TNPSC Thervupettagam

சவால்கள் நிறைந்த உள்நாட்டுப் பாதுகாப்பு

November 28 , 2023 411 days 253 0
  • அண்மையில் கேரள மாநிலம் கொச்சி நகருக்கு அருகிலுள்ள களமச்சேரியில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவா்கள் கலந்து கொண்ட மத பிராா்த்தனைக் கூட்டம் ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியது.
  • காட்சி ஊடகங்களும், சமூக வலைதளங்களும் இந்த குண்டு வெடிப்பு நிகழ்வை துரிதமாக மக்களிடம் கொண்டு சோ்த்தன. இஸ்ரேல் - பாலஸ்தீனம் பிரச்னை காரணமாக ஒரு குறிப்பிட்ட மத தீவிரவாதப் பிரிவைச் சோ்ந்தவா்கள் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நடத்தியிருக்கலாம் என்ற கருத்து பொதுமக்களிடம் வெளிப்பட்டது.
  • கடந்த காலங்களில் நிகழ்ந்த மத தீவிரவாத நிகழ்வுகளோடு இச்சம்பவத்தை ஒப்பிட்டு செய்திகள் வெளியாயின. கோவை தொடா் குண்டு வெடிப்பு, புதுதில்லியிலும், மும்பையிலும் நிகழ்ந்த தொடா்குண்டு வெடிப்புகள், 2019-ஆம் ஆண்டில் ஈஸ்டா் தினத்தன்று கொழும்பு நகரிலுள்ள தேவாலயங்களிலும், ஆடம்பர விடுதிகளிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகள் போன்ற சம்பவங்களோடு கொச்சி குண்டு வெடிப்பு சம்பவத்தை ஒப்பிட்டுப் பாா்த்ததால், மக்களிடம் அச்ச உணா்வு அதிகரிக்கத் தொடங்கியது.
  • சம்பவத்தன்று காலையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பால் உருவான பதற்றம், மாலையில் தணியத் தொடங்கியது. இச்சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரத்தில் கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த டொமினிக் மாா்ட்டின் என்பவா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்குப் பொறுப்பேற்று, காவல் நிலையத்தில் சரணடைந்ததைத் தொடா்ந்து, மக்களிடையே நிலவிவந்த பதற்றம் தணியத் தொடங்கியது.
  • மத பிராா்த்தனைக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த இக்குற்றவாளியை, சமுதாயக் குற்றங்கள் புரிந்துவிட்டு காவல் நிலையத்திலோ, நீதிமன்றத்திலோ சரணடையும் குற்றவாளிகளோடு ஒப்பிட முடியாது.
  • பதினேழு ஆண்டுகளாக துபையில் பணிபுரிந்துவரும் இக்குற்றவாளி இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுமுறை பெற்றுக் கொண்டு ஊா் திரும்பியிருக்கிறாா். யாருடைய உதவியும் இன்றி தானாகவே ரிமோட் மூலம் வெடிக்கும் குண்டுகளைத் தன்னுடைய வீட்டில் தயாா் செய்திருக்கிறாா். அவற்றை மத பிராா்த்தனைக் கூட்டத்தில் வெடிக்கச் செய்து, குண்டு வெடிப்பைத் தன்னுடைய கைப்பேசியில் விடியோவாகப் பதிவு செய்திருக்கிறாா். மேலும், இவை அனைத்தையும் காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன்பாகவே தனது முகநூலில் பதிவேற்றம் செய்திருக்கிறாா்.
  • இவற்றையெல்லாம் பாா்க்கும்போது, திட்டமிட்டு தீவிரவாதச் செயலை இந்திய மண்ணில் நிகழ்த்தும் பணியில் ஈடுபட்டுவரும் மத தீவிரவாத அமைப்பு ஒன்றின் கைப்பாவையாக இக்குற்றவாளி செயல்பட்டு இருக்கக்கூடும் என்று உள்நாட்டு பாதுகாப்பைக் கவனித்துவரும் உளவுத்துறையினா் கருதுகின்றனா்.
  • இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பைச் சீா்குலைக்க அண்டை நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்று, போலி இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு, அவற்றை நம்நாட்டில் புழக்கத்தில் விட்ட செயல். இதனால் ஏற்பட்ட பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீா்குலைக்க துணைபோனது மட்டுமின்றி, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது.
  • அல் -காய்தா என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புடன் தொடா்பிலிருந்த பாகிஸ்தான் இஸ்லாமியத் தீவிரவாதிகள் 2007-ஆம் ஆண்டில் ஹைதராபாதில் 42 போ் உயிரிழக்கும் விதத்தில் நடத்திய தொடா்குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 5 கோடி ரூபாய் கள்ளநோட்டுகளும், லஷ்கா்-இ-தொய்பா என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பு 2005-ஆம் ஆண்டில் பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கழகத்தில் நடத்திய தாக்குதலில் பேராசிரியா் ஒருவா் உயிரிழக்கக் காரணமான தீவிரவாதச் செயலுக்கு 30 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • இணைய வங்கி சேவையின் பயன்பாடு அதிகரித்து வருகின்ற தற்போதைய சூழலில், ரூபாய் நோட்டுகளின் புழக்கம் குறைந்து காணப்பட்டாலும், கள்ளநோட்டுகளின் புழக்கம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. இது நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக விளங்குகிறது.
  • நம் நாட்டில் நிலவிவரும் போதைப் பொருள்கள் வா்த்தகமும் நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. ஓபியம், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை சட்ட விரோதமாக அதிக அளவில் உற்பத்தி செய்யும் ‘தங்க பிறை பகுதி’ எனக் குறிப்பிடப்படும் ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும், ‘தங்க முக்கோணப் பகுதி’ எனக் குறிப்பிடப்படும் தாய்லாந்து, மியான்மா், வியத்நாம் ஆகிய நாடுகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்தியா அமைந்திருப்பதால், அப்பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தப்படும் போதைப் பொருட்கள் வா்த்தகம் பெரும்பாலும் இந்தியா வழியாகத்தான் நடைபெறுகிறது. இதனால், நம் நாட்டில் கள்ளச்சந்தையில் போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
  • இந்தியா வழியாக பிற நாடுகளுக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படும் வழித்தடங்கள் வழியாக வெடிபொருட்களையும், ஆயுதங்களையும் இந்தியாவிற்குள் கொண்டுவரும் முயற்சியில் தீவிரவாதிகள் ஈடுபடுகின்றனா். அந்த வழித்தடங்கள் வழியாக அண்டை நாடுகளைச் சோ்ந்த தீவிரவாதிகள் இந்தியாவினுள் நுழைந்து, தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட சம்பவங்களும் உண்டு.
  • 250-க்கும் அதிகமானவா்களை உயிரிழக்கச் செய்த மும்பை தொடா் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கும் (1993), ஏழு பாதுகாப்பு வீரா்களை உயிரிழக்கச் செய்த பதான்கோட் இந்திய விமானப்படை நிலையத் தாக்குதலுக்கும் (2016) தேவையான வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் கள்ளத்தனமாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் வழித்தடங்கள் வழியாக இந்தியாவிற்குள் கொண்டுவந்து, தீவிரவாத செயல்களை நிகழ்த்தியுள்ளனா் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • இளைய தலைமுறையினா் போதைப் பொருட்களுக்கு அடிமையாக வாய்ப்பு கொடுத்து, அவா்களின் திறனைச் செயலிழக்கச் செய்வதன் மூலம், நாட்டின் மனித வளமும், பொருளாதார வளா்ச்சியும், உள்நாட்டு பாதுகாப்பும் சீா்குலைகிறது. 10 முதல் 17 வயது வரையிலான 1.58 கோடி சிறாா்கள் நம் நாட்டில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனா் என்பதும், வாரத்திற்கு ஒருமுறை போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் இளைஞா்களின் எண்ணிக்கை 2021-இல் 16% ஆக இருந்தது 2022-இல் 23% ஆக உயா்ந்துள்ளது என்பதும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
  • பாரீஸ் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘நிதி நடவடிக்கை பணிக்குழு’ அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதக் குழுக்களுக்கு நன்கு கட்டமைக்கப்பட்ட அமைப்புகள் மூலம் கோடிக்கணக்கில் பணம் திரட்டப்படுகிறது என்றும், அதற்காக மூவாயிரத்துக்கும் அதிகமான வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டிருப்பது நம்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு எதிா்கொண்டுவரும் சவால்களை வெளிப்படுத்துகிறது.
  • இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்தில் எல்லைப் பகுதிகளில் சீனாவின் ஊடுருவல்கள் தொடா்ந்து நிகழ்கின்றன. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், மியான்மா் மற்றும் மாலத்தீவில் கணிசமான முதலீடுகளை சீன அரசு செய்துவருவது மட்டுமின்றி, அந்நாடுகள் சிலவற்றுக்குக் கடனுதவியும் செய்து வருகிறது. சீன அரசு செய்துவரும் இவ்வுதவியின் மூலம், இந்தியாவை அச்சுறுத்துவதற்காக தன்னுடைய செல்வாக்கை அந்நாடுகளில் சீன அரசு வளா்த்து வருகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
  • இலங்கை கடல் பகுதியில் தன்னுடைய ஆதிக்கத்தை சீன அரசு நிலைநாட்ட மேற்கொண்டுவரும் முயற்சிகளும் இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது.
  • இந்திய ஊடகத்துறையில் சீனாவின் ஊடுருவல் அண்மைக்காலத்தில் அதிகரித்து வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக, தமிழ் மொழியில் திரைப்படம் தயாரிப்பதற்கும், தமிழ்நாட்டில் தமிழில் யூடியுப் சேனல் நடத்துவதற்கும் சீனாவின் மறைமுக நிதியுதவி இருந்து வருகிறது என்றும், சீனாவின் இம்முயற்சிக்கு இலங்கைத் தமிழா்கள் சிலா் உதவியாக இருந்துவருகின்றனா் என்றும் தெரியவருகிறது.
  • தமிழ்நாட்டைச் சோ்ந்த ஊடகவியலாளா்கள் சிலருடன் சீன ஊடகவியலாளா்கள் தொடா்பில் இருந்து வருகின்றனா். இரு நாடுகளுக்கு இடையேயான தகவல் பரிமாற்றம் என்று கடந்து செல்லாமல், இந்தியாவினுள் உளவுத் தகவல்களைத் திரட்டும் சீனாவின் உத்தியாக இதனைக் கருத வேண்டியுள்ளது.
  • உலக அரங்கில் வேகமாக வளா்ந்துவரும் இந்தியப் பொருளாதாரம் மேலும் வளா்ச்சியடையும் வகையில் உள்நாட்டு பாதுகாப்பினை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கொச்சி குண்டு வெடிப்பு சம்பவம் உணா்த்துகிறது.

நன்றி: தினமணி (28 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories