சிகரம் தொட்ட இளையராஜாவின் சிம்பொனி! பெருமை கொள்ளக் காரணங்கள் என்னென்ன?
- திஸ் இஸ் யுவர் ஃபர்ஸ்ட் டைம் எக்ஸ்பிரியன்ஸிங் திஸ் (இது உங்கள் முதல்முறை அனுபவமாக இருக்கும்) லண்டனில் உள்ள ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் தனது 'வேலியன்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்வதற்கு முன்பு இளையராஜா பேசிய வார்த்தைகள் இவை.
- சுமார் 45 நிமிடங்களுக்கு நீடித்த சிம்பொனியை முடிக்கும்போது இளையராஜா கூறிய வார்த்தைகளை அங்கிருந்த இசைப் பிரியர்கள் பலர் அனுபவித்திருப்பார்கள்
- சிம்பொனியை எழுதி அதனை சர்வதேச அளவில் அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை 82 வயதான இளையராஜா அடைந்துள்ளார். இதுமட்டுமின்றி துபை, பாரீஸ், ஜெர்மன் போன்ற பல்வேறு நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சியையும் நடத்தவுள்ளார்.
- சினிமா என்ற சிறிய பெட்டிக்குள் இருந்து வெளியே வந்து, இந்த ஹார்மோனியம் இசைக்கத் தொடங்கியுள்ளது. 5 நிமிடத்திற்குள் 4 பாடல்கள், இரண்டு பின்னணி இசைத் துணுக்கு என சிறிய வட்டத்திற்குள் இருந்து மேலெழுந்து சிம்பொனி என்ற வானில் பறக்கத்தொடங்கியுள்ளார்.
- சிம்பொனி என்ன அத்தனை பெரியதா? என்ற கேள்வி எழலாம்.
- சிம்பொனி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொண்டால் இளையராஜா எத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார் என்பதை உணர முடியும்.
- ஒரு கதை, சம்பவம் அல்லது நிகழ்வை அடிப்படையாக வைத்து அதனை வார்த்தைகளின்றி வெறும் வாத்தியங்கள் மூலம் நான்கு பகுதிகளாக இசை வடிவத்தில் விளக்குவது சிம்பொனியாகும். இதனை ஆர்கெஸ்ட்ரா என்றும் அழைக்கலாம்.
- உலகில் பல வகையிலான ஆர்கெஸ்ட்ரா உள்ளன. அதில் முக்கியமானவையாக இரண்டு உள்ளன.
- சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா
- சேம்பர் ஆர்கெஸ்ட்ரா
- சிம்பொனி என்பது வெறுமனே இசைக் குழுவினர் இணைந்து வாத்தியங்களை இசைப்பது மட்டுமல்ல, அதற்கு சில விதிமுறைகளும் உண்டு.
- எவ்வளவு நேரம் இசைக்கப்பட வேண்டும்? எத்தனை இசைக் கருவிகள்? என்னென்ன வகையிலான கருவிகளைப் பயன்படுத்தலாம்? எத்தனை இசைக் கலைஞர்கள் பங்குபெற வேண்டும்? என அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
- அதற்குட்பட்டு இருந்தால் மட்டுமே அது சிம்பொனியாக அங்கீகரிக்கப்படும். இதனை ஒழுங்குபடுத்தியவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஜோசப் ஹேடன். இதனால் இவர் சிம்பொனியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
- சிம்பொனி என்றாலே உலக அளவில் அறியப்படும் மொசாட், பீத்தோவன் ஆகியோருக்கு இவரே இசை குரு. அவரிடமிருந்து இசை இலக்கணங்களைக் கற்று இவர்கள் சிம்பொனி படைத்தனர்.
இசை வடிவம் எப்பொழுது சிம்பொனியாகிறது?
- ஒரு சிம்பொனி குறைந்தபட்சம் இருபது நிமிடங்கள் இருக்க வேண்டும். (தற்போது இளையராஜா படைத்த 'வேலியன்ட்' சிம்பொனி 45 நிமிடங்கள்)
- 18 முதல் 24 வகையான இசைக் கருவிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
- 80 முதல் 120 இசைக் கலைஞர்கள் வரை ஒரு அரங்கத்தில் அரை வட்ட வடிவில் அமர்ந்து இசைக்க வேண்டும். இவ்வாறு இசைக்கப்படுவது சிம்பொனியாகிறது.
- மாறாக இந்த விதிகளில் ஒன்று பின்பற்றப்படாமல் இருந்தால்கூட, அது சேம்பர் ஆர்கெஸ்ட்ராவாகிவிடும். சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவின் விதிகளின் எண்ணிக்கையில் குறைந்த அளவிலான கலைஞர்கள், வாத்தியங்கள் பங்குபெறுவது சேம்பர் ஆர்கெஸ்ட்ரா.
- சிம்பொனியில் மிகவும் முக்கியமானது என்னவென்றால், அது 4 வகையான உணர்வுகளைக் கொடுக்க வேண்டும்.
- வேகமான இயக்கம் (The Fast Movement)
- மெதுவான இயக்கம் (The Slow Movement)
- நடன இயக்கம் (The Dance Number)
- ஈர்க்கக்கூடிய வகையிலான வேகமான இயக்கம் (Impressive Fast Movement)
- என நான்கு வகையான உணர்வுகளை சிம்பொனி கொடுக்க வேண்டும். இந்த நான்கு பகுதிகளையும் உருவாக்குவதற்காகத்தான் 20 முதல் 45 நிமிடங்கள் வரைத் தேவைப்படுகிறது.
வேகமான இயக்கம்
- சிம்பொனிக்கு உதாரணமாக திருமணத்தைக் குறிப்பிடலாம். அதாவது, திருமண நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது உறவினர்கள், நண்பர்கள், சர்வதேச அளவிலான முக்கிய பிரமுகர்கள் எனப் பலரும் ஒன்று கூடுவார்கள். இதனால் திருமணம் நடைபெறும் இடமே கோலாகலமாக இருக்கும். இதைக் குறிப்பதற்கு துள்ளலான இசை தேவைப்படும்.
மெதுவான இயக்கம்
- இப்போது திருமண அரங்கிற்குள் மணமகன், மணமகள் அறிமுகப்படுத்தப்படுவார்கள். இங்கு தொடக்கத்தில் இருந்த துள்ளல் இசை ஆழமாகச் சென்று விரிவான மெல்லிய இசை தொடங்க ஆரம்பிக்கும். இதில் அந்தப் பகுதியே அமைதியாகி, எல்லோர் பார்வையும் மணமக்கள் மீது விழும்படி இசை அமைந்திருக்கும்.
நடன இயக்கம்
- திருமணத்தின் உச்சமான மோதிரம் மாற்றிக்கொள்வது மகிழ்ச்சியின் உச்சம். உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் கேளிக்கையில் நிறைந்திருப்பார்கள். அதனால் இங்கு நடனமாடும்படி இசை அமைந்திருக்கும்.
ஈர்க்கக்கூடிய வகையிலான வேகமான இயக்கம்
- இப்போது திருமணம் முடிந்து மணமகள் மணமகனின் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுவார். உணர்வுகள் ஒன்றுதிரண்டு கொப்பளிக்கும் இடமாக இருக்கும். மணமகளின் மனதில் பெரும் பதட்டமும் வருத்தமும் நிறைந்திருக்கும். இதனால், இங்கு இசையில் நிறைய பரிசோதனைகளும் புதிய முயற்சிகளும் செய்து பார்க்கப்படும். இங்கு இசையமைப்பாளர் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தி சிம்பொனியை நிறைவு செய்வார்.
- இவ்வாறு நான்கு வகையான உணர்வுகளைக் கொண்டதாக சிம்பொனி இருக்க வேண்டும்.
- இந்த சிம்பொனி எந்தவொரு சினிமா பாடல்களையோ, இசையையோ எதிரொலிப்பதைப் போன்று இருக்கக் கூடாது. அவ்வாறு எதிரொலித்தாலும் அது சிம்பொனிக்கான தகுதியை இழந்துவிடும் எனலாம்.
- இந்த விதிகளையெல்லாம் பின்பற்றி இசைக் குறிப்புகளை எழுதி அதனை அரங்கேற்றினால்தான் அது சிம்பொனி என ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனை ஒலிப்பதிவு செய்யக் கூடாது. பொதுவெளியில் பார்வையாளர்கள் மத்தியில் இசைக்க வேண்டும். இதனால்தான் என்னவோ உலக அளவில் சிம்பொனி அரங்கேற்றிய இசைக் கலைஞர்கள் சொற்பமாகவே உள்ளனர்.
35 நாள்களில் எழுதிய இளையராஜா
- சிம்பொனிக்கான விதிமுறைகளைக் கேட்கும்போதே இவ்வளவு சிரமமாகவும் நுணுக்கமாகவும் உள்ளதென்றால், இந்த விதிமுறைகளையெல்லாம் பின்பற்றி 35 நாள்களில் சிம்பொனியை எழுதி முடித்துள்ளார் இளையராஜா. தனது நிகழ்ச்சிகள், பாடல் பதிவுகளுக்கு இடையே அவர் இதனைச் செய்ததாக விடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சிம்பொனி எழுதி முடித்துவிட்டேன் எனக் கூறிய இளையராஜாவின் விடியோவை வழக்கமான அவரின் விடியோக்களில் ஒன்றாகக் கடந்துசென்றுவிட்டோம். ஆனால், சிம்பொனியை கேட்கும்போதும் அதற்குரிய உழைப்பை அறியும்போதும்தான் அவர் முடித்தது எத்தனை பெரிய வேலை என்பது தெரியும்.
- சிம்பொனி எழுத வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தற்போது எழுந்ததல்ல. எனில் இதனை முன்பே செய்திருக்கலாமே? என்ற கேள்வி எழலாம்.
- இளையராஜா இதனை முன்பே தனது படங்களிலும் செய்துள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? இதனை அவரே பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.
- பன்னீர் புஷ்பங்கள் படத்தில் ஆனந்த ராகம் கேட்கும் காலம் எனத் தொடங்குவதற்கு முன்பு ஒரு இசைக் கோர்வை வரும். அது சிம்பொனியின் நிறைவுக்கட்டம்.
- புதிய வார்ப்புகள் படத்தில் இதயம் போகுதே எனத் தொடங்கும் பாடலுக்கு முன்பு சிம்பொனியின் சாயலை உணரலாம். சில மேடைகளிலும் சிம்பொனி பின்னணியில் இளையராஜா இப்பாடலைப் பாடியுள்ளார்.
- 1980களில் வந்த படங்கள் இவை. எனில் அப்போதிலிருந்தே மேற்கத்திய சிம்பொனியை நம் பாமர மக்களைக் கேட்க வைத்துள்ளார். நாம்தான் வழக்கமான ரசிகர் கூட்டமாகவே இருந்துவிட்டோம். அப்போது தவறிய அங்கீகாரம் இப்போது 'வேலியன்ட்' மூலம் கிடக்கத் தொடங்கியுள்ளது.
விமர்சனங்களுக்கு ஒரே பதில்
- இசையில் எவ்வளவு உயரம் சென்றாலும் அவரிடம், தான் என்ற அகந்தை மாறவில்லை என விமர்சிப்பவர்கள் சிலர் உண்டு. அதற்கு உதாரணமாக லண்டன் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் அவர் பேசிவிட்டுச் சென்ற விதத்தைக்கூட உதாரணம் கூறுவர்.
- சிலர், தமிழ்நாட்டில் மார்கழி மாத கச்சேரி செய்ய முடியாத குறையை லண்டன் சென்று சிம்பொனி அரங்கேற்றம் செய்து நிவர்த்தி செய்துகொண்டார் என்றும் கூறுவர்.
- இவற்றுக்கெல்லாம் இளையராஜா எப்போதோ பதில் அளித்துவிட்டார். ''இவ்வளவு வேலை செய்த எனக்கு ஆணவம் உள்ளதென, வேலையே செய்யாத நீ கூறுகிறாயே, உனக்கு எவ்வளவு ஆணவம்?'' என்று ஒரு பேட்டியில் விமர்சனங்களுக்கு பதில் அளித்திருப்பார்.
- அது இப்போதும் அவருக்குப் பொருந்துகிறது. சிம்பொனி அரங்கேற்றியதன் மூலம் ஆசியாவின் மற்ற எந்தவொரு இசைக் கலைஞரும் செய்ய முடியாததை அவர் செய்துகாட்டியுள்ளார்.
- இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒன்று தோன்றுகிறது. இளையராஜா தன்னை மட்டுமே அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லவில்லை. நம் ரசனையையும்தான்.
நன்றி: தினமணி (11 – 03 – 2025)