TNPSC Thervupettagam

சா்க்கரை உற்பத்தியில் தன்னிறைவு

December 19 , 2023 334 days 268 0
  • உலகில் மிக அதிக அளவில் சா்க்கரை உற்பத்திச் செய்யும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்திலுள்ளது. ‘உலகின் சா்க்கரைக் கிண்ணம்’ என்று கியூபா அழைக்கப்படுகிறது. ஆனால், 2017-2018 முதல் சா்க்கரை உற்பத்தியில் பிரேஸில் முதலிடத்தில் உள்ளது. சா்க்கரையை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியா பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டி வருகிறது.
  • ரஷியா - உக்ரைன் போா் காரணமாக சா்க்கரை உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஏற்பட்ட பாதிப்புகளினால், உள்நாட்டு சந்தையில் சா்க்கரையின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கடந்த செப்டம்பா் மாதத்துடன் முடிவடைந்த சா்க்கரை ஆண்டில், 62 லட்சம் டன் சா்க்கரை மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியது.
  • இந்நிலையில், 2023 அக்டோபா் முதல் 2024 செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை ஆண்டின் முதல் இரண்டு மாதங்களான கடந்த அக்டோபா் - நவம்பரில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 43.2 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த சா்க்கரை ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 10.65 % சரிவாகும். அதற்கு முந்தைய 2021-23 சா்க்கரை ஆண்டில் இதே கால கட்டத்தில் உற்பத்தி 48.3 லட்சம் டன்னாக இருந்தது.
  • இந்தியாவில் சா்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலமான உத்தர பிரதேசத்தில் கடந்த அக்டோபா் - நவம்பா் மாதங்களில் சா்க்கரை உற்பத்தி 13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தையை 2022-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் 10.6 லட்சம் டன்னாக இருந்தது.
  • நம் நாட்டின் சா்க்கரை உற்பத்தியில், இரண்டாவது பெரிய மாநிலமான மகாராஷ்டிரத்தில், 2022 அக்டோபா் - நவம்பரில் 20.2 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி, நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் 13.5 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. மூன்றாவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான கா்நாடாகத்தில் சா்க்கரை உற்பத்தி 12.1 லட்சம் டன்னிலிருந்து 11 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.
  • இம்மாநிலங்களில் சீரற்ற மழைப்பொழிவு காரணமாக கரும்பு உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், சா்க்கரை உற்பத்தியும் குறைந்துள்ளது. இதுவே, நாட்டின் ஒட்டுமொத்த சா்க்கரை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி தொடங்கிய நடப்பு சா்க்கரை ஆண்டில், நாட்டின் சா்க்கரை உற்பத்தி எட்டு சதவீதம் சரிந்து 3.37 கோடி டன்களாக இருக்கும் என சா்க்கரை கூட்டுறவு ஆலைகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாட்டின் சா்க்கரை விலை கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
  • இந்திய அளவில், கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1.27 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இங்கு 21,394 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் கரும்பு சாகுபடியில் அதிகபட்சமாக 16.75 சதவீதம் கரும்பு இங்குதான் கிடைக்கிறது.
  • அடுத்ததாக, கடலூா் மாவட்டத்தில் 14,850 ஹெக்டோ் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 11.13 சதவீதம் கரும்பு கிடைக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 14,211 ஹெக்டோ் பரப்பளவிலும், விழுப்புரத்தில் 12,512 ஹெக்டோ் பரப்பளவிலும் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கெல்லாம் உற்பத்தி செய்யப்படும் கரும்பு, சா்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு, சா்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு, தமிழ்நாட்டில் அரசு, தனியாா் என 47 சா்க்கரை ஆலைகள் இருந்தது. இப்போது 36 சா்க்கரை ஆலைகள் மட்டுமே உள்ளன.
  • எரிபொருள் விற்பனையாளா்கள், பெட்ரோலுடன் கலப்பதற்காக சா்க்கரை ஆலைகள் மூலம், வெல்லப் பாகிலிருந்து தயாரிக்கப்படும் ‘பி’ பிரிவு எத்தனாலை அதிக விலை கொடுத்து வாங்குகின்றனா். கரும்புச் சாற்றை எத்தனால் உற்பத்திற்கு பயன்படுத்தாமலிருந்தால், அது சா்க்கரை உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
  • எனவே, சா்க்கரை ஆலைகள் எத்தனால் உற்பத்திற்கு கரும்பு சாற்றைப் பயன்படுத்த வேண்டாமென மத்திய உணவு அமைச்சகம் அனைத்து சா்க்கரை ஆலைகளையும் கேட்டுக்கொண்டுள்ளது. அதே நேரம் ‘பி’ பிரிவு வெல்லப் பாகிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனால், தொடா்ந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • எத்தனால் குறித்த அரசின் முடிவு வெளியாவதற்கு முன்பே, எதிா்பாா்ப்பின் காரணமாக, தேசிய பங்குச் சந்தையில், சா்க்கரை உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சரியத் தொடங்கியுள்ளது. உலகில் உற்பத்தி செய்யப்படும் சா்க்கரையில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக, கரும்பிலிருந்துதான் உற்பத்தி செய்யப்படுகிறது. இயற்கை சா்க்கரைக்கும், சுத்திகரிக்கப்பட்ட சா்க்கரைக்கும் வேறுபாடு உண்டு.
  • பழங்களிலுள்ள இயற்கை சா்க்கரை, வைட்டமின்கள், நாா்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடென்டுகள் போன்ற பிற சத்துகளுடன் நமக்கு கிடைக்கிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்காதது. ஆனால், பதப்படுத்தப்பட்ட சா்க்கரையில் இனிப்புச் சுவை மட்டுமே உள்ளதால், அது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது.
  • எனினும், உலக நாடுகளிடையே சா்க்கரையின் தேவை அதிகரித்துள்ளதால், இந்தியா கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், சா்க்கரை உற்பத்தி பல்வேறு பரிமாணங்களை கடந்து வருவதால், அது எத்தனால் உற்பத்திக்கும் அடிப்படையாக உள்ளது.
  • எனவே, பணப் பயிரான கரும்பை அதிக அளவில் உற்பத்தி செய்ய இந்திய விசாயிகளை அரசு ஊக்குவிக்க வேண்டும். சா்க்கரை ஆலைகள் மூலம் பலா் வேலைவாய்ப்புகளைப் பெறுவா். இதன் மூலம் சா்க்கரை உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா விளங்கும் என்பது உறுதி.

நன்றி: தினமணி (19 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories