TNPSC Thervupettagam

சர்வதேச மொழிபெயர்ப்பு நாள் செப்டம்பர் 30 A அ - சங்கடங்கள் சமரசங்கள் சறுக்கல்கள்

October 1 , 2023 413 days 302 0
  • இலக்கிய மொழிபெயர்ப்பு குறித்து சில ஆயத்த கருத்துகள் பொதுவாசகர்களிடையே உண்டு. இரண்டு மொழிகள், இரண்டு நாடுகள், இரண்டு கலாச்சார – பண்பாடுகளுக்கிடையிலான பாலம் என்பதைத் தாண்டியும் பல்வேறு கூறுகள் மொழிபெயர்ப்பில் பொதிந்திருக்கின்றன.
  • சுயமாக எதையும் தனது பிரதியில் சேர்த்துவிடலாகாது என்கிற ஆதாரமான விதியையும் தாண்டி, மொழிபெயர்ப்பாளன் என்கிற தனித்துவ ஜீவராசிக்கு வேறு சில கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. ஒருவன் எவ்வளவு திறமைவாய்ந்த எழுத்தாளனாக, இரு மொழிகளிலும் தேர்ச்சியுடையவனாக இருந்தாலும் எல்லா நூல்களையும் மற்றொரு மொழியில் பரிபூரணமாக மொழிபெயர்த்துவிட முடியாது என்கிற ஞானம் அவனுக்கு முதன்மையாக இருந்தாக வேண்டும். மொழிபெயர்க்கவியலாத்தன்மை (Untranslatability) ஒவ்வொரு மொழியிலும், ஒவ்வொரு கலாச்சாரத்திலும் உண்டு. ஒரு மண்ணின் சுயத்தை, சாயலை அதற்கு அந்நியமானதொரு மொழியில் ஓரளவுக்கேனும் பெயர்த்தெடுப்பதற்கு சில விசேஷமான உத்திகள் தேவைப்படுகின்றன. ஆப்ரிக்க இலக்கியத்தின் பிதாமகனான சினுவா ஆச்செபேவின் Things Fall Apart ஆங்கில நாவலாக இருந்தாலும், சம்பிரதாய பிரித்தானிய ஆங்கிலநடையில் எழுதப்படாமல் நைஜீரிய சொலவடைகளுக்கும், கலாச்சாரத் தனித்துவத்துக்கும் ஏற்றாற்போல நாவலின் குரலை ‘இக்போ’த்தனமாக மாற்றி எழுதிருப்பது உதாரணம். (’இக்போ’ என்பது நைஜீரியாவின் பயஃப்ரா பகுதியிலுள்ள பெரும்பான்மை இனக்குழுவின் மொழி). இதைப் போன்ற சிக்கல்களை வெற்றிகரமாக இல்லாவிட்டாலும் ஓரளவு சமாளித்துக்கொண்டு தனது பிரதியில் மூலப்படைப்பாளியைக் கொண்டுவர மொழி பெயர்ப்பாளன் எதிர்கொள்ளும் சங்கடங்களும், சறுக்கல்களும், சமரசங்களும் எண்ணற்றவை.

சங்கடங்கள்

  • மொழிபெயர்ப்பாளனுக்கு மூலநூலில் இடம்பெற்றுள்ள அவனுக்கு உவப்பில்லாத விஷயங்களைத் தவிர்த்தோ தன் விருப்பத்துக்கேற்றபடி மாற்றியோ மொழி பெயர்ப்பதற்கு உரிமை கிடையாது. நான் மொழி பெயர்த்த மிக அருமையான கதைகள் சிலவற்றில் வசைச்சொற்களும் மிகவும் ஆபாசமான காட்சிகளும் இருந்தன. இவற்றைத் தணிக்கை செய்யாமல்தான் மொழிபெயர்த்திருக்கிறேன். உதாரணமாக அருந்ததி ராயின் ‘பெருமகிழ்வின் பேரவை’ நாவலில் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் திருநங்கையர் விரக்தியிலும் கோபத்திலும் உச்சரிக்கும் ஆபாச வசைச்சொற்களை ‘அப்படியே’ மொழிபெயர்த்திருப்பதற்காக என் மதிப்புக்குரிய இலக்கிய குருமார்கள் இருவர் என்னைக் கண்டித்தார்கள். அச்சொற்கள் அதிர்ச்சிமதிப்பிற்காக சேர்க்கப்பட்டவையல்ல, அவை அந்தப் பாவப்பட்டவர்கள் மீது வாசகனுக்கு அனுதாபத்தைத்தான் ஏற்படுத்துகின்றனவே ஒழிய அருவருப்பையல்ல என்கிற என் சமாதானத்தை அவர்கள் ஏற்கவில்லை.
  • சமீபத்தில் எனக்கேற்பட்ட அனுபவத் தையும் சொல்ல வேண்டும். தற்போது நான் மொழிபெயர்த்துவரும் ஸ்காட்லாந்து தேசத்து நாவல் ஒன்றுக்காக கிளாஸ்கோ நகருக்கு அருகில் உள்ள சர்வதேச எழுத்தாளர் முகாமில் தங்குவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். அந்த நாவலில் வருகின்ற வசனங்கள் முழுக்கவும் ஸ்காட்டிய கொச்சை மொழியில் அமைந்தவை. ஸ்காட்லாந்து பேச்சுவழக்கு அகராதியின் துணைக்கொண்டு அவற்றைப் புரிந்துகொண்டு மொழிபெயர்த்துவந்தேன். இடையிடையே சில கதாபாத்திரங்கள் குடித்துவிட்டுப் பேசும் மிக ஆபாசமான வசனங்களும் வருகின்றன. அவற்றில் ஒரு குறிப்பிட்ட வசனத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. என்னுடன் தங்கியிருந்த எழுத்தாளர்களில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்கள் யாருமில்லை. சில நாள் கழித்து ஒருவர் வந்தார். ஆனால், அவர் ஒரு பெண். அந்தக் குடிகாரன் நீளமாகப் பேசும் வசனத்துக்கான அர்த்தத்தை அவரிடம் கேட்பதற்குக் கூச்சமாக இருந்தது. பிறகு திடீரென்று ஒருநாள் முகாமில் மின்சாதனங்களைப் பழுதுபார்ப்பதற்காக ஓர் இளைஞர் வந்தார். அவர் பேசுவதிலிருந்தே தெரிந்தது அசலான ஸ்காட்டிஷ்காரர் என்று. அவரிடம் நட்பு பாராட்டிக்கொண்டு, மெதுவாக நாவலின் அந்தப் பக்கத்தைக் காட்டி, அந்தப் பாத்திரம் என்ன சொல்லவருகிறது என்று கேட்டேன். அவர் படித்துப் பார்த்துவிட்டு, முகம் சிவக்க, “என்னால் வார்த்தையாகச் சொல்ல முடியாது, எழுதி வேண்டுமானால் காட்டுகிறேன்” என்று சுத்தமான ஆங்கிலத்தில் எழுதித் தந்தார்!

சறுக்கல்கள்

  • விளதிமீர் நபக்கோவ் என்கிற புகழ்பெற்ற எழுத்தாளர் ‘மொழிபெயர்ப்பாளனின் மூன்று பாவங்கள்’ என்ற கட்டுரையில் மொழிபெயர்ப்பாளர் கள் புரிகின்ற முக்கியத் தவறுகளாக அறியாமையின் காரணமாகத் தவறாக மொழிபெயர்த்தல், புரியாத சொற்களைத் தவிர்த்துவிடுதல், பிரதியின் நுட்பத்தைக் கொண்டுவர இயலாமல் எளிமைப் படுத்திவிடுதல் என்று மூன்று பாவங்களைச் சுட்டிக் காட்டுகிறார். இவற்றில் ஒரு பாவத்தையேனும் புரியாத மொழிபெயர்ப்பாளர் எவரும் இருக்க முடியாது.
  • பண்டைக் காலம்தொட்டே தமிழில் மொழிபெயர்ப்புக்கான பாரம்பரியம் இருந்துவந்தாலும் நவீனத் தமிழ் இலக்கியத்தின் மொழிபெயர்ப்பு பாரதியிலிருந்து தொடங்குகிறது எனலாம். மிகச் சிறந்த எழுத்தாளர்களாக அறியப்பட்ட பலரும் மொழிபெயர்ப்புகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்நிய இலக்கியங்களை நமது மொழியில் கொண்டுவந்துசேர்த்த அவர்தம் பணியை நகைப்புக்குள்ளாக்குவது நமது நோக்கமல்லவென்றாலும், மொழிபெயர்ப்புகளில் தவிர்க்கமுடியாமல் நிகழ்ந்துவிடுகிற சறுக்கல்களை சுட்டிக்காட்டுவதற்காக சில உதாரணங்களைச் சொல்லலாம்.
  • நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் நாள்தோறும் பெருகிவருகின்றன. ஆனால், புதுமைப்பித்தன் என்கிற மேதை அவற்றையெல்லாம் பாடமாகக் கற்றுத் தேராமலேயே அற்புதமான மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கும் சறுக்கல்கள் நிகழ்ந்திருக்கின்றன. ‘எமனை ஏமாற்ற’ என்கிற ஜப்பானியக் கதையில் எம்மோதாவோ என்ற ஜப்பானிய மரணதெய்வத்தை இந்துக் கடவுளாக மாற்றி ‘எமதர்மன்’ என்று மொழி பெயர்த்திருக்கிறார். ‘பலிபீடம்’ குறுநாவலில் பல வசனங்கள் தமிழக வட்டார வழக்கில் வருகின்றன (“அவாளவாளுக்கு எது பிரியமோ அதுபடி..”).
  • தி.ஜானகிராமன் மிக அற்புதமான எழுத்தாளர்; அரிதாகவே மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்திருக்கும் பேர் லாகர்க்விஸ்ட்டின் ‘குள்ளன்’ என்ற ஸ்வீடன் நாட்டு நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலேயே ‘தம்பிடிக்கும் பிரயோஜன மில்லாத...’ என்ற வாக்கியம் வருகிறது.

சமரசங்கள்

  • மொழிபெயர்ப்பாளன் செய்துகொள்ள நேர்கின்ற சமரசங்களைப் பட்டியலிட்டால் அது நீளமாகச் செல்லும். மொழி சார்ந்த சமரசங்களை மட்டும் இங்கே குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். பொதுவாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது எதிர்ப்படும் முக்கியமான சிக்கல், மிக நீண்ட கூட்டுவாக்கியங்கள். ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகக் கூட்டுவாக்கியத்தை எழுதிக்கொண்டே போவதைப்போல, தமிழில் எழுதுவதற்கு நமது இலக்கணம் அனுமதிக்காது. தொடர்வாக்கியமாகத்தான் எழுதமுடியும். பண்டையத் தமிழ்ச் செய்யுள்களில் முற்றுப்புள்ளியே இல்லாமல் பக்கம் பக்கமாகச் செல்வதைக் காணமுடியும். ஆனால், நவீனத் தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்பாளனுக்கு இது பெரிய சவால்தான். நீளமான வாக்கியங்களை, சிறு வாக்கியங்களாக வெட்டி வெட்டி மொழிபெயர்க்கும்போது மூலப்படைப்பின் வீரியம் நீர்த்துப்போகின்றது.
  • வட்டார வழக்குகளை மொழிபெயர்ப்பது இன்னொரு சவால். ஒருவிதத்தில் அது சாத்தியமும் அல்ல. அடிக்குறிப்புகள் புனைவு வாசிப்பில் தளர்ச்சியைக் கொண்டுவரும். மரபுத்தொடர்களை, அவை மரபுத்தொடர் என்றே அறியாமல் நேரடியாக மொழிபெயர்த்திருக்கும் உதாரணங்கள் தமிழில் நிறைய உண்டு.
  • போர்த்துகீசிய எழுத்தாளரான ஜொஸே சரமாகோ நிறுத்தக்குறிகளே இல்லாமல் எழுதுவார். அவருடைய நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களும், அதே பாணியில்தான் மொழிபெயர்த்திருக்கிறார்கள். ஆனால், அவருடைய ஒரு நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டபோது, மொழிபெயர்ப்பாளர் எல்லாவிதமான நிறுத்தக்குறிகளையும் வாக்கியங்களில் சேர்த்திருக்கிறார்.
  • இப்படி மொழிபெயர்ப்பாளர்களின் சித்து விளையாட்டுகள் கணக்கற்றவை.

நன்றி: இந்து தமிழ் திசை (01 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories