TNPSC Thervupettagam

சாதி ஆணவக் கொலை: தனிச் சட்டம் எப்போது

June 8 , 2023 537 days 419 0
  • சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தீரன் சின்னமலைப் பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறைத் தண்டனையைச் சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான பயணத்தில் இந்தத் தீர்ப்பு முக்கிய மைல்கல்லாக அமைந்திருக்கிறது.
  • 2015ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிப்பாளையத்தில், பட்டியல் சாதியைச் சேர்ந்த கோகுல்ராஜ் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பதற்கு முன்பு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சுவாதி என்ற சக மாணவியைச் சந்தித்ததும், பிறகு கோகுல்ராஜை ஒரு குழு அங்கிருந்து அழைத்துச் சென்றதும் சிசிடிவி கேமரா காட்சி மூலம் உறுதியாகின. அதுவே இந்த வழக்கில் முக்கியத் தடயமாகவும் ஆனது. இந்த வழக்கில் சுவாதி பிறழ்சாட்சியாக மாறியது பின்னடைவை ஏற்படுத்தியது.
  • என்றாலும், கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்டார் என்று அரசுத் தரப்பு முன்வைத்த திறமையான வாதங்களை ஏற்று, மதுரை வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதன் மூலம், பாதிக்கப்பட்ட கோகுல்ராஜின் குடும்பத்துக்கு நியாயம் கிடைத்திருக்கிறது. இது ஆணவக் கொலைதான் என்பதை நீதிமன்றத்தில் திறம்பட நிரூபித்த காவல் துறையும் தமிழ்நாடு அரசும் பாராட்டுக்குரியவை.
  • நாகரிகச் சமூகத்தில் மனித குல அடிப்படைக்கே எதிரானவை ஆணவக் கொலைகள். இந்தக் கொடூரமான குற்றத்தில் பட்டியல் சாதியினரே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சமூக நீதியில் முன்னேறிய மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் ஆணவக் கொலைகள் தொடர்ந்து நடைபெறுவது பெரும் வெட்கக் கேடு. இந்த அவலம் முற்றிலும் தடுக்கப்பட்டாக வேண்டும்.
  • மேலும், ஊடகங்கள் மூலம் கவனம்பெறும் வழக்குகளைத் தவிர பிற வழக்குகளில் ஆணவக் கொலை நடந்திருக்கிறது என்பதை நிரூபிப்பது மிகக் கடினமாக உள்ளது. இதனால் கொலை, சாதிய வன்கொடுமை ஆகியவற்றைத் தண்டிப்பதற்கான சட்டங்கள் ஆணவக் கொலைகளைத் தடுக்கப் போதுமானதாக இல்லை என்றும் ஆணவக் கொலைகளைத் தண்டிப்பதற்கென்று தனிச் சட்டம் தேவை என்றும் அரசியல் கட்சியினரும் சமூகச் செயல்பாட்டாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அப்படி ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசு இதுவரை உறுதியான நடவடிக்கைகளைத் தொடங்காமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.
  • ஆணவக் கொலை என்பது நாடு முழுவதுமே நடைபெறும் ஓர் அவமானகரமான குற்றமாகும். இது தொடர்பாக சக்தி வாகினி என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கில் ஆணவக் கொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் இயற்றப்படும்வரை அவற்றைத் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை 2018இல் உச்ச நீதிமன்றம் வழங்கியது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கியமான உத்தரவு மதிக்கப்படவில்லை.
  • வாக்குவங்கி அரசியலுக்கு இடம்கொடுக்காமல் ஆணவக் கொலைகளை உறுதியாகத் தடுப்பதற்குச் சட்டமியற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் இனிமேலும் தாமதிக்கக் கூடாது.

நன்றி: தி இந்து (08 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories