TNPSC Thervupettagam

சிட்டுக்குருவிகளும் மாடப்புறாக்களும்

December 9 , 2023 379 days 335 0
  • நாம் வாழும் வாழ்க்கை முறை எவ்வாறு மற்ற உயிரினங்களைப் பாதிக்கின்றது என்று நாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. 2.0 என்ற திரைப்படம் பார்த்த பிறகுதான் சிட்டுக்குருவிகளைப் பற்றியே பேச ஆரம்பித்தோம். ஆனால், அவற்றின் எண்ணிக்கை சென்னை போன்ற நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே குறைய ஆரம்பித்துவிட்டது. ஆனால், அலைபேசி கோபுரங்களிலிருந்து வரும் மின்காந்தப் புலத்தால் குருவிகள் இறக்கின்றன என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. நம் வாழ்க்கையும் சிட்டுக்குருவிகளும்: நாம் என்றைக்குப் பாரம்பரிய வீடுகளில் இருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மாறினோமோ அப்போதிலிருந்தே குருவிகளின் அழிவு ஆரம்பித்தது. ஓட்டு வீடுகளிலும் குடிசைகளிலும் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்ட பல வாய்ப்புகள் இருந்தன.
  • இன்றைய மாடி வீடுகளில் அம்மாதிரி இடங்கள் இல்லை. அடுத்ததாக, முன்பு வீடுகளில் முறத்தில் அரிசி புடைப்பார்கள்,பாத்திரங்களில் அரிசியை இட்டு கல்லைக் களைவார்கள். இப்போது யாரும் இவற்றைச் செய்வதில்லை. ஆகையால் குருவிகளுக்கும் உணவு கிடைக்க வில்லை. அதேபோல் சாப்பிட்ட மிச்சங்களை முன்பெல்லாம் கொல்லைப்புறத்தில் கொட்டுவார்கள். இன்று பாத்திரம் கழுவும் தொட்டியிலும் குப்பைத்தொட்டியிலும் கொட்டப் படுகின்றன. இன்று அரிசிமூட்டைகளும் சணல் சாக்குகளில் கட்டப்படுவதில்லை. நகரங்களில் இப்படி எல்லா வகைகளிலும் சிட்டுக்குருவிகளுக்கு உணவு கிடைக்காமல் போயிற்று.
  • சிட்டுக்குருவிகளின் வீழ்ச்சிக்கு அடுத்த முக்கியக் காரணமாகக் கருதப்படுவது ஈயம் கலக்காத பெட்ரோல் 1980களில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தியபோது வாகனங்களின் செயல்திறன் அதிகரிக்க சில வேதிப்பொருள்களைச் சேர்த்தனர். அதில் MTBE (methyl tertiary butyl ether), பென்சீன் போன்ற வேதிப்பொருள்கள் வாகனப் புகையிலிருந்து சூழலில் கலந்து சிறு பூச்சிகள், புழுக்களைக் கொன்றுவிட்டன. குஞ்சுகளுக்குச் சிட்டுக்குருவிகள் முதல் இரண்டு வாரங்களுக்குப் புழு, பூச்சிகளையே உண்ணக் கொடுக்கும். இந்த வேதிப்பொருள்கள்தாம் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்ததற்கு அடிப்படைக் காரணம் என்று கூற முடியாது. அதே நேரம் இது ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகின்றது.
  • மேலும் சிட்டுக்குருவிகள் இரவு வேளைகளில் அடைவதற்குத் தேவையான அடர்த்தியான தாவரங்கள் நகர்புறங்களில் இல்லை. ஆகையால் ஒரு சில அடர்த்தியான மரங்களுக்கு மாலை வேளைகளில் இவை வந்து சேருகின்றன. சென்னையில் ஒரு சில இடங்களில் இப்போதும் 50இலிருந்து 100வரைக்கும் சிட்டுக்குருவிகள் மாலையில் வந்து சேருவதைப் பார்த்திருக்கின்றேன். உதாரணத்திற்கு, சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு மாடி வீட்டின் இரண்டாவது அடுக்கு வரை வளர்ந்துள்ள ஒரு முல்லைக் கொடியில் பல குருவிகள் இரவைக் கழிப்பதைப்பார்த்துள்ளேன். அதே போல் அண்ணாநகரில் ஒரு மூங்கில் புதருக்கு மாலையில் குருவிகள் நூற்றுக்கணக்கில் வந்துசேர்கின்றன. இப்படி நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்த வேளையில் வேறு ஒரு பறவையின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. அது மாடப்புறா.

மாடப்புறாக்களும் மனிதர்களும்

  • அந்தக் கால தமிழ்ப்படங்களில் மாடப் புறாகளைக் காட்டும்போது கோயில், தேவாலயம், மசூதி போன்றவற்றில் இருந்து கூட்டமாகப் பறந்து போவதைக் காட்டுவார்கள். ஏனென்றால் இந்த கட்டிடங்களே அப்போது உயர்ந்த கட்டிடங்களாக இருந்தன. ஆனால், இன்று நகர் முழுவதும் பல மாடிக் கட்டிடங்கள் நிறைந்துள்ளன. இதனால் மாடப்புறாக்கள் இந்தக் கட்டிடங்களில் கூடு கட்டிப் பெருகி, நகர் முழுதும் நிறைந்துள்ளன. இந்தப்புறாக்களின் மூதாதையர் சிறு குன்றுகளில் பாறை இடுக்குகளில் கூடுகட்டி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்தன. இன்று காணப்படும் புறாக்களெல்லாம் ஆதியில் மலைகளில் வாழ்ந்துவந்த புறாக்களின் சந்ததியே.
  • நம்முடைய அடுக்குமாடி குடியிருப்புகள் இப்பறவைகளுக்குத் தங்களுடைய இயற்கை வாழ்விடமான குன்றுகளை ஒத்து இருப்பதால் இங்கு இவை பல்கிப் பெருகி வருகின்றன. நம்முடைய அடுக்கு மாடி வீடுகளில் குளிர்சாதனக் கருவிகளுக்கும் சாளரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் சிறு குச்சிகளைக் கொண்டு கூடு போன்ற அமைப்பில் 2 முட்டைகள் இடும். பொதுவாகவே இந்தக் கூடுகள் புறாக்களின் எச்சில் கழிவுகளால் நிறைந்து நாற்றமும் இருக்கும். ஆண், பெண் புறாக்கள் இரண்டுமே குஞ்சுகளுக்கு இரையூட்டி வளர்க்கும். குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் தருணத்திலேயே அடுத்து முட்டை இடுவதற்குத் தயாராகிவிடுகின்றன.
  • இப்படி இப்புறாக்கள் சிறு இடத்திலேயே கூடு கட்டி, எப்பொழுதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதாலும், நகரத்தில் கிடைக்கும் தானியங்கள் மட்டும் அல்லாமல் மனிதர்களின் மற்ற உணவு வகைகளையும் உண்டு வாழ்வதாலும் அவற்றின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. மக்களும் மதம் சார்ந்த நம்பிக்கைகளால் புறாக்களுக்கு உணவளிக்கின்றனர். இப்படிப் பல காரணங்களால் அவை அதிக அளவில், காக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளன. எல்லாக்கட்டிடங்களிலும், பூங்காக்களிலும் மட்டுமல்லாமல் கடற்கரையிலும் இவற்றைக் கூட்டம் கூட்டமாகக்காணலாம். நம் வீட்டு ஜன்னலைத் திறந்தாலே நிச்சயமாக இந்தப் புறாக்களை காணலாம் .

புறாக்களினால் ஏற்படும் இடையூறுகள்

  • மனிதர்களின் வீடுகளை ஒட்டி வாழும் இந்தப்புறாக்களைப் பல நாடுகளில் ஒரு தேவையற்ற பறவையாகக் கருதுகின்றனர். அதற்கு முக்கியக் காரணம் இவை வாழும் இடங்களில் இவற்றின் கழிவு படிந்துபோய், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதோடு சில நோய்க் கிருமிகளின் வளர்ப்பிடமாகின்றன. இந்த மாசு காற்றில் கலந்து மக்களுக்குச் சில சுவாச நோய்கள் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. மக்களின் வாழ்க்கைமுறை மாறும்போது எவ்வாறு அது மற்ற உயிரினங்களைப் பாதிக்கின்றது என்பதற்கு இந்த இரண்டு பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுதல்களே நல்ல எடுத்துக்காட்டு.
  • இந்த இரண்டு பறவைகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட தாக்கங்களை மக்கள் அறிந்து செய்யவில்லை. ஆனாலும் இன்றும் சிட்டுக்குருவிகள் வாழும் பகுதிகளில் அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக, அவை கூடு கட்டுவதற்காக அட்டைப் பெட்டிகளை வைப்பதன் மூலமும் சிட்டுக்குருவிகளின் இனப்பெருக்கத்தையும் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். மாடப்புறாக்களின் கழிவுகள் வீடுகளில் தேங்கி இருந்தால் அவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்தி சுத்தமாக வைப்பதன் மூலம் கிருமிகள் பரவாமல் தடுக்க முடியும். மேலும் மக்கள் தங்கள் வாழும் முறையையும் மற்ற உயிரினங்களுக்கு எதிர்மறை தாக்கம் ஏதும் இல்லாமலும் அமைத்துக்கொள்வதே இயற்கைக்குச் செய்யும் சிறு நன்மையாக அமையும்.

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories