TNPSC Thervupettagam

சாத்தியமாகுமா அனைவருக்குமான பிரதிநிதித்துவம்?

June 21 , 2024 205 days 171 0
  • பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் முடிந்து ஆட்சியும் அமைந்தாகிவிட்டது. தற்போதைய தேர்தல்முறைப்படி, ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது உலகத்தில் குடியாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது உருவாக்கப்பட்ட முறை. யோசித்துப் பாருங்கள். இதில், அதிக வாக்கு பெற்று வெற்றிபெறும் வேட்பாளர், பதிவான வாக்குகளில் சுமார் 30% வாக்குகளைப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஆனால், அவருக்கு எதிராகப் பல்வேறு கட்சிகள் / சுயேச்சைகளுக்கு வாக்களித்த 70% பேரின் வாக்குகளுக்கு எந்தவித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இந்நிலையில், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை வேண்டும் என்ற குரல்கள் மீண்டும் ஒலிக்கின்றன.

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல்:

  • விகிதாச்சாரத் தேர்தல் முறையில், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் இடங்கள் வழங்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, சட்டமன்றத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 100 என வைத்துக்கொண்டால் 1% மட்டுமே வாக்குகள் பெற்ற ஒரு கட்சிக்கு அது பெற்ற வாக்கு சதவீதத்துக்கு ஏற்ப ஓர் இடம் கிடைத்துவிடும். அரசியல் கட்சிகள் களமிறக்கும் கட்சிப் பிரதிநிதிகளின் பட்டியலை முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். கட்சிக்குக் கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கு ஏற்ப ஏற்கெனவே கட்சி அளித்துள்ள பெயர்ப் பட்டியலின்படி, நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்படுவார்கள். தனித்து ஆட்சி அமைக்கப் பெரும்பான்மை இல்லாவிட்டால் ஒரே எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கூட்டணியாக ஆட்சி அமைக்கலாம்.

ஏன் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம்?

  •  2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களில் 93% பேர் கோடீஸ்வரர்கள். இது 2019இல் 88% ஆக இருந்தது என்று கருத்துக் கணிப்பு உரிமை அமைப்பான ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. இது ஒருபுறம் இருக்க, வெற்றி என்பது அடுத்தவரைவிட அதிகம் என்பதில் இருக்கிறது. அது ஒரு வாக்காகக்கூட இருக்கலாம்.
  • பெரும்பான்மையான மக்கள் தங்களை ஆதரித்திருக்கிறார்கள் என்றால், குறைந்தபட்சம் பதிவாகியதில் 50% வாக்குகளாவது வெற்றிபெற்ற கட்சி வாங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பின்னர் நடந்த எந்தத் தேர்தலிலும், மத்தியில் ஆட்சி அமைத்த எந்தக் கட்சியும் 50% வாக்குகளைப் பெற்றதில்லை. 1952 முதல் தேர்தலில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் பெற்றது 44.99%. அடுத்த தேர்தலில் (1957) 47.18%. 1962இல் 44.72%, 1967இல் 40.79%, 1971இல் 43.68%, 1977 தேர்தலில் ஜனதா கட்சி 41.32% வாக்குகளைப் பெற்றது. 1984 தேர்தலில் காங்கிரஸ் அதிகபட்சமாக 49% பெற்றது. இந்நிலையில், வாக்களித்த பெரும்பான்மை மக்களின் விருப்பம் நிராகரிக்கப்படுவதை உணர முடிகிறது.
  • அது மட்டுமல்லாமல், கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்துக்கும் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கைக்கும் சம்பந்தமில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் தேசிய அளவில் 37.7% வாக்குகளைப் பெற்ற பாஜக, மக்களவையில் 55.8% இடங்களை (303) பெற்றது. 19.67% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 9.57% இடங்களை (52) மட்டுமே பெற்றது. நடந்து முடிந்த 2024 தேர்தலில் 36.56% வாக்குகளைப் பெற்ற பாஜக 240 இடங்களைப் பெற்றது. இது 44% இடங்களாகும். 21.19% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 99 இடங்களைப் பெற்றது. இது 18% இடங்களாகும். காங்கிரஸ் பெற்ற வாக்குகளுக்கு 114 இடங்களைப் பெற்றிருக்க வேண்டும். இப்படி நிறைய எடுத்துக்காட்டுகளைச் சொல்லலாம்!
  • அரசியல் சந்தைப்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், நார்வே, ஸ்பெயின், சுவீடன், பிரேசில், வெனிசுலா உள்படப் பல நாடுகளில் விகிதாச்சாரத் தேர்தல் முறையே நடைமுறையில் உள்ளது. இலங்கைகூட இம்முறையில்தான் தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இந்தியாவைப் போலவே பல்வேறு மொழிகள், இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாச்சார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. தற்போது உலகில் பெரும்பாலான நாடுகளில் அந்த முறைதான் நடைமுறையில் உள்ளது.

கருத்தாக்கம் இருந்ததா?

  • “விகிதாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக ஆட்சிதான் தேவை. அதுவே இங்குள்ள பல்வேறு சமூகங்களின் அச்சத்தை அகற்றுவதுடன் இந்நாட்டின் பல்வேறு எதிர்காலக் குழப்பங்களுக்கான தீர்வாகவும் அமையும்” என்பது 1928இல் ஜவாஹர்லால் நேருவின் கருத்தாக இருந்தது. பின்னர், அவர் பார்வை மாறியது வேறு விஷயம்.
  • 1948 ஜனவரி 8ஆம் தேதியிலிருந்து 1949 ஜனவரி 4ஆம் தேதிவரை நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதை இசட்.எச். லாரி, ஹுசேன் இமாம், டி.எச்.சந்திரசேகரய்யா ஆகியோர் வலியுறுத்தினர். கே.டி.ஷா, மகபூப் அலி பெய்க், சர்தார் ஹுக்கும் இதே கருத்தை வெளிப்படுத்தினர். இடஒதுக்கீட்டுக்குப் பதிலாக விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் அப்போது வலுத்தது.
  • 1962இல் கோவையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவிலும், மாநாட்டிலும், தேர்தல் அறிக்கையிலும் இந்தியாவுக்கு விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று அண்ணா வலியுறுத்தினார். 1974இல் ஜெயபிரகாஷ் நாராயணனால் நியமிக்கப்பட்ட தார்க்குண்டே குழு ஜெர்மனியில் இருப்பது போன்ற தேர்தல் முறை இந்தியாவுக்கு வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன் பிறகு தினேஷ் கோசுவாமி குழு (1990), வோரா கமிட்டி (1993), இந்திரஜித் குப்தா குழு (1998), தேர்தல் சட்டத் திருத்தத்தின் மீதான சட்ட ஆணையத்தின் 170ஆவது அறிக்கை (1999), அரசமைப்பு நடைமுறை மறு ஆய்வுக்கான தேசிய ஆணையம் (2001), இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முன்னுரைக்கப்பட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் (2004), நிர்வாகச் சீர்திருத்த இரண்டாவது ஆணையம் (2008), இந்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையிலான இந்தியச் சட்ட ஆணையம் (2011) ஆகியவை அனைத்தும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் குறித்துத் தங்களின் நீண்ட ஆய்வுகளைச் சமர்ப்பித்தன. எனினும் எந்த மாற்றமும் நிகழவில்லை. இன்றைய சூழலில் அரசியல் கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்குமா என்பது சந்தேகமே.
  • பலன் என்ன?  தற்போது இருக்கும் தேர்தல் முறையில், பெரும்பான்மை மக்களின் கருத்துக்கள், விருப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. மேலும், ஜனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களித்து ஆட்சிக்கு வருவது மட்டுமல்ல. விவாதத்தின் மூலம் அரசாங்கத்தை நடத்துவதும்தான். நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் இல்லை என்பதே உண்மை.
  • அனைத்து வாக்குகளுக்கும் மதிப்பளிக்கும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை வந்தால், அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பங்கேற்க வாய்ப்பு உருவாகும். வேட்பாளரின் பணபலம், ஆள்பலம், சாதி-மதப் பலம் குறைய வாய்ப்பு உண்டு. தங்களது சாதி ஆதரவின் அடிப்படையில் பிரதிநிதித்துவத்தைச் சிலர் பெறக்கூடும் என்றாலும், மாநிலம் முழுவதும் சிதறிக்கிடக்கின்ற சிறிய சாதிகளும் எளிதில் பிரதிநிதித்துவம் பெற முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories