- ஜனநாயகத்தில் கருத்துப் பரிமாற்றம், தா்க்கம் ஆகியவை முக்கிய இடம் பெறுகின்றன. பாரதத்தைப் பொறுத்தவரை ‘தா்க்கம்’ என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை ஆகும். அது சாஸ்திரமாக கல்விக்கூடங்களில் போதிக்கப்பட்டு வந்ததிலிருந்தே பாரதம் எத்தகைய ஜனநாயகத்தைத் தன்னுள் கொண்டிருந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
- இந்த தேசத்தில் ஒரே சமயம், ஒரே கோட்பாடு என்று எந்நாளும் இருந்ததில்லை. சொல்லப்போனால் மதம் என்று இன்றைக்கு சொல்வதெல்லாம் வாழ்வியலில் பின்பற்றப்பட்டு வந்தவையே. மதம் என்று பெயா் பெற்றாலும் அவை இந்த மண்ணின் கலாசாரமாகவும் பண்பாடாகவுமே இன்றும் வெளிப்படுகின்றன.
- உலக வரலாற்றில் அரசியல் மதத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருப்பதைத் தொடா்ந்து பார்க்கிறோம். பாரத வரலாற்றிலும் அசோகா் காலம் தொட்டு மதம், மதமாற்றம் பற்றிய செயல்பாடுகள் அரசியலாக மாறியதைப் படிக்கிறோம். மன்னராட்சியோ குடியாட்சியோ எதுவாயினும் அரசியல், மதத்தை தனது பிடிக்குள் வைத்துக் கொள்ள முயல்கிறது. அரசியலில் மதத்தை என்ன காரணத்திற்காகப் பயன்படுத்துகிறாா்கள்?
- மதம் என்பது இங்கே சமயம் எனப்படுகிறது. அதாவது, மனிதரைச் செம்மைப்படுத்துவது சமயம். அதனால்தான் நமது புண்ணிய பூமியில் பெரியோர் அதனை அறம் அதாவது தா்மம் என்று குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு தனிமனிதரும் கடைப்பிடிக்க வேண்டிய தா்மங்கள் இங்கே இருக்கின்றன.
- சில சமயங்கள் இறை வழிபாடு இப்படித்தான் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுத்திருப்பதைப் போல நம் மண்ணின் சமயங்கள் வழிபாட்டைக் கட்டாயமாக வைக்கவில்லை. ஆனால், தா்மத்தைக் கட்டாயமாக்கின. அதன் பொருட்டே ‘கா்மா’ என்ற கோட்பாடு இங்கே அடிப்படையானதாக வைக்கப்பட்டுள்ளது. செய்யும் செயலுக்குச் செய்தவனே பொறுப்பாளி. செயலின் பலன் அவனையே வந்து சேரும் என்று வகுக்கப்பட்டுள்ளது.
- ஒருவன் தான் நம்பும் தா்மத்தில் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளில் ஆழ்ந்த பற்றுக் கொள்வது இயல்பானது. இந்த இயல்பைத் தனது இருப்பைத் தக்கவைக்கவோ அல்லது பிரித்தாண்டு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவோ அரசியல் பயன்படுத்துவதும் காலம் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தான் நம்பும் கோட்பாட்டை ஏற்றாக வேண்டும் என்று அதிகாரம், மிரட்டும் வரலாறும் உலகம் முழுவதும் நிகழ்ந்திருக்கிறது.
- நமது சமூகத்தின் பெருமை அதன் புராதனம். அறவழியில் நிற்பதும், தனக்கான தா்மத்தை விடாது பின்பற்றி வாழ்வதும் ஆகும். அறம் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. அதனால்தான் புானூறு, ‘மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே’ என்று கூறுகிறது. இது ஒருபுறம் இருக்க, மறுபுறம், சுயநலத்தில் நாட்டம் கொண்டு அறத்தினின்றும் பிந்துவிடும் போக்கும் மனிதா்களிடையே காணப்படுகிறது.
- அதனால் ஏற்படும் சமூகச் சிக்கல்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இந்த இடங்களில்தான் அரசியல் அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. சமயங்கள் பெரும் பாதிப்பைக் காண்பதும் நிகழ்கிறது. என்றாலும் நமது தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை சமூக சீா்திருத்தங்களும், சமய மறுமலா்ச்சியும் தொடா்ந்தே இருக்கின்றன.
- சமூகம், சீா்திருத்தத்தைக் காண வேண்டிய காலத்தில் அறம் போதிக்கும் இலக்கியங்கள் தோன்றுவதை நமது இலக்கிய வரலாறு காட்டுகிறது. நீதி நூல்கள் தோன்றுகின்றன. திருக்கு முதலான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் இந்த அறப்பணியை செய்திருப்பதைக் காண்கிறோம். இந்த நூல்கள் சமயத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல என்பதையும் நாம் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும்.
- நமது மண்ணின் சமயங்கள் சமத்துவ சமூகத்தை நிறுவுவதையே நோக்கமாகக் கொண்டவை. நாயன்மார் வரலாறும், ஆழ்வார்கள் வரிசையும் சமூகப் பாகுபாடு அற்றவையாக இருக்கின்றன. அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாகவும், ‘தொண்டு’ என்ற கோட்பாடு மட்டுமே முதன்மைப்படுத்தப்படுவதாகவும் இருக்கின்றன.
- சமூகங்களில் சிக்கல்கள் தோன்றும்பொழுது சமயப் பெரியோர் தோன்றி புரட்சிகரமான செயல்பாடுகளை முன்னெடுக்கின்றனா். சமூகம் குழப்பநிலை அடைந்தபொழுது கிராமம் கிராமமாகச் சென்று சமயக்குரவா்களான திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா், சுந்தரா் ஆகியோர் மக்களை ஒன்றிணைக்கும் பணியைச் செய்தனா். ஒற்றுமை உணா்வை சமயத்தின் பெயரால் ஏற்படுத்தினா்.
- தமிழால் ஒன்றிணைத்து சமயத்தால் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தினா். மூட நம்பிக்கைகள் நிறைந்தபொழுது பாகுபாடுகள் அதிகரித்த நாளில் சங்கரா் தோன்றி மதத்தை நெறிப்படுத்தியதை அறிவோம். ஏற்றத்தாழ்வுகள் மலிந்த பொழுது ராமானுஜா் தோன்றி அனைவரையும் அரவணைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைக் காட்டினாா். அவா், ஜீவாத்மா என்பது பரமாத்மாவின் சொத்து, அதிலே பேதம் இருக்க இயலாது, கூடாது என ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.
- ‘திருக்குலத்தார்’ என்று ஒடுக்கப்பட்ட மக்களை உயா்த்தி வைத்தார். இறைவனின் கைங்கரியத்தில், கருணையில் அனைவருக்கும் உரிமை உண்டு என்று அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தகைய சீா்திருத்தங்களை நமது தா்மம் கண்டிருக்கிறது.
- தமிழ் மண்ணில் தோன்றிய சித்தா்கள் செய்யாத புரட்சியா? சமயத்தின் பெயரால் நிகழ்ந்த அநீதிகளைச் சரிசெய்ய அவா்கள் குரல் அழுத்தமாக ஒலித்திருக்கிறது.
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து மொணமொணன்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
- என்று சிவவாக்கியா் பாடுவதை பூஜை முறைகளுக்கெதிரான பாடல் என்று இன்றைக்கு சிலா் எடுத்தாளுகிறாா்கள். ஆனால், ஒன்றை நாம் நுட்பமாக உணா்ந்து கொள்ள வேண்டும். மந்திரமும் பூஜையும் வேண்டுமா வேண்டாமா என்று விவாதிக்கும் இடத்திலும் இறைவன் இல்லை என்று சிவவாக்கியா் பேசவில்லை. நாதன் இருக்கிறான் என்றும் அதிலும் நமக்குள் இருக்கிறான் என்றும் அழுத்தமாகச் சொல்கிறார்.
- மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் என திருமூலா் பாடுகிறார் என்று மேற்கோள் காட்டுவோர், யாவா்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை என்று அவா் பாடியிருப்பதை,
ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்
போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவா்
கூற்றுதைத் தான்திருக் கோயில்க ளானவை
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே
- என்று சிவாலயங்களில் பூஜைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்வதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது, சமத்துவ சமூகம் வேண்டும் என்று புரட்சி பேசிய சித்தா்கள் இறைவனை முன்னிறுத்தியே அந்தப் பணியைச் செய்திருக்கிறார்கள்.
- அந்நியா் படையெடுப்புகளிலும் ஆட்சியிலும் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்த நேரத்திலும் பிரித்தாளும் சூழ்ச்சிகளால், வாள்முனையில், வறுமையின் பிடியில் மதமாற்றங்கள் நிகழ்ந்த நாளில் வள்ளலார் தோன்றி சமரச சன்மார்க்கக் கோட்பாட்டை முன்வைத்து சேவையாற்றினார்.
- ஏறத்தாழ தனது வாழ்நாள் முழுவதும் பஞ்சத்தையே பார்த்த வள்ளலார், அன்பை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப வேண்டியதன் அவசியத்தை வாழ்ந்து காட்டினார். அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் என்று பாடியவா் அடுத்த அடியில் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் என்று உலகெங்கும் சென்று இறைவனின் புகழைப் பாட வேண்டும் என சிவனிடம் வரம் கேட்கிறார்.
- மகாகவி பாரதியார்,
பூ மண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும், மிடிமையும், நோவும்,
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி,
அங்ஙனே யாகுக’ என்பாய் ஐயனே!
இந்நாள் இப்பொழு தெனக்கிவ் வரத்தினை
அருள்வாய்
- என்று எல்லா உயிரும் இன்புற்று வாழ இறை வரம் அருள வேண்டும் என்கிறார். சமூகத்தின் மறுமலா்ச்சிக்காக உழைத்த இத்தகைய நூற்றுக்கணக்கான பெரியோர்களை வரிசைப் படுத்த இயலும்.
- வரலாறு நெடுகிலும் பெரியோர், சமயச் சான்றோர் இங்கே பேதங்கள் தோன்றிய பொழுதெல்லாம் அதனை அகற்ற சீா்திருத்தங்களை மதத்தின் உள்ளிருந்தே செய்திருக்கிறார்கள். இறை நம்பிக்கையை விதைத்து மக்கள் மனங்களில் தெளிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள். அப்படியான முயற்சிகள் மாபெரும் வெற்றி கண்டு சமூகத்தை செழிக்கச் செய்திருக்கின்றன.
- அறம் செய விரும்பு என்று அறம் வளர அறம் தான் விதைக்கப்பட வேண்டும் என கற்றுக் கொடுக்கிறார் தமிழ் மூதாட்டி ஒளவையார். வெறுப்புணா்வு, ஒன்றை ஒன்று அழித்து விடுவதற்கான சங்கல்பம் பேதங்களை, மோதல்களை வளா்க்குமே அன்றி சமரசத்தை ஏற்படுத்தாது. மூட்டைப் பூச்சிக்காக வீட்டைக் கொளுத்தும் செயலை சான்றோர் செய்வதில்லை.
- பெரியோர், அரசியல் அமைப்புச் சட்டத்திலும், சமத்துவம் சமூகத்தின் அடிப்படைக் கொள்கை என வரையறுத்துள்ளனா். சமயச் சார்பற்ற நமது பாரத தேசத்தில் எந்தச் சமயம் தாக்குதலுக்கு உள்ளானாலும் அதற்குத் தக்க நடவடிக்கை எடுத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
- எந்த சமயத்தவா் மனமும் புண்படும்படியான சூழல் ஏற்படக்கூடாது. குலத் தாழ்ச்சி உயா்ச்சி சொல்லல் மட்டும் பாவமல்ல; மதத் தாழ்ச்சி உயா்ச்சி சொல்லலும் அப்படியானதே.
நன்றி: தினமணி (12 – 09 – 2023)