின்றன.
  • மாறாக, நீதிமன்றத் தீர்ப்பை ஒரு நாடு ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் .நா.வின் வரையறையின்படி சம்பந்தப்பட்ட வழக்கு .நா. பாதுகாப்பு மன்றத்துக்கு மாற்றப்பட்டு வாக்களிப்பின் மூலம் சம்பந்தப்பட்ட நாட்டுக்கு எதிராக அங்கு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
  • இதன் முடிவில் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான பொருளாதாரத் தடைகள் போன்ற நடவடிக்கைகளை .நா. பாதுகாப்பு மன்றம் எடுக்கக்கூடும்.

ஐசிஜே - ஐசிசி வேறுபாடு

  • சர்வதேச நீதிமன்றமானது (ICJ), சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத் திடமிருந்து (ICC) முற்றிலும் வேறுபடுகிறது. .நா. அவையின் ஓர் அங்கமாக உள்ள சர்வதேச நீதிமன்றம், நாடுகளுக்கு இடையேயான வழக்குகளைக் கையாள்கிறது.
  • சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், .நா. அவையினால் அங்கீகரிக்கப்பட்டபோதிலும் சுயாதீனமாகச் செயல்படும் அமைப்பு. போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்ற வழக்குகள் போன்றவை குற்றவியல் நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories