சாதிவெறிக்கு எதிரான அழுத்தமான தீர்ப்பு
- கர்நாடகத்தின் கொப்பல் மாவட்டத்தில் 2014 ஆகஸ்ட் மாதத்தில் மரக்கும்பி கிராமத்தில் பட்டியல் சாதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் தொடர்புடைய 101 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது மாவட்ட முதன்மை நீதிமன்றம். பட்டியல் சாதி மக்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துவரும் காலக்கட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
- மரக்கும்பிக்கு அருகில் உள்ள கங்காவதி என்னும் சிறு நகரத்தில் திரையரங்கத்தில் டிக்கெட் வாங்குவது தொடர்பாக மாதிகா என்கிற பட்டியல் சாதி இளைஞர்களுக்கும் ஆதிக்கச் சாதி இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் உருவானது. இது மரக்கும்பி வரை நீண்டது. அந்தக் கிராமத்தில் ஏற்கெனவே பட்டியல் சாதி மக்களுக்கு எதிராகப் பல அக்கிரமங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன.
- இந்தச் சூழலில், திரையரங்கில் பட்டியல் சாதி இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆதிக்கச் சாதி இளைஞர்கள், தங்கள் சாதியைச் சேர்ந்த கும்பலுடன் பட்டியல் சாதி மக்களின் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று வன்முறையில் ஈடுபட்டனர். குடிசைகளுக்குத் தீவைத்தனர். உடைமைப் பொருள்களும் சேதப்படுத்தப்பட்டன. இந்தச் சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்ட அடுத்த ஆண்டே இந்த வன்முறையின் சாட்சியான வீரேஷ் மர்மமான முறையில் மரணமடைந்தார். காவல் துறை இதைத் தற்கொலை எனச் சொன்னது.
- சம்பவம் நடந்த மரக்கும்பி கிராமத்தில் பட்டியல் சாதி மக்கள் உள்பட மக்கள்தொகை 1,774 ஆகும். இதில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டுக்கும் இந்த வன்முறையுடன் தொடர்பு இருப்பதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். பட்டியல் சாதி மக்கள் மீதான வெறுப்பு எப்படிக் கும்பல் வன்முறையாக வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை இதன் வழி அறிந்துகொள்ளலாம்.
- ஊருக்குள் பட்டியல் சாதி மக்கள் உணவகத்துக்கு, சிகை திருத்தும் கடைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் தங்கள் தேவைக்காக நகரத்தையே சார்ந்திருக்கின்றனர். சாதி வன்கொடுமைக்கு எதிராகச் சட்டங்கள் உள்ளன. பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனாலும் இந்தியாவில் இன்னும் பல கிராமங்கள் இப்படித்தான் இருக்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கிய உதாரணம்.
- மரக்கும்பி கிராமத்தில் 2003இல் பயிர்களைத் திருடிய குற்றத்துக்காகப் பட்டியல் சாதியைச் சேர்ந்த சிலரைக் கம்பத்தில் கட்டிவைத்து ஆதிக்கச் சாதியினர் அடித்துள்ளனர். இது குறித்துக் காவல் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மரக்கும்பி வன்முறை வழக்கில் நீதிக்காகப் போராடிய பட்டியல் சாதித் தலைவர் பசவராஜ் கூறியுள்ளார். 2014 வன்முறை குறித்து புகார் அளித்ததற்காகப் பட்டியல் சாதி மக்களுக்கு ஊர் விலக்குத் தண்டனையை ஆதிக்கச் சாதியினர் கூடி அறிவித்துள்ளனர்.
- ஆனாலும் பட்டியல் சாதி மக்கள் அதற்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து சட்டப் போராட்டத்திலும் களப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நீதி, அமைதிக்கான குடிமக்கள் அமைப்பின் அறிக்கை இந்தியாவில் ஆண்டுதோறும் சாதியப் பாகுபாடு அதிகரித்துவருவதாகச் சொல்கிறது. “பட்டியல் சாதி மக்களின் சமூக, பொருளாதார நிலைகளை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், அவர்கள் பாதிக்கப்படக்கூடியவர்களாகவே உள்ளனர்.
- உரிமைகள் மறுக்கப்பட்டு, வன்முறைக்கும் சாதிரீதியிலான அவமானங்களுக்கும் உள்ளாகின்றனர்” என இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சி.சந்திரசேகர் தன் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினருக்கு ஆதரவாக ஏற்கெனவே உள்ள சட்டங்களும் திட்டங்களும் வலுப்படுத்தப்பட வேண்டியதையும், பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படுவதையும் இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 11 – 2024)