TNPSC Thervupettagam

சாதுர்யம் வெற்றுப் பேச்சில் மட்டும்தானா?

April 15 , 2024 271 days 173 0
  • அக்னி நட்சத்திரக் காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கோடை வெயில் அனலாய்ச் சுட்டெரிக்கிறது. அதற்குக் கொஞ்சமும் குறையாமல் வார்த்தை வீச்சுகளும் தேர்தல் களத்தில் வீசப்படுகின்றன. அது சில நேரம் தனிநபர் அவதூறுகளாகவும் வெளிப்படுவது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.
  • இது ஒருபுறம் என்றால், வேட்பாளர்கள் பலரும் சகல வித்தைகளும் கற்றறிந்தவர்களாக வாக்காளப் பெருமக்கள் மத்தியில் பல்வேறு விதமான பணிகளைச் செய்து, அவர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்காகச் செய்யும் முயற்சிகளைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது.
  • எத்தனை எத்தனை பிரயத்தனங்கள்? - தேர்ந்த டீக்கடைக்காரரைப் போல டீ, காபி தயாரிப்பது, டீ ஆற்றுவது, தோசை, பரோட்டா சுடுவது, இஸ்திரி போடுவது, பெண் வேட்பாளர்களோ வெங்காய மண்டிக்குள் சென்று வெங்காயம் புடைப்பது, அதை மூட்டை கட்டுவது, களைக்கொட்டின் உதவியுடன் களை கொத்துவது, இன்னும் ஒரு படி மேலே சென்று பெண் வாக்காளர் ஒருவருக்கு உணவு ஊட்டிவிடுவதுவரை தங்கள் அத்தனை திறமைகளையும் வேட்பாளர்கள் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்யத் தவறிய பணி ஒன்று உண்டென்றால், அது கழிப்பறைகளைச் சுத்தம் செய்வது மட்டுமே.
  • அதேபோலவே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சில அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் சில மணித்துளிகளில் அனைத்தையும் தூக்கி விழுங்கும் வித்தையை அநாயாசமாகச் செய்கின்றன. எல்லாவற்றிலும் வார்த்தைகள்... அதுவும் வெற்று வார்த்தைகள்!
  • கேள்விகளால் துளைத்தெடுக்கும் மக்கள்: முன்புபோல் அல்லாமல் இப்போது கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் உட்படப் பலரும் வாக்குக் கேட்டு வருபவர்களிடம் பல கேள்விகளை எழுப்புகிறார்கள். தாங்கள் வாழும் சூழல், தங்கள் வசிப்பிடம், பாதிக்கப்படும் தங்களின் வாழ்வாதாரம், வதைக்கும் விலைவாசி உயர்வு, குடிநீர் வசதி, போக்குவரத்து, சாலைகள் எனப் பல்வேறு தேவைகள் குறித்த கேள்விகளே அதில் அதிகம்.
  • யாரிடம் தான் கேட்பது என்றறியாமல் இதுநாள்வரை மனதில் அடக்கிவைத்தவை அனைத்தும், வாக்குக் கேட்டு வருபவர்களிடம் கேள்விகளாகக் கொந்தளித்துப் பீறிட்டெழுகின்றன. மது அரக்கனின் பிடியில் சிக்கித் தவிக்கும் தங்கள் இல்லத்து ஆண்களை அதிலிருந்து மீட்க வழி தெரியாமல், எதிரில் வரும் வேட்பாளர்களிடம் பரிதாபமாக முறையிடும் கிராமத்துப் பெண் வாக்காளர்களின் அவலக் குரலும் உரக்கக் கேட்கிறது.
  • ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகள் தேர்தலின்போது முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாலோ, அத்தியாவசியத் தேவைகளுக்கும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்றாலோ மக்கள் மனதில் கோபம் எழத்தான் செய்யும். நடைமுறைச் சாத்தியமில்லா வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் மக்களின் கேள்விக் கணைகளிலிருந்து தப்ப முடியாது.
  • அடித்தட்டு மக்கள் ஏதேனும் ஒரு பொருளை விலை கொடுத்து வாங்கும் ஒவ்வொரு முறையும் வரியையும் சேர்த்தே செலுத்துகிறார்கள். இத்தகைய மறைமுக வரிகளின் வாயிலாக இந்திய அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு வருவாய் கிட்டுகிறது.
  • ஆனால், மிக வசதி படைத்தவர்களில் முதல் 10 சதவீதத்தினர் - தேசிய வருமானத்தில் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் அவர்கள் – நேரடி வரியாக மூன்றில் ஒரு பங்கினை மட்டுமே செலுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனில், இங்கு பெரிதும் பாதிப்புக்கு ஆளாகிறவர்கள் யார்? இவை குறித்துக் கேள்வி எழுப்பத்தானே வேண்டும்.
  • வீழ்ந்து கிடக்கும் கிராமப்புறப் பொருளாதாரம்: இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரம் அடிமட்டத்தில் வீழ்ந்துகிடக்கிறது. இதன் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம் மக்களின் வாழ்வைச் சிதைக்கிறது. மொத்த பட்ஜெட்டில் கிராமப்புறங்களின் வேலை உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீடு வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது. 2013–2014இல் 1.98% என்றிருந்த ஒதுக்கீடு, 2023–24ஆம் ஆண்டுகளில் 1.33% எனக் குறைந்திருக்கிறது.
  • விவசாயத் தொழிலாளர்களுக்கும் கிராமப்புறம் சார்ந்த நலிந்த மக்களுக்கும் நிலம் ஒன்றுதான் மிக முக்கியமான வாழ்வாதாரம். ஆனால், அந்த நிலமோ வளர்ச்சித் திட்டங்கள் என்னும் பெயரில் கார்ப்பரேட்டுகளுக்குக் கைமாற்றப்படுகிறது. அதனால், தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சிறு-குறு விவசாயிகளை அகதிகளைப் போல வேறு இடம் நோக்கி உந்தித் தள்ளுகிறது.
  • வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் கைமாற்றப்படும் நிலங்களால் பெரிதும் பயனடைபவர்கள் கார்ப்பரேட்டுகள் மட்டுமே. மத்திய அரசின் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகள் விவசாயிகளின் பிரச்சினையையும் நெருக்கடியையும் மென்மேலும் அதிகரித்துள்ளன.
  • பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் சொற்பப் பலன்களும்கூட விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை. தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின் அடிப்படையில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 5,563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.
  • 2014 முதல் 2022 வரை 1,00,474 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்தப் பெருமளவிலான தற்கொலை எண்ணிக்கை எவ்வளவு அதிர்ச்சிகரமானது?
  • பெருமளவில் பரப்புரை செய்யப்பட்ட பிஎம் கிசான் திட்டமும் வேளாண் மக்களுக்கு எந்தவிதமான பயனையும் அளிக்கவில்லை. கடந்த 21 மாத காலத்தில் கிராமப்புற வேலை உறுதித் திட்ட அட்டைதாரர்கள் பலரும் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் பட்டியலிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலே கிடைக்கிறது.
  • கல்வியாளர்கள், ஆர்வலர்கள் அமைப்பான ‘லிப்டெக்’ அந்தப் பயனாளிகள் அனைவரும் தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள் என்கிற தரவுகளையும் வெளியிட்டிருக்கிறது.
  • ஒவ்வொரு தரப்பினரும் அரசுகளிடமிருந்து தங்களுக்கு இதுவரை கிடைத்த பலன்கள், ஒவ்வொரு முறை பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போதும் கிடைக்கும் நிவாரணங்கள், உறுதுணையாக நிற்கும் அரசியல் கட்சிகள் என எல்லாவற்றையும் கவனத்தில் கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என முடிவுசெய்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, ஆட்சிக்கு வர விரும்பும் கட்சிகளும் இதை மனதில் கொள்ள வேண்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories