- கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டாம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஜெகன், தன் சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து மணந்துகொண்டார். இதையடுத்து, பெண்ணின் தந்தையால் அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், ஆணவக் கொலை தொடர்பான விவாதங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.
- காதல் திருமணங்களில், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதாகச் சொல்லி தங்கள் மகனையும் மகளையுமே கொல்லும் அளவுக்குப் பலரிடமும் சாதி ஆணவம் ஆழ வேரூன்றியிருப்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.
- ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே சாதியைச் சேர்ந்தவர்களால் நிகழ்த்தப்படும் கொலைகளை ஆணவக் கொலையாகக் கருத முடியாது என்கிற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆனால், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் காதல் திருமணங்களை ஏற்றுக்கொள்ளாமல் பெற்றோரும் உறவினர்களும் நிகழ்த்தும் எந்தவொரு படுகொலையும் ஆணவக் கொலையே. பொருளாதாரமும் ஆணாதிக்கமும் ஆணவக் கொலைக்குக் காரணமாகின்றன என்பதையும் மறுக்க முடியாது.
- புகாரைப் பதிவுசெய்வதில் இருக்கும் தடைகள், சட்டரீதியான அலைக்கழிப்பு, ஆண்டுக்கணக்கான காத்திருப்பு, குற்றவாளிக்கு உரிய காலத்தில் தண்டனை கிடைக்காதது, பெயரளவுக்கான தண்டனை, ஆதிக்க சாதியினரின் அச்சுறுத்தல் போன்றவை பாதிக்கப்பட்டவர்களைச் சோர்வடையச் செய்துவிடுகின்றன.
- ஏற்கெனவே, பிள்ளையை இழந்து வாடும் அவர்களை, அதற்குப் பிறகான சட்டப் போராட்டம் கடுமையாகப் பாதித்துவிடுகிறது. இப்படியான சூழலில், சாதி ஆணவக் கொலைகளில் விரைந்து விசாரணை நடத்தப்பட்டு, வழக்குகள் மிக விரைவில் முடிக்கப்படுவதும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சத் தண்டனையை வழங்குவதும் ஆணவக் கொலைகளைத் தடுக்க வழிவகுக்கும்.
- அதே நேரம், சாதி ஆணவக் கொலைகள் சமூகத்தின் கூட்டு மனநிலையோடும் கல்வியறிவோடும் நேரடியாகத் தொடர்புடையவை என்பதால், மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் சாதியப் பாகுபாட்டைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
- திமுக 1967இல் முதன்முறையாக ஆட்சிக்கு வந்தபோது அப்போதைய முதலமைச்சர் சி.என்.அண்ணாதுரை கையெழுத்திட்ட முதல் அரசாணை சுயமரியாதைத் திருமண அங்கீகரிப்பு. அடுத்த ஆண்டே அது சட்டமும் ஆக்கப்பட்டது. இந்தியாவிலேயே சுயமரியாதைத் திருமணத்தை அங்கீகரித்த முதல் மாநிலம் தமிழ்நாடு.
- சடங்கு சம்பிரதாயங்கள், வரதட்சணை, ஆடம்பரங்கள் ஏதுமற்ற சாதி கடந்த சுயமரியாதைத் திருமணத்தை அங்கீகரித்த மாநிலத்தில்தான் காதல் மணம் புரிவோர் சாதியின் பெயரால் கொல்லப்பட்டுவருகின்றனர். ‘திராவிட மாடல்’ என முன்னிறுத்திக்கொள்ளும் திமுக அரசு, சாதி ஆணவக் கொலைகளைக் கட்டுப்படுத்துவதோடு கொலைகள் நிகழாதவண்ணம் சட்டரீதியிலான செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும்.
- காதலித்தவர்கள் மட்டுமின்றி இருவீட்டாரும் முன்வந்து கலப்புத் திருமணம் செய்துவைக்கும் தம்பதியருக்கும் அந்தந்த மாவட்ட அளவில் அரசே சிறப்பு செய்வதோடு, கலப்பு மணத் தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இறுதிவரை இலவசக் கல்வி வழங்குவதோடு, அந்தக் குழந்தைகளில் ஒருவருக்கு பின்னாளில் அரசுப் பணியும் அளிப்பதாக அறிவித்தால் கலப்புத் திருமணங்கள் சமூகத்தில் கவனமும், பாதுகாப்பும், வரவேற்பும் பெறத் தொடங்கும்.
- ‘சாதிப் பிரிவினையை வைத்து வாக்கு அரசியல் செய்ய மாட்டோம்’ என்று வெளிப்படையாக உறுதியேற்று, எந்த அரசாவது இப்படி ஆக்கபூர்வமாக அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தவும் முன்வரும்போது, சாதிய வன்மங்கள் தாமாகவே படிப்படியாக அகன்றுவிடும்.
நன்றி: தி இந்து (01 – 04 – 2023)