சார்லஸ் டார்வின்
- எதைப் பார்க்கிறோமோ அதன் உண்மையை ஆராய வேண்டும். புரியவில்லை என்றால் அதை இன்னும் நெருக்கமாகச் சென்று ஆராய்வதற்குத் தேவையான பொறுமை வேண்டும். கண்டறிந்ததைத் தயக்கமின்றி வெளியே சொல்லும் துணிவு வேண்டும். இவை மூன்றும் இருந்தால் போதும், நாம் என்னவாக நினைக்கிறோமோ அதைப் பெற முடியும். இங்கிலாந்தில் பிறந்த சார்லஸ் டார்வின்தான் குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்க வேண்டும் என்கிற புரட்சிகரமான கருத்தை முன்வைத்தார். அது மத நம்பிக்கையின் ஆணிவேரையே அசைக்கும் என்று தெரியும். ஆனால் தான் உண்மை என்று நம்பியதைத் தயக்கமின்றியும் பயமின்றியும் வெளியே சொன்னார்.
- சேர்ந்தது மருத்துவம். படித்தது இறையியல். ஆனது விஞ்ஞானி. உயிரினங்களின் தோற்றம் அதன் வளர்ச்சி பற்றிய அறிவை அனைத்து மக்களுக்கும் புகட்டியவர். அதனால்தான் பரிணாம வளர்ச்சியின் தந்தையாகக் கருதப்படுகிறார் டார்வின். டார்வினின் தாத்தாவும் தந்தையும் மருத்துவர்கள். அதனால் மகனையும் மருத்துவம் படிக்கவைக்க நினைத்தார் தந்தை. எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். சிறுவயதிலிருந்தே தாத்தாவும் தந்தையும் செய்யும் மருத்துவத்தைப் பார்த்து வளர்ந்தவர். மயக்க மருந்து கண்டுபிடிக்காத காலம். ஒரு சிறுமிக்கு வலியால் துடிக்கத் துடிக்க அறுவை சிகிச்சை நடப்பதைப் பார்த்தார். அன்றிலிருந்து அவருக்கு மருத்துவத்தில் ஈடுபாடு இல்லாமல் போனது.
- சிறுவயதிலிருந்தே புழு, பூச்சிகள், விலங்கினங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்தார். எனவே கல்லூரியில் சேர்த்தாலும் கடற்கரையைச் சுற்றிக்கொண்டிருந்தார். அங்கு காணப்படும் விசித்திர உயிரினங்கள், கற்களைச் சேகரிப்பார். மகன் ஊர் சுற்றுவதாக நினைத்த தந்தை மருத்துவத்தைக் கைவிட்டு, கேம்பிரிட்ஜில் இறையியல் சேர்த்துவிட்டார். படிப்பது இறையியலாக இருந்தாலும் தாவரவியல் பேராசிரியரோடு நெருங்கிய நட்புகொண்டிருந்தார்.
- தென் அமெரிக்கக் கடலோரப் பகுதிகளை ஆய்வு செய்ய எச்.எம்.எஸ்.பீகிள் என்கிற கப்பல் புறப்படத் தயாரானது. அதன் கேப்டன் ஃபிட்ஸ்ராய் தாவரவியல் பேராசிரியரின் நெருங்கிய நண்பர். எனவே அவரைப் பயணத்திற்கு அழைத்தார். அவரோ டார்வின்தான் பொருத்தமானவர் என்று அவரைக் கைகாட்டிவிட்டார். இறையியல் பட்டம் பெற்றதும் தன் பயணத்தைத் தொடங்கினார். ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் உலகைச் சுற்றிவரும் மிகப்பெரிய பயணத்திட்டம் அது. அந்தக் கப்பலில் கேப்டனும் டார்வினும் மட்டுமே இருந்தனர். உலகையே வலம்வந்தார்கள். பல இடர்பாடுகள், துயரங்கள் ஏற்பட்டன. இயற்கையின் மீதான ஈடுபாடு, எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளும் ஆர்வம், எதற்கும் விடைகாண வேண்டும் என்கிற பொறுமை போன்றவற்றால் டார்வின் துயரத்தைப் பொருள்படுத்தவில்லை.
- சென்ற இடத்தை எல்லாம் கூர்ந்து ஆராய்ந்தார். அவர் அறிந்திராத பல விநோத விலங்குகளின் எலும்புகளைச் சேகரித்தார். அதில் ஊர்வன, நடப்பன, பறப்பன போன்ற உயிரினங்களும் இருந்தன. தினசரி பார்ப்பவற்றையும், கண்டறிந்தவற்றையும் எழுத ஆரம்பித்தார். ஒவ்வோர் இடத்திலும் கிடைத்த உயிரினங்கள் மாறுபட்டிருந்ன. ஆனால் அவற்றிற்குள் சில ஒற்றுமைகள் இருந்தன. தன் ஆராய்ச்சிக் கண்ணை அகல விரித்துப் பார்த்தார் டார்வின். உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானதொரு மூதாதையர் இருந்திருக்கும். இவை அவற்றின் வழித்தோன்றலாக இருக்கும். காலப்போக்கில் தொடர்ச்சியாகச் சிறுசிறு மாற்றங்களாகப் பெற்று தற்போதைய வளர்ச்சியை அடைந்திருக்கும் எனப் பகுத்தறிந்தார்.
- கலாபகஸ் தீவில்தான் அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்தன. அங்குதான் தன் ஆராய்ச்சியின் பெரும்பகுதியைச் செலவிட்டார் டார்வின். அங்கு புதிய வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். ஐந்தாண்டுகள் முடிந்து இங்கிலாந்து திரும்பியவர், சேகரித்த விவரங்களையும் ஆராய்ச்சியையும் வைத்து பீகிள் பயணமும் அதன் அனுபவங்களும் என்று புத்தகம் எழுதினார். ஆராய்ச்சியையும் தொடர்ந்தார்.
- உயிரினங்கள் எப்படி உருவாகி இருக்கும்? பிறகு அவை எப்படித் தங்கள் மூலத்திலிருந்து முழுமையாக மாறி தற்போதைய நிலையை அடைந்திருக்கும்? இதை, ‘இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்’ என்கிற புத்தகமாக வெளியிட்டார். உலகமே திரும்பிப் பார்த்தது. அத்தனை நாடுகளும் அதைப் பதிப்பித்துக்கொண்டன. உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும் வலிமையும் வாய்ந்தவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்து போகும் என்றார். இதைச் செடிகொடிகள், விலங்குகளுக்கும் மட்டுமல்ல மனிதனுக்கும் பொருத்திப் பார்த்தபோதுதான் குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.
நன்றி: இந்து தமிழ் திசை (02 – 10 – 2024)