- ஒன்பது ஆண்டுகளுக்கு முன் மத்தியில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கான முக்கியக் காரணிகளில் ஒன்று, இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India - CAG) அறிக்கை. இந்நிலையில், கடந்த ஒன்பது ஆண்டு கால மத்திய பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஏழு திட்டங்கள் குறித்த அறிக்கையை சிஏஜி அலுவலகம் தற்போது வெளியிட்டிருக்கிறது. நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அறிக்கை அது.
சிஏஜி என்பது என்ன?
- சிஏஜி என்பது மத்திய-மாநில அரசாங்கங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் வரவு-செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 5இன் கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார அமைப்பு. ஒவ்வோர் ஆண்டும் மத்திய நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் முதலில் சமர்ப்பிக்கப்படும். நாடாளுமன்றம் அதை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கும்.
- குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு அது மீண்டும் அரசுக்கு அனுப்பப்படும்; அதில் ஒரு பிரதி சிஏஜி-க்கும் அனுப்பப்படும். அதன் பின்னர், அரசின் வரவு-செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்து ஓர் அறிக்கையைக் குடியரசுத் தலைவருக்கு சிஏஜி அனுப்பும். அதாவது, குடியரசுத் தலைவர் கொடுத்த வரவு-செலவு அனுமதி சரியாக நடைமுறைப் படுத்தப் பட்டிருக்கிறதா என்பதைக் கண்காணிப்பதே சிஏஜி-யின் பணி.
2023 அறிக்கையின் அம்சங்கள்
- பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலித்தல், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்ஏஎல் விமான இன்ஜின் வடிவமைப்புத் திட்டம் ஆகிய 7 திட்டங்கள் 2023 அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.
பாரத் மாலா திட்டம்
- நாடு முழுவதும் உள்ள சாலைகள், நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகளை இணைக்கும் திட்டம் இது. இதன் முதல் கட்டத்தில் 34,800 கி.மீ. சாலை அமைக்க முடிவுசெய்யப்பட்டது. இதற்காக மத்திய அமைச்சரவை ரூ.5,35,000 கோடி நிதி ஒதுக்கியது (அதாவது, ஒரு கி.மீ. சாலைக்கு ரூ.15.37 கோடி). ஆனால், 26,316 கி.மீ. சாலை அமைக்க ரூ.8,46,588 கோடி மதிப்பில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ஒரு கி.மீ. சாலைக்கு ரூ.32.17 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.
துவாரகா விரைவுப் பாதை
- இதுவே நாட்டின் முதல் எட்டு வழி விரைவுச் சாலைத் திட்டம். இத்திட்டத்துக்கான செலவு ரூ.9,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஹரியாணாவில் 18.9 கி.மீ. தூரத்துக்கும் டெல்லியில் 10.1 கி.மீ. தூரத்துக்கும் எட்டு வழி விரைவுச் சாலைகள் அமைக்கப்பட இருந்தன.
- அதற்கான திட்டச் செலவு ஒரு கி.மீ. தூரத்துக்கு ரூ.18 கோடி என மதிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டச் செலவு ஒரு கி.மீ-க்கு ரூ.250 கோடி உயர்ந்துள்ளது என சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
- தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள்: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சுங்கச் சாவடிகளின் மூலம் பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், ஐந்து சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகையானது ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், விதிமுறைகளை மீறி பயணிகளிடம் ரூ.132 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
- மக்களுக்கு மேம்பட்ட சிகிச்சையை உறுதிசெய்யும் நோக்கில், 2018இல் பிரதமர் மோடி அறிமுகம் செய்துவைத்த மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாத நிலவரப்படி 24.3 கோடி ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப் பட்டுள்ளன. சிஏஜி அறிக்கையின்படி, இவற்றில் 7.5 லட்சம் மருத்துவக் காப்பீடு அட்டைகள் ஒரே அலைபேசி எண்ணைக் கொண்டு பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுவருகிறது. இதற்கான மேம்பாட்டுத் திட்டத்தில், ஒப்பந்ததாரர்களிட மிருந்து உத்தரவாதத் தொகை குறைவான அளவே வாங்கப்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.9.73 கோடி லாபமும், அரசுக்குச் சுமார் ரூ.8.22 கோடி இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
பிற திட்டங்கள்
- கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டத்துக்கான பணத்திலிருந்து மத்திய அரசின் விளம்பரங் களுக்காகச் சுமார் ரூ.2.44 கோடி செலவழிக்கப் பட்டிருக்கிறது; இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் விமான இன்ஜின் வடிவமைப்புத் திட்டத்தின் குளறுபடிகள், உற்பத்தியில் தாமதம் ஆகியவற்றின் காரணமாகச் சுமார் ரூ.159 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி சுட்டிக்காட்டுகிறது.
அரசின் பதில் என்ன?
- சிஏஜி வெளியிட்ட அறிக்கையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிராகரித்துள்ளார். துவாரகா விரைவுச் சாலை அமைக்கப்பட்டதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை. மாறாக,சிஏஜிக்குப் போதுமான தகவல்களை நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் வழங்காததே இந்தச்சர்ச்சைக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி : இந்து தமிழ் திசை (23 – 08 – 2023)