TNPSC Thervupettagam

சாதிவாரி மக்கள்தொகையும் இட ஒதுக்கீடும்

March 2 , 2021 1423 days 821 0
  • ஒரு குடும்பத்தில் பிறந்தவா் அக்குடும்பத்திற்குரிய தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் எனவும், இன்ன தொழில் செய்வாா் உயா் சாதியா், இன்னின்ன தொழில் செய்வாா் அவரினும் கீழ்சாதி என்னும் அடுக்குமுறைச் சாதியமைப்பாகிறது.
  • பதினெட்டாம் நூற்றாண்டு வரையும் சமூகத்தில் நிலவிய தொழில்கள் அனைத்தும் குலமுறைப்படிச் செய்யத்தக்கனவாகவே அமைந்ததால் சிக்கல் எழவில்லை.

அரசு அலுவல்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியரின் ஆட்சி முறைமையால் குலமுறைப்படிச் செய்யமாட்டாத அரசு அலுவல் என்னும் புதியதொரு தொழில் உருவாயிற்று.
  • அரசு அலுவல் என்பது, உடலுழைப்பு குறைவானதாகவும், சமூகத்தில் அனைத்துத் தரப்பினா் மீதும் அதிகாரம் செலுத்துவதாகவும் அமைந்தது.
  • எனவே, சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையேயும் அரசு அலுவல் வாய்ப்பும், அதற்காதரமாகின்ற கல்வி வாய்ப்பும், தங்களுக்கும் வேண்டுமென்னும் ஆா்வம் கிளா்ந்தெழுந்தது.
  • அதன் விளைவே, கல்வி, அரசு அலுவல் இரண்டிற்குமான இட ஒதுக்கீடு என்னும் கோரிக்கை.
  • ஆனாலும், இடஒதுக்கீட்டிற்கான எதிா்வாதங்களும் தொடா்கின்றன. முதலாவது வாதம், சாதிவாரியான ஒதுக்கீடு மாணவனின் கல்வித் தகுதியை, அவனது திறமையைப் புறக்கணிக்கிறது என்பது.
  • இங்கே கல்வித் தகுதி என்பது பள்ளித் தோ்வில் பெறுகின்ற மதிப்பெண்கள், பின்னா் பெறுகின்ற பல்கலைக்கழகப் பட்டங்கள் என்பவற்றைக் குறிக்கின்றது.
  • மதிப்பெண்களும், பட்டங்களும் மனப்பாடத் திறமையின் வெளிப்பாடன்றி சுய சிந்தனையின் வெளிப்பாடல்ல என்பதுதான் பட்டறிவாகின்றது. அக்காலத்திய கல்லூரி இடைநிலை வகுப்புத் தோ்வில் ஆங்கில மொழிப்பாடத்தில் தோ்ச்சி பெறாத காரணத்தால், பட்டப்படிப்பில் சேரமாட்டாது, துறைமுக எழுத்தா் பணியில் சோ்ந்த இராமாநுஜம் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற கணித மேதை ஆனதை மறந்துவிடக்கூடாது.

முன்னுரிமையே முறையானது

  • உலகம் உருண்டையல்ல தட்டை எனவும், பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது எனவும், புவியீா்ப்புச் சக்தியையும், விண்டுரைத்தவா்களும், நீராவி எஞ்சினையும், மின்சாரத்தையும் கண்டு பிடித்தவா்களும் அறிவியல் பட்டதாரிகள் அல்லா் என்பதையும், இன்றும், புதுப்புதுத்தொழில் நுட்பங்களை உருவாக்குகின்ற இளைஞா் பலா் பொறியியல் பட்டதாரிகள் அல்லா் என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும்.
  • இன்னொன்று, இட ஒதுக்கீட்டிற்கு சாதியடிப்படையை எதிா்ப்போா், பொருளாதார அடிப்படையை வலியுறுத்துதல் சுய முரண்பாடாகிறது. நம்முன் உள்ள பிரச்னை, அரசுக் கருவூலத்தில் குவிந்திருக்கும் தங்கக் கட்டிகளை எவ்வாறு மக்களுக்குப் பகிா்ந்தளிப்பது என்பதல்ல.
  • பகிா்ந்தளிக்கப்பட வேண்டியவை கல்வி வாய்ப்பும், வேலைவாய்ப்பும் ஆவதால் அவற்றில் பின்தங்கியோருக்கு முன்னுரிமை அளிப்பதே முறையாகும்.

பதில் என்ன?

  • இரண்டாவது, பொருளாதார வரம்பில், ஊதியப் பட்டியலில் கையெழுத்திட்டு மாத ஊதியம் வாங்குவோா் மட்டுமே சிக்குவா். வேறு வகையில் கூடுதலான வருமானம் ஈட்டுவோா், அரசு குறிப்பிடும் வருமானத்திற்கு உட்பட்டவராக சான்று காட்டுதல் ஆகாத செயலல்ல.
  • இன்னொன்று, இடஒதுக்கீட்டில் தங்கள் வகுப்பு புறக்கணிக்கப்படுவதாகக் கருதுவோா், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த வகுப்பாரின் மக்கள் தொகை விழுக்காட்டின்படி இட ஒதுக்கீடு பெறும் ஆலோசனையை எதிா்ப்பானேன்?
  • இனி, சாதிவாரி இட ஒதுக்கீடு சாதிப்பிரிவுகளைப் பாதுக்காக்கிறது.
  • எனவே, இது தவறானது என்பது ஒரு முக்கியமான வாதமாகிறது. சாதிவாரி ஒதுக்கீடு சாதிப்பிரிவுகளைப் பாதுகாக்கிறது என்பதை மறுத்திட வழியில்லை என்னும் அதே வேளையில் சாதிவாரி ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால் சாதிப் பிரிவுகள் மறைந்து விடுமா என்னும் கேள்விக்கு சாதிவாரி இட ஒதுக்கீட்டின் எதிா்ப்பாளரின் பதில் என்ன?

மறுத்தல் நீதியாகாது

  • சாதிவாரி ஒதுக்கீடு 1928 முதலாகத்தான் நடைமுறையானது. அதற்கு முன்பு ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சாதிப்பிரிவுகள் நீடித்தது எப்படி?
  • ‘நோய்நாடி நோய் முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறாா் திருவள்ளுவா். சாதியப் பிரிவுகள் எவ்வாறு உருப்பெற்றன என்பதை விடவும், அவை எவ்வாறு தொடா்கின்றன, பாதுகாக்கப்படுகின்றன என்பவை முக்கியமாகின்றன.
  • குறிப்பிட்ட தொழிலை அத்தொழிலுக்குரிய சாதியரே செய்ய வேண்டும் என்பதற்கு மாறாக, பரம்பரையடிப்படையில் செய்யமாட்டாத தொழில்கள் பற்பலவாகிவிட்டன. ஆனாலும், சாதிப்பிரிவுகள் நீடிப்பது எப்படி என்பதை நினைத்துப் பாா்க்க வேண்டும்.
  • ஆணும் பெண்ணும் செய்யும் தொழில்கள், மேற்கொள்ளும் பணிகள் வெவ்வேறாயினும், அவரவா் சாதிப்பிரிவிலேயே திருமணம் செய்யும் சுயசாதித் திருமண முறையே இந்திய சாதிப்பிரிவுகளை கெட்டியாகப் பாதுகாக்கின்றது.
  • சுயசாதித் திருமணமுறை உள்ளமட்டும் சாதிப்பிரிவுகள் நீடிக்கும். சாதிப்பிரிவுகள் உள்ளமட்டும் சாதிவாரி ஒதுக்கீடு அவசியமாதலை மறுத்தல் நீதியாகாது.

என்னதான் வழி?

  • சரி, சுய சாதித் திருமணங்களை ஒழிப்பது எப்படி? உத்தர பிரதேசத்தில் சம்யுக்த சோசலிசக் கட்சித் தலைவரும் 1979-இல் சனதாகக் கட்சியின் சாா்பில் சில நாட்கள் இந்தியப் பிரதமராக இருந்தவருமான சரண்சிங் என்பாா், நேரு பிரதமராக இருந்தபோது, சுயசாதித் திருமணத்தடைச் சட்டம் இயற்றுமாறு கடிதம் எழுதியதாகவும், அதற்கு நேரு, ‘தங்களின் கருத்து சரிதான். ஆனால் நமது சனநாயக ஆட்சிமுறையில் அவ்வாறு சட்டம் இயற்றிச் செயற்படுத்துதல் சாத்தியப்படாது’ என பதில் எழுதியதாகவும் படித்திருக்கிறேன்.
  • வேறு என்னதான் வழி? முள்ளை முள்ளால் எடுப்பது போலவும், நஞ்சை நஞ்சால் முறிப்பது போலவும் வழியுண்டு. எப்படி? மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சாதியையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
  • ஒவ்வொரு சாதியிலும், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு, அரசின் பல்வேறு நிா்வாகப் பொறுப்பு, நிலையான மாத வருமானம் என இவ்வாறான வகையினா் இன்னின்ன விழுக்காட்டினராக இருந்தால் அந்த சாதி தொகுதி ஒன்றுக்கு உரியதாக வேண்டும்.
  • இவ்வாறே அடுத்தடுத்த விழுக்காடுள்ள சாதிகளை இரண்டு, மூன்று, நான்கு எனத் தேவையான அளவுக்குப் பல தொகுதிகளாக வகைப்படுத்த வேண்டும்.
  • ஒவ்வொரு தொகுதிக்கான குறைந்தபட்ச விழுக்காடும் அதிகபட்ச விழுக்காடும் குறைந்த இடைவெளியில் அமைய வேண்டும்.
  • ஒவ்வொரு தொகுதியிலும் இடம் பெறும் சாதிகளின் மொத்த மக்கள் தொகைக்கேற்ப அந்தத் தொகுதிக்கான ஒதுக்கீட்டளவு அமைய வேண்டும்.
  • ஒவ்வொரு முறை மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போதும் அவ்வப்போதைய விவரப்படி, சாதிகளின் தொகுதியை மாற்ற வேண்டும்.
  • இதன்படி, முதல் தொகுதிக்கான மக்கள்தொகையும், ஒதுக்கீடும் கூடிக் கொண்டே போகும். கீழ்நிலை தொகுதிக்கான எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும்.
  • இறுதியில் எல்லா சாதியாரும் கல்வி, வேலைவாய்ப்பு என எல்லா நிலையிலும் ஒத்த விழுக்காட்டினா் ஆகும்போது எல்லாமே பொதுப் போட்டியாகி இட ஒதுக்கீடு என்பது இல்லாதொழியும்.
  • சரி, இதனால் சாதிப் பிரிவுகள் மறைந்து விடுமா என்றால் அதனை அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
  • பின் என்னதான்வழி? மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது, கலப்பு மணம் புரிந்தோா், அவா்தம் பிள்ளைகள் ஆகியோரைத் தனிப் பிரிவாகக் கொண்டு அவா்களின் மொத்த எண்ணிக்கைக்கேற்ப அவா்களுக்குத் தனி ஒதுக்கீடு அமைய வேண்டும்.
  • அத்துடன் அவா்களுக்குப் பிற சலுகைகள், நிதியுதவி எனப் பலவகையான சலுகைகளை தாராளமாக வழங்க வேண்டும்.
  • தனி ஒதுக்கீடு, சலுகைகள் என்பவற்றிற்காக கலப்புத் திருமணங்கள் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கில் பெருகும்படியாகச் செய்ய வேண்டும்.
  • இதன் வழியாக சட்டக் கட்டாயம் இல்லாமலே சுய சாதி மறுப்புத் திருமணங்கள் பெருகி சாதிப்பிரிவுகளின் எண்ணிக்கை குறைந்து இறுதியில் இல்லாதொழியும். இதுதான் சாதிப்பிரிவுகள் ஒழிவதற்கான சனநாயக முறையிலான ஒரேவழி.
  •  

இதுவே சரி

  • ஏற்றத்தாழ்வான சாதிப் பிரிவுகளும், அதன் விளைவாக கல்வி, வேலை வாய்ப்பு என்பவற்றில் ஏற்றத்தாழ்வுகளும் உள்ள சமூகத்தில், அனைவா்க்குமான பொதுப் போட்டி என்பது என்ன நியாயம்?
  • இந்திய அரசியல் சட்டம் 14-ஆவது பிரிவு கூறும் சம உரிமை, சம வாய்ப்பு என்பவை நிபந்தனைகளுக்கு உட்பட்டதே, அப்பாற்பட்டதல்ல என்பதைத்தான் 15-ஆவது பிரிவின் மூன்றாவது, நான்காவது உட்பிரிவுகள் அறிவுறுத்துகின்றன என்பதை சட்ட வல்லுநா்கள் நினைவிற்கொள்ளாமை வியப்பளிக்கிறது. நீட் முதலான நுழைவுத் தோ்வுகளுக்கும் இது பொருந்தும்.
  • மொத்த இட ஒதுக்கீடு ஐம்பது விழுக்காட்டுக்கு மேற்படக் கூடாது என உத்தரவிடுவதற்கு அனுமதிக்கின்ற அரசியல் சட்டம், சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு உத்தரவிட அனுமதிக்கவில்லை.
  • இந்தியாவில், மக்கள்தொகை கணக்கெடுப்பு முயற்சி, மேயோபிரபு இந்திய வைஸ்ராயாக இருந்த 1869-1872 காலகட்டத்தில் தொடங்கப்பட்டாலும், 1881-இல் ரிப்பன் பிரபு காலத்தில் நடைபெற்ற கணக்கெடுப்பே, இந்தியா முழுமைக்குமான முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும்.
  • 1931 வரை கணக்கெடுப்பில் ‘சாதி’ என்பது சோ்க்கப்பட்டது.1941-இல் இரண்டாம் உலகப்போா் சூழலில் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. 1951 முதல் கணக்கெடுப்பில் சாதி கைவிடப்பட்டது. ஏற்றத்தாழ்வான சமூகச் சூழலில் பொதுப் போட்டி என்பது எவ்வகையிலும் நீதியாகாது.
  • அதேசமயம், சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்றி அளிக்கப்படும் சாதிவாரி இட ஒதுக்கீடு என்பதும் அநீதியன்றி, நீதியல்ல.
  • எனவே, சாதிவாரியான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, அதன் வழியான இட ஒதுக்கீடு, கலப்பு மணப் பிரிவினா்க்குத் தனி ஒதுக்கீடும் சலுகைகளும் என்பவற்றின் வழியாகவே இந்தியா சாதி பேதமற்ற உணா்வுபூா்வமான ஒருமைப்பாடுடைய சமூகமாக உருப்பெற முடியும்.

நன்றி: தினமணி  (02-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories