TNPSC Thervupettagam

சிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிறது

April 19 , 2023 634 days 376 0
  • சிக்கிம் அரசு முந்திக்கொண்டிருக்கிறது என்று சொல்ல முடியாது. தாமதமாகவேனும் கண் விழித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு போன்ற ஏனைய மாநிலங்கள் இன்னும் தூங்குகின்றன.
  • சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங், “இனி ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ளும் அரசு பெண் ஊழியர்களுக்கு சலுகைகள்” என்று அறிவித்திருப்பது இதுவரை நாம் மக்கள் தொகையை அணுகிவந்த பார்வையில் நிச்சயமாக மிகப் பெரிய திருப்பம். “ஒன்றுக்கு அடுத்து இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு. மூன்றாவது குழந்தையும் பெற்றுக் கொண்டால் இரண்டு ஊதிய உயர்வுகள்” என்ற அறிவிப்பை அரசு ஊழியர்களைத் தாண்டியும் அனைத்துத் தரப்பு மக்களுக்குமானதாக தமங் வெளியிட்டிருக்கலாம். அப்படி அறிவிக்கும் நாளும் வரும்.
  • குழந்தைப்பேறு இல்லாதோர் செயற்கைக் கருத்தரித்தல் முறையை (ஐவிஎஃப்) அணுகுவதற்கு உதவும் முடிவையும் சிக்கிம் அரசு எடுத்துள்ளது. இதன்படி ரூ.3 லட்சம் அரசின் நிதி உதவியைப் பெறலாம். கூடவே பேறுகால விடுப்பாகப் பெண் ஊழியர்களுக்கு 365 நாட்களையும், ஆண் ஊழியர்களுக்கு 30 நாள் விடுப்பையும் சிக்கிம் அரசு அறிவித்துள்ளது.
  • மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்ற பெயரில் பிறப்பு விகிதம் வீழ்ந்திருப்பது எவ்வளவு பெரிய சிக்கல் என்று சிக்கிம் உணர்வதன் விளைவு இது. ஐரோப்பிய நாடுகளில் குழந்தைப்பேற்றை ஊக்குவிக்கும் போக்கு உருவாகி நெடுங்காலம் ஆகிறது. இந்தியா இப்போதுதான் மெல்ல உணர்கிறது.
  • உலகிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடு என்ற இடத்தை ஒட்டி இந்தியா நின்றாலும், எல்லா மாநிலங்களிலும் ஒரே சூழல் இல்லை. வடகிழக்கு மாநிலங்கள் குறைந்த மக்கள்தொகையையே கொண்டிருக்கின்றன. சிக்கிமின் மக்கள்தொகை வெறும் 6.10 லட்சம். சுமார் 24 கோடி மக்கள்தொகையைக் கொண்ட உத்தர பிரதேசத்தின் கோராக்பூர் நகரம்   ஒட்டுமொத்த சிக்கிமுக்கும் சமானம்!
  • அரை நூற்றாண்டுக்கு முன் இந்திய அரசு அறிவித்த ‘மக்கள்தொகைக் கொள்கை’ அன்றைய தேவையின் விளைவு. இன்று மதிப்பிடுகையில், வெற்றியும் தோல்வியும் கலந்த ஒன்றாகத் தெரிகிறது அது. ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்ற பிரச்சாரத்துடன் வீட்டுக்கு இரு குழந்தைகள் எனும் இலக்கை அது மையப்படுத்தியது.
  • விளைவாக, சுதந்திரம் அடைந்த காலத்தில் பெண்களின் மகப்பேறு சராசரியாக ஆறு குழந்தைகள் என்ற இடத்திலிருந்து இரண்டு குழந்தைகள் என்ற இடத்தை இன்று வந்தடைந்திருக்கிறது. நாட்டின் ஆரோக்கியத்திலும், வீட்டின் ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாட்டை இது கொண்டுவந்திருக்கிறது. பொருளாதாரரீதியாகப் பெரும் தாவலை இது நமக்குத் தந்திருக்கிறது. அதேசமயம், இளையோர் – முதியோர் இடையேயான இயற்கையான தொடர்ச்சியை இந்தக் கொள்கை மோசமாக  அறுத்துவிட்டிருக்கிறது.
  • சமூகத்திலும் குடும்பங்களிலும் முதியோர் ஒருவருக்கு பிரச்சினை ஆகும் சூழலை இப்போதைய கொள்கை உருவாக்கி இருக்கிறது. திருமணமான ஒரு தம்பதி 25 வயதில் பெற்றோர் ஆகிறார்கள்; ஓரிரு ஆண்டுகளுக்குள் அடுத்த குழந்தையையும் பெற்றெடுக்கிறார்கள் என்றால், அவர்கள் 85 வயதை எட்டும்போது அவர்களும் முதியவர்கள்; அவர்களுடைய குழந்தைகளும் முதியவர்கள்; பேரப் பிள்ளைகள் அடுத்த 10 ஆண்டுகளில் முதுமைக்கு நகரவிருப்பார்கள்.
  • முதியவர்களுக்கு உரிய கவனிப்பு கிடைக்காது என்பதோடு, நம் சமூகத்தில் இவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளோ வருமானமோ கிடையாது என்பதால், பொருளாதாரரீதியிலும் பெரும் தேக்கம் உண்டாகும்.
  • இந்தியா மட்டும் இன்றி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டைப் பொருளாதார வளர்ச்சிக்கான கருவிகளில் ஒன்றாகக் கையாண்ட பல சமூகங்களும் இன்று இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றன. மருத்துவ வளர்ச்சியால் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் தொடர்ந்து நீடிப்பதால், ஜப்பான் போன்ற நாடுகளில் 100+ வயது தாயைப் பார்த்துக்கொள்வது எப்படி என்று தெரியாமல் பரிதவிக்கும் 75+ வயது மகன்கள், இவர்கள் இருவரையும் எப்படிப் பார்த்துக்கொள்வது என்று பரிதவிக்கும் 50+ வயது பேரர்கள் பிரச்சினை மிக சகஜமாக இருக்கிறது.
  • பல நாடுகள் இதிலிருந்து சுதாகரிக்கின்றன. உலகிலேயே மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை ‘ஒரு குழந்தைக் கொள்கை’ வழி மூர்க்கமாகச் செயல்படுத்திய சீனா இன்று மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்படி மக்களை உற்சாகப்படுத்துகிறது. அப்படிப் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்குச் சலுகைகளை அறிவித்திருக்கிறது. 10 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு ‘மதர் ஹீரோயின்’ பட்டம் கொடுத்து, பல லட்சம் ரொக்கப் பரிசு உள்பட பல்வேறு சலுகைகளை அளிக்கும் அரசாணையை அண்மையில் வெளியிட்டிருக்கிறது ரஷ்யா. அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் குழந்தைப்பேற்றை ஏற்கெனவே ஊக்குவிக்கின்றன.
  • இந்தியாவும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறது. மக்கள்தொகையில் 2011இல் 9%ஆக இருந்த முதியவர்களின் எண்ணிக்கை 2036இல் 18% ஆகிவிடும் என்று தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறுவனம் சொல்கிறது (மக்கள்தொகையில் 11% எனும் பங்குடன் நாட்டிலேயே அதிகமான முதியவர்கள் விகிதத்தைக் கொண்டிருக்கும் மாநிலம் எனும் தமிழகம் என்பதை இங்கே கூடுதலாக நாம் நினைவில் கொள்ள வேண்டும்).
  • இந்தியாவில் 90% பேர் அமைப்புசாராத் துறைகளில் இருப்பவர்கள் என்பதால், 60 வயதைக் கடந்ததும் இவர்களுக்குப் பல மேலைநாடுகளைப் போல ஓய்வூதியம் போன்ற சமூக நலப் பாதுகாப்பும் கிடையாது என்பது நிலைமையை மேலும் தீவிரமாக்கக் கூடியது. அப்படியென்றால், இந்திய அரசு என்ன செய்ய வேண்டும்? தன்னுடைய மக்கள்தொகைக் கொள்கையை மீளாய்வுக்கு உள்ளாக்க வேண்டும்.
  • துரதிருஷ்டவசமாக நேர் எதிராக சிந்திக்கும் ஆட்சியாளர்கள் கைகளில் இந்தியா இன்றைக்கு இருக்கிறது. ‘இந்தியாவில் மக்கள்தொகை பெருக சிறுபான்மையினரே காரணம்’ என்ற கதையாடலின் வழி அரசியல் அனுகூலம் பெறும் கட்சி பாஜக. விளைவாக மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை வலியுறுத்துவதான பாவனையை அது கையாள்கிறது. உத்தர பிரதேச அரசு சென்ற ஆண்டில் அறிவித்த ‘புதிய மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் நலச் சட்டம் 2021’ ஓர் உதாரணம். இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளும் தம்பதியருக்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் அரசு சலுகைகளை ரத்துசெய்யும் வழிமுறையாக இதைத் திட்டமிட்டது அரசு.
  • இன்னொரு பார்வையில், இந்தி மாநிலங்களில் இப்போதைக்கு இத்தகு அணுகுமுறையை அரசு நியாயப்படுத்தவும் முற்படலாம். ஏனென்றால், குழந்தைப்பேறு விகித சராசரி தேசிய் அளவில் 2.2 என்றால், உத்தர பிரதேசத்தின் சராசரி 2.5. எல்லா இந்தி மாநிலங்களிலும் கிட்டத்தட்ட இதுவே நிலை. ஆனால், மக்கள்தொகை கட்டுப்பாட்டைக் கடந்த காலத்தில் தீவிரமாக முன்னெடுத்த இந்தி பேசாத மாநிலங்கள் எல்லாவற்றிலுமே குழந்தைப்பேறு விகிதம் கடுமையாகச் சரிந்திருக்கிறது. உதாரணமாக, தமிழகத்தின் குழந்தைப்பேறு விகித சராசரி 1.4. அதாவது, தமிழ்நாட்டின் கணிசமான குடும்பங்கள் ஒரு குழந்தையோடு நிறுத்திக்கொள்கின்றன.
  • அநேகமாக பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் ‘மக்கள்தொகைக் கட்டுப்பாடு’ ஓர் அரசியல் கதையாடலாக முன்னெடுக்கப்படுகிறது. உலகின் போக்கை அல்லது ஒட்டுமொத்த இந்தியப் போக்கை அவர்கள் கவனிக்க விரும்பவில்லை.
  • இப்படிப்பட்ட சூழலில்தான் மாநிலங்கள் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுகிறது. மக்கள்தொகைக் கொள்கையில் இதுவரை ஒன்றிய அரசை அடியொற்றியதற்கு மாற்றாக, தத்தமது மாநிலச் சூழல் சார்ந்து ஒவ்வொரு மாநில அரசும் பிரத்யேகமாகச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தியக் கூட்டாட்சிக்கு இது மேலும் ஒரு பரிமாணம் கொடுக்கும்.
  • குடும்பச் சூழல், குடும்பத்தின் - மாநிலத்தின் பொருளாதாரம் எனும் புள்ளிகளைத் தாண்டி அரசியல் பிரதிநிதித்துவத்திலும் மக்கள்தொகைக் கொள்கை பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. 1976இல் மக்கள்தொகைக் கட்டுப்பாடு கொள்கையை அறிவித்தது முதலாக மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற / சட்டமன்ற பிரதிநிதித்துவத்தை மறுவரையறுக்கும் பணியை நிறுத்திவைத்திருக்கிறது இந்திய அரசு.
  • இந்த மறுவரையறை 2026இல் தவிர்க்க முடியாததாக இருக்கும் என்றும் நாடாளுமன்றக் கட்டிட விஸ்தரிப்பானது இதை மனதில் வைத்தே மேற்கொள்ளப்படுகிறது என்றும் இன்று  பேசப்படுகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ளபடி ‘மக்கள்தொகைக்கு ஏற்ப மக்களவையில் இடங்கள்’ என்று தொகுதிகள் மறுவரையறுக்கப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் பெரும் இழப்பை அதில் சந்திக்க நேரிடும். ஏற்கெனவே மக்களவையில் 24.3%ஆக இருக்கும் தென் இந்திய மாநிலங்களின் பிரநிதித்துவம் மேலும் குறைந்து, 41.0%ஆக இருக்கும் இந்தி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும். இந்தி பேசும் மாநிலங்களின் மேலாதிக்கத்துக்கு இது வழிவகுக்கும்.
  • அப்படி நடக்காமல் இருக்க இதுபற்றி இந்தி பேசாத மாநிலங்கள் பேச வேண்டும்; புதிதாக ஒரு மாற்று ஏற்பாட்டை ஒன்றிய அரசிடம் முன்மொழிய வேண்டும். இதற்கெல்லாமும் நமக்கு என்று தனிக் கொள்கை வகுப்பது அவசியம் ஆகிறது.
  • தமிழ்நாட்டுக்கு என்று தமிழக அரசு தனி மக்கள்தொகைக் கொள்கையை வகுக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து பேசிவந்திருக்கிறேன். ஆச்சரியப்பட ஏதும் இல்லை. இந்திய அரசு இது தொடர்பில் கவனம் ஏதும் செலுத்தாத நிலையில், அந்தப் பணியை மாநில அரசுகளே முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. 
  • அப்படியென்றால், இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள தமிழக அரசு தம் மக்களை உற்சாகப்படுத்த வேண்டுமா? உற்சாகப்படுத்தலாம் அல்லது முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையிலான இடைவெளியைக் கொஞ்சம் அதிகரிக்கும்படி கூறலாம்.
  • திருமண வயது சார்ந்தும், குழந்தைப்பேறு சார்ந்தும் திட்டமிட மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கலாம். குழந்தைப்பேறு எப்போதும் மக்களின் தனிப்பட்ட விஷயம்; குறிப்பாக பெண்கள் தீர்மானிக்க வேண்டிய முடிவு. அதேசமயம், அரசு அதில் ஏற்கெனவே குறுக்கிட்டிருக்கும் நிலையில், தன்னுடைய நிலைப்பாட்டால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளை மக்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய கட்டாயம் அதற்கு உண்டு.
  • எப்படியும் ‘இரண்டுக்கு மேல் நமக்கு எதற்கு?’ என்று தம்பதியருக்குக் குறுக்கே அரசு நின்ற காலம் முடிந்துவிட்டது என்பதையேனும் மக்களுக்கு அது தெரிவிக்க வேண்டும்!

நன்றி: அருஞ்சொல் (19 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories