TNPSC Thervupettagam

சாலை விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு 2022

February 26 , 2025 6 hrs 0 min 12 0

சாலை விபத்துகளால் அதிகரிக்கும் உயிரிழப்பு 2022

  • இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் சாலை விபத்தில் 19 பேர் உயிரிழப்பதாகச் சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், சாலை விபத்து குறித்து வெளியிட்ட 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கை தெரிவிக்கிறது.
  • முந்தைய பத்தாண்டுகளில் 100 விபத்துகளுக்கு 28 ஆக இருந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை, 2012 – 2022 காலக்கட்டத்தில் 100க்கு 36ஆக அதிகரித்திருக்கிறது. நகர்ப்புற விரிவாக்கம், நீண்ட பயண தூரம், கார் பயன்பாடு அதிகரிப்பு, தேசிய நெடுஞ்​சாலைகளின் நீளம் அதிகரித்தல் போன்றவை சாலை விபத்து அதிகரிப்​ப​தற்கு முக்கியக் காரணிகளாக உள்ளதாக வல்லுநர்கள் சுட்டிக்​காட்டு​கின்​றனர்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

  • பாதசாரிகள், இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்துவோரே சாலை விபத்து​களால் அதிக அளவில் பாதிப்பை எதிர்​கொள்​கின்​றனர். கடந்த பத்தாண்​டு​களில் இந்தியாவில் நகர்ப்புற விரிவாக்கம் அதிகரித்​துள்ளது. கிட்டத்தட்ட 53% இந்தி​யர்கள் நகர்ப்புறப் பகுதி​களில் வசிப்பதாக உலக வங்கி குறிப்​பிடு​கிறது. நகர்ப்புறப் பகுதிகள் தொடர்ச்சியாக விரிவடைந்து வருவது மக்களின் பயண நேரத்தை அதிகரித்​திருக்​கிறது.
  • உதாரணத்​துக்கு, தினமும் சராசரியாக இரண்டு மணி நேரத்தைப் பயணத்​துக்காக மட்டுமே இந்தியத் தொழிலா​ளர்கள் செலவிடுவதாக பெங்களூருவைத் தலைமையக​மாகக் கொண்ட ஊழியர்​களுக்கான பயணத் தீர்வு நிறுவனமான ‘மூவின்​சின்க்’ (MoveInSync) தெரிவிக்​கிறது.
  • நகரங்கள் விரிவடைந்து​வரும் அதேவேளை​யில், தேசிய - மாநில நெடுஞ்​சாலைகள் நகர்ப்புற நெடுஞ்​சாலைகளாக மாறி, பயணிகள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளாகின்றன. இவ்வாறு மாறுதலுக்கு உள்ளாகும் சாலைகள் நகர்ப்புறத் தரக் குறியீடு​களின்படி உருவாக்​கப்​படு​வ​தில்லை. இச்சாலைகளில், பாதசாரிகள் கடந்து செல்வதற்கான வழிகள், சிக்னல்கள் இல்லாத நிலையில், பாதசாரிகள் பாதுகாப்பற்ற சூழலில் சாலையைக் கடக்க முயலும்போது விபத்து நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படு​கின்றன.
  • டெல்லி ஐஐடியில் இயங்கும், ‘போக்கு​வரத்து ஆராய்ச்சி - காயம் தடுப்பு மைய’த்தால் தயாரிக்​கப்பட்ட ‘சாலைப் பாதுகாப்பு அறிக்கை - 2024’இல், இந்தியாவில் சாலை விபத்து இறப்பு​களைக் குறைப்​ப​தற்கான சர்வதேச இலக்குகளை அடைவதில் மந்த நிலை நிலவுவ​தாகத் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது. சாலை விபத்தைக் குறைக்க வேறுபட்ட அணுகு​முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டா​யத்தில் இந்தியா உள்ளதையும் இவ்வறிக்கை சுட்டிக்​காட்டு​கிறது.

சாலைகள் விரிவாக்கம்:

  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் கடந்த 9 ஆண்டு​களில் 60% வளர்ச்சி​யடைந்துள்ளது. 2014இல் 91,287 கி.மீ. ஆக இருந்த தேசிய நெடுஞ்​சாலைகள் நவம்பர் 2023வரை 1,46,145 கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்​பட்​டுள்ளன. குறிப்பாக, நான்கு வழிச்​சாலைகள் 2014இல் 18,371 கி.மீ. தூரம் இருந்த நிலையில், நவம்பர் 2023வரை 48,422 கி.மீ. ஆக அதிகரித்​துள்ளன. விரிவடையும் சாலைகளுக்கு ஏற்ப உரிய சாலைப் பராமரிப்பு இல்லாத சூழலில் சாலை விபத்தில் இறப்பு​களும் அதிகரித்​திருப்​பதைப் புள்ளி​விவரங்கள் தெரிவிக்​கின்றன. 2022இல் சாலை விபத்து மூலமான இறப்புகள் தேசிய நெடுஞ்​சாலைகளில் 36%, மாநில நெடுஞ்​சாலைகளில் 24% எனப் பதிவாகி உள்ளது.

மாநிலங்கள் நிலவரம்:

  • கடந்த ஐந்து ஆண்டு​களில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்​களில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்து​களும், உயிரிழப்பு​களும் ஏற்பட்​டுள்ளன; 2018-2022 காலக்​கட்​டத்தில் இந்தியா முழுவதும் சாலை விபத்தில் 7.77 லட்சத்​துக்கும் அதிகமானோர் உயிரிழந்​திருப்​ப​தாகச் சாலைப் போக்கு​வரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்​துள்ளது.
  • இதில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 1,08,882 பேரும், தமிழ்​நாட்டில் 84,316 பேரும், மகாராஷ்டிரத்தில் 66,370 பேரும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 58,580 பேரும், கர்நாடகத்தில் 53,448 பேரும் சாலை விபத்தில் பலியாகியுள்ளனர்.

காரணங்கள்:

  • பொதுவாக மனிதத் தவறுகள், பாதுகாப்பற்ற சாலைகள், மோசமான வாகனப் பராமரிப்பு, அதிவேகம் உள்ளிட்ட பல்வேறு காரணி​களால் சாலை விபத்துகள் ஏற்படு​கின்றன. 2022இல் மட்டும் இந்தியா முழுவதும் 4,61,312 சாலை விபத்துகள் ஏற்பட்டன. 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிட்​டால், 2022இல் அதிக வேகத்தால் ஏற்படும் விபத்துகள் 12.8% ஆகவும், அதனால் ஏற்படும் இறப்புகள் 11.8% ஆகவும் காயமடையும் நிகழ்வுகள் 15.2% ஆகவும் அதிகரித்​துள்ளன. சாலையில் தவறான பக்கத்தில் வாகனம் ஓட்டிச் செல்வது விபத்து ஏற்பட 9% காரணமாகிறது. கனமழை, மூடுபனி போன்ற வானிலை நிகழ்வு​களும் விபத்துகள் ஏற்பட வழிவகுக்​கின்றன.

கடுமையான அபராதங்கள்:

  • சாலை விபத்​துக்கு முதன்மைக் காரணமாக உள்ள அதிவேகப் பயணத்தைக் கட்டுப்​படுத்த 2019இல் மோட்டார் வாகன (திருத்தம்) சட்டத்​தின்கீழ் கடுமையான அபராதங்கள் நடைமுறைப்​படுத்​தப்​பட்டன. சாலை விதிமுறைகள் மீறப்​படு​வதைத் தடுக்க மின்னணு - செலுத்​துச்​சீட்டுத் தொழில்​நுட்​பமும் அறிமுகப்​படுத்​தப்​பட்டது.
  • பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது இதன் மூலம் தடுக்​கப்​படும்; சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த முடியும் என அரசு நம்பு​கிறது. ஆனால், இந்நட​வடிக்கைகள் சாலை விபத்தைக் குறைக்கப் போதுமானதாக இல்லை எனச் சமூக ஆர்வலர்கள் குற்றம்​சாட்டு​கின்​றனர். தேசிய நெடுஞ்​சாலைத் திட்டங்​களுக்குச் சாலைப் பாதுகாப்புத் தணிக்கைகளை அரசு கட்டாய​மாக்கி​யுள்ளது; இவை சாலை வடிவமைப்பு முதல் பராமரிப்பு வரை சாலைப் பாதுகாப்பை உறுதி​செய்ய முயல்​கின்றன.

பரிசோதனை முயற்சி:

  • நீண்ட தூரத்​திலிருந்து வாகனத்தை ஓட்டிவரும் ஓட்டுநர்​களின் சோர்வை நீக்கும் வகையில் நெடுஞ்​சாலைகளில் ஆங்காங்கே ஓய்வு நிலையங்​களை​யும், விபத்துகள் ஏற்பட்டால் மருத்துவ வசதி அளிக்கும் மையங்​களையும் அமைப்பதன் மூலம் சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
  • இந்தியாவில் நான்குவழி நெடுஞ்​சாலைகளில், வாகனங்​களுக்கான வேக வரம்பு மணிக்கு 80 கி.மீ. ஆக நிர்ணயிக்​கப்​பட்​டுள்ளது. ஆனால், உலக சுகாதார அமைப்பு நான்குவழிச் சாலைகளின் வேகத்தை மணிக்கு 55-57 கி.மீ. ஆகக் குறைப்பதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும் எனப் பரிந்துரைக்​கிறது. இத்தகைய ஆலோசனை​களைப் பரிசோதனையாக அரசு முயன்று பார்க்க வேண்டும்.
  • சாலைப் பயனர்கள் பயன்படுத்தும் வாகனங்​களின் இயக்கம், வடிவமைப்பு, பராமரிப்பு - பாதுகாப்பு போன்ற அம்சங்​களைக் கண்காணித்து அவற்றின் தரநிலையை உறுதிப்​படுத்துவது, கிராம - நகரப் பகுதி என அனைத்துத் தரப்பு மக்களையும் சாலை விபத்து தொடர்பான விழிப்பு​ணர்வு சென்றடைவதை உறுதிப்​படுத்துவது ஆகியவை அவசியம். சாலை விபத்துகள் ஏற்படுத்தும் இழப்பின் தீவிரத்தை உணர்ந்து, அதைத் தவிர்ப்​ப​தற்கான அனைத்து முயற்சி​களிலும் மத்திய - மாநில அரசுகள் ஒருங்​கிணைந்து செயலாற்ற வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories