- சாதிவாரிக் கணக்கெடுப்பு சாத்தியம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். இந்த விஷயத்தில் அரசு தெரிவித்திருக்கிற சிரமங்கள், சிக்கல்கள் எளிமையானவை இல்லை என்றபோதிலும், அரசு முனைந்தால் அவற்றையெல்லாம் தகர்த்து, இந்தக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதே உண்மை.
- இந்நாட்டின் வளங்களும், வாய்ப்புகளும் சில சமூகங்களின் மேலாதிக்கத்திலேயே இருப்பது முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். படிப்படியாக சமூகவாரிப் பிரதிநிதித்துவம் எனும் அடிப்படையை நோக்கி நாம் நகர்வதே அதற்கான வழிமுறை. அப்படியென்றால், சாதியால் கட்டமைக்கப்பட்ட இந்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பின் வழியாகவே அந்த வழிமுறையை நோக்கி நாம் நகர முடியும்.
- மக்களை சாதிரீதியாகப் பகுத்துப் பார்ப்பதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன; உத்தேசமான எண்ணிக்கை கணக்குகளை வைத்துக்கொண்டே நாம் ஒப்பேற்றலாம் என்றால், எந்த அடிப்படையில் இங்கே அரசின் பொதுக் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன? குத்துமதிப்பான கணக்குகளும், கணிப்புகளும்தான் பொதுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் என்றால், அபத்தம் இல்லையா அது? என்றைக்கு, எப்படி வாய்ப்புகளை எல்லோருக்கும் சரிசமமாகப் பகிர்ந்து அளிக்கும் முறைமை நோக்கி நாம் பயணப்படப்போகிறோம்?
- சமூக மேம்பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தரவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு குடியரசு ஆன காலத்திலேயே இந்தியா உணர்ந்துவிட்டிருந்தது. எல்லா விஷயங்களிலும் தரவுகளைச் சேகரித்து, அதற்கேற்ப திட்டமிட்டு செயலாற்றும் பண்பாட்டை முன்னெடுத்த நம்முடைய முன்னோடிகள், ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டாம்’ என்று முடிவெடுத்தது புத்திசாலித்தனமான ஒரு முடிவு இல்லை.
- சாதியற்ற சமூகத்தை நோக்கிய லட்சியத்துக்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒரு தடையாக அமையும் என்ற அவர்களுடைய நல்லெண்ணம் மட்டுமே இதற்கான காரணம் என்றும் நம்புவதற்கு இல்லை. சாதியத்தை மேலோட்டமான பிரச்சினையாக அணுகும் மேட்டுக்குடிப் பார்வைக்கும், அகில இந்திய அளவில் செல்வாக்கு செலுத்தும் பெரும்பாலான கட்சிகளில் மேல் சாதி தலைவர்களுக்கு இருந்த அதிகாரமுமே சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிரான நிலைப்பாட்டுக்கான முக்கியமான காரணம். இனியும் அப்படியே தொடரலாம் என்று ஆட்சியாளர்கள் நினைப்பது பகல் கனவு.
- சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதி அமைப்பை அழிக்கும் சுதந்திர இந்தியாவின் நோக்கத்தைத் தோற்கடிக்கும் என்று பேசும் அரசியல் கட்சியினரைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது. நாட்டின் குடியரசு தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்கி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்பது வரை சகலத்தையும் சாதிக் கணக்குகளுடன் அணுகும் அரசியல் கட்சிகள் இப்படிப் பேசுவதற்குக் கூச வேண்டாமா?
- வாய்ப்புகளையும், வளங்களையும் பகிர்வதற்கு வரம்பற்ற வழிமுறைகளை நாம் வைத்திருந்தால், பிரச்சினையே இல்லை; அப்போது, இத்தகுக் கணக்கெடுப்பு தேவையில்லை என்று பேசுவதற்குகூட ஒரு குறைந்தபட்ச நியாயம் இருந்திருக்கலாம். இடஒதுக்கீட்டுக்கு உச்ச வரம்பு தீர்மானித்து, நீதிமன்றங்கள் வழியே அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியும்வருபவர்கள் அல்லவா நாம்?
- இன்றைக்கு, ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு சாத்தியம் இல்லை; அரசின் இந்தக் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று பேசும் இந்திய அரசானது, இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் சாதிவாரிக் கணக்குகளைத் திரும்பத் திரும்பக் கேட்கும் நீதிமன்றங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது?
- இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. இந்நாட்டின் ஆகப் பெரும்பான்மை மக்களைத் தொடர்ந்தும் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்திலிருந்து தள்ளிவைக்கும் சூட்சமமே இதன் பின்னணியில் இயங்குகிறது. சாதிகளின் எண்ணிக்கை முழுமையாக வெளியே வரும்போது கூடவே இந்து மதத்தின் இன்றைய அடித்தளத்திலும், உள்ளடக்கப் பண்பிலும்கூட மாற்றங்கள் ஏற்படும் என்ற அச்சமும் இந்த மறுப்பின் வழி வெளிப்படாமல் இல்லை. எதுவாயினும் சரி, நீண்ட காலத்துக்கு இந்த ஆட்டத்தை இந்திய அரசு தொடர முடியாது.
- அதிகாரத்தை நோக்கி ஒவ்வொரு சமூகமும் ஆவேசமாக அடியெடுத்துவைக்கும் நாட்களில், இதற்கான தடைகள் நொறுங்கிச் சிதறும். பரந்து விரிந்த இந்த ஆய்வு நடத்தப்பட்டே தீர வேண்டும். போராட்டங்களுக்கு வழிகோலாமல், அரசு தானாகவே முன்வந்து, ஒரு சமூக - மானுடவியல் ஆய்வாகவும் இதை நடத்தி முடித்தால், அதன் வழி கிடைக்கும் தரவுகள் நம்முடைய மக்கள்தொகையில் உள்ள அனைத்துப் பிரிவுகளையும் அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதில் முக்கிய கருவியாகச் செயலாற்றும்; கூடவே இதுநாள் வரையிலான தவறுகளுக்கு ஒரு பிராயச்சித்தத்தையும் அரசு தேடிக்கொண்டாற்போல அமையும். இந்திய அரசு தன்னுடைய முடிவை மறுபரிசீலிக்க வேண்டும்!
நன்றி: அருஞ்சொல் (22 – 10 – 2021)