- தொழிலாளர் தினமாக உலகமெங்கும் கொண்டாடப்படும் மே 1ஆம் தேதி, தமிழ்நாட்டுக்கு இன்னும் கூடுதல் சிறப்பைத் தரக்கூடியது. 1923 மே 1ஆம் தேதி, இந்தியாவிலேயே முதன் முறையாகத் தொழிலாளர் தினத்தைச் சென்னையில் கொண்டாடியவர் ‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர்.
- 1918 இல் இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கிய சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர். தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகளுக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த சிங்காரவேலரை இன்று நினைவில் கொள்வது அவசியம்.
- 1860 பிப்ரவரி 18 அன்று சென்னையில் மீனவர் குடும்பத்தில் பிறந்த சிங்காரவேலர், தனது அபாரமான கல்வித் திறன் மூலம் உயர்ந்து, வெற்றிகரமான வழக்கறிஞராகப் பணியாற்றினார். கூடவே, சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். காங்கிரஸில் இணைந்து காந்தியின் தலைமையில் நடந்த ஒத்துழையாமை இயக்கம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட அவர், நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் உழைக்க வழக்கறிஞர் தொழிலுக்கு விடைகொடுத்தார்.
- உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பிரதிநிதியாகவே காங்கிரஸ் மாநாடுகளில் கலந்துகொண்ட சிங்காரவேலர், 1922இல் பிஹாரின் கயையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில், ‘தோழர்களே!’ (Comrades) எனக் கூட்டத்தினரை விளித்தது, இந்தியாவின் இடதுசாரிச் சிந்தனையாளர்களால் இன்றும் பெருமிதத்துடன் நினைவுகூரப்படுகிறது. அதன் நீட்சியாக, 1923 மே 1 அன்று சென்னைக் கடற்கரையில் முதன்முறையாக மே தினக் கூட்டத்தை அவர் நடத்தினார்.
- “நமது சொந்த சுயராஜ்யத்தை அமைத்தால் ஒழிய, தொழிலாளர்களின் துன்பங்களை ஒழிக்க முடியாது” என்று அன்றைய கூட்டத்தில் முழங்கினார். சுதந்திரப் போராட்டத்தில் தொழிலாளர்களும் விவசாயிகளும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என மகாத்மா காந்தியை வலியுறுத்திய சிங்காரவேலர், ‘வரக்கூடிய நமது சுயராஜ்யத்தில் நிலமும், முக்கியத் தொழிற்சாலைகளும் பொதுவுடைமையாக இருக்க வேண்டும்’ என அறிவிக்கக் கோரிக்கைவிடுத்து காந்திக்குக் கடிதம் எழுதினார்.
- வர்க்கப் பிளவைத் தாண்டி இந்தியச் சமூகத்தின் சாதியப் பாகுபாடுகளையும் அவர் நன்கு உணர்ந்திருந்தார். அயோத்திதாசரின் சிந்தனைகள் மீதும், பெளத்தம் மீதும் ஆழ்ந்த பற்றுக்கொண்டிருந்த அவர், தனது இல்லத்திலேயே ‘மகாபோதி’ இயக்கத்தை நடத்திவந்தார்.
- 1925 டிசம்பர் 26-28 இல் கான்பூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாட்டுக்குத் தலைமையேற்ற சிங்காரவேலர், இந்தியாவில் நிலவும் சாதிக் கொடுமைகள் குறித்து அம்மாநாட்டின் உரையில் அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தை அரசியல், பொருளாதாரக் கொள்கையாகச் சுருக்கிவிடாமல், சமூகவியல், பண்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய சித்தாந்தமாக வளர்த்தெடுப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
- சுயமரியாதை இயக்கத்துடனும் பெரியாருடனும் நெருக்கம் காட்டிய சிங்காரவேலர், கொள்கை விஷயத்தில் முரண்பாடு ஏற்பட்டால் தயங்காமல் விமர்சித்தார்.மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் என அழைக்கப்படும் ‘பி அண்டு சி’ ஆலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கெடுத்தார். ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட அவர் மீது சதி வழக்கு தொடரப்பட்டு, சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் போராளியாகவே இயங்கிய அவருக்கு, வயது மூப்பு ஒரு தடையாக இருந்ததில்லை.
- இன்றைக்கும் சாதிக் கொடுமைகள் முதல் தொழிலாளர் உரிமைப் பறிப்புக்கான முயற்சிகள் வரை பல எதிர்மறை அம்சங்கள் சமூகத்தில் நிலவுகின்றன. அவற்றை முறியடிக்கவும் சமத்துவத்தைப் பேணவும் சிங்காரவேலர் போன்ற மாபெரும் சிந்தனையாளர்களின் வார்த்தைகளை உரமாகக் கொள்வோம்!
நன்றி: தி இந்து (01 – 05 – 2023)