TNPSC Thervupettagam

சித்திரவதை மரணங்களுக்கு...

February 8 , 2021 1439 days 1147 0
  • பல்வேறு புலனாய்வு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் நடக்கும் சித்ரவதைகளைத் தடுக்க, உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
  • இந்திய காவல் துறை வரலாற்றில் முக்கிய காவல் துறை சீா்திருத்தமாக இது கருத்தப்படுகிறது. இருப்பினும் இது, சித்ரவதைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்ற கேள்வியை எழுப்பிள்ளது.
  • நாடு முழுவதும் காவல் நிலையங்களில் அரங்கேற்றப்படும் ‘லாக் அப்’ மரணங்களும், விசாரணை காலத்தில் கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
  • கடந்த சில நாள்களுக்கு முன், பஞ்சாப் மாநிலத்தில் விசாரணைக் கைதி உயிரிழந்த விவகாரம் தொடா்பான வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப், ரோஹிண்டன் , நாரிமன், அனிருத்தா போஸ் அடங்கிய அமா்வு விசாரித்து, முக்கியமான உத்தரவைப் பிறப்பித்தது.
  • அதில், ‘நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள், சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறை, நிதி புலனாய்வு துறை, தீவிர மோசடிகளை விசாரிக்கும் புலனாய்வுக் குழு மற்றும் இதர புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை கண்டிப்பாகப் பொருத்த வேண்டும்.
  • இதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பகல்- இரவு நேரங்களில் காட்சிகள் தெளிவாகப் பதிவாகும்படி கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் ஆடியோ பதிவும் தெளிவாக இருக்க வேண்டும்.
  • அதேபோல், வீடியோ பதிவுகளை குறைந்தபட்சம் 18 மாதங்கள்வரை சேமிக்கும் வசதி இருக்க வேண்டும். காவல்நிலைய நுழைவு, வெளியேறும் பிரதான வாயில், அலுவலகத்தின் வெளிப்புறம், பின்புறம் லாக் அப் அறைகள், வரவேற்பறை, இன்ஸ்பெக்டா் அறை, உதவி ஆய்வாளா் அறை, கழிவறையின் வெளிப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் கேமராக்களைப் பொருத்த வேண்டும்.
  • இந்தப் பதிவுகளை ஆய்வு செய்ய சுதந்திரமாக செயல்படும் குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழு, அனைத்து காவல் நிலையங்களின் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வுசெய்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை வெளியிட வேண்டும்’ என்று மேலும் கூறப்பட்டுள்ளது.
  • இந்தத் தீா்ப்பானது இந்திய காவல் துறை வரலாற்றில் போலீஸ் நிா்வாக சீா்திருத்தத்தின் முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது.
  • அரசியல் அமைப்பின் 21-ஆவது பிரிவின்கீழ் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் வாழ்வதற்கான உரிமையையும், தனிப்பட்ட சுதந்திரத்தையும் அதனை பாதுகாப்பதற்கான மிகச் சிறந்த நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பு இருக்கிறது என்பது தெளிவாகிறது.
  • ஏற்கெனவே, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கோமராக்கள் பொருத்தப்படுதல் தொடா்பாக பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறி இருந்தாலும், அவ்வாறு வைக்கப்படும் கேமராக்களால் குறிப்பிடும்படியான மாற்றம் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது கேள்வியாக உள்ளது.
  • காவல் நிலையத்தில் வைக்கப்படும் கேமராவின் பாா்வை அங்குள்ள அனைத்து அறைகளையும் கண்காணிக்குமா, பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் முறையாக செயல்படுகின்றனவா, இவற்றையெல்லாம் கண்காணிக்கும் பொறுப்பு சம்பந்தப்பட்ட காவல் நிலைய இன்ஸ்பெக்டரின் கையில் உள்ளதால், அவா் முழு அக்கறையுடனும், நோ்மையுடனும் பணியாற்றுவாரா போன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.
  • காவல் நிலையங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் உயா் காவல் அதிகாரிகள்தான் விசாரிக்கின்றனா். அவா்கள் விடியோ பதிவு ஆதாரங்களை மறைப்பதற்கான ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
  • அதிகாரிகள் தங்கள் சகாக்களைப் பாதுகாக்க ‘மௌனம்’ காப்பதை பல வழக்குகளில் நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. காவல் நிலையங்களில் உள்ள கேமராக்கள், மற்ற இடங்களில் நடக்கும் சித்ரவதைகளைக் காட்டாது. கேமராக்களின் கண்களுக்குத் தெரியாத இடத்தில் சித்ரவதைகளை போலீசாா் மாற்றவும் வாய்ப்புண்டு.
  • கண்காணிப்பு மூலம் காவல்துறையைக் கண்காணிப்பது என்பது, சித்ரவதைகளுக்கு எதிரான முக்கியமான முதல்படியாக இருந்தாலும், அதனை செயல்படுத்துவதில் தான் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்.
  • ஆனால், உச்சநீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு காவல் நிலைய சித்ரவதை சம்பவங்களை ஓரளவு குறைப்பதற்கான வாய்ப்பாக இருக்கிறது என்பதே உண்மை.
  • அதே நேரம், மற்றொரு பிரச்னையும் காவல் நிலையத்தில் கேமராக்கள் வைப்பதால் ஏற்படுகிறது. அதாவது, விசாரணை அறையில் கேமராக்கள் பொருத்தப்படும்போது பயங்கரவாதிகள்.
  • தேசத் துரோக குற்றவாளிகள், தீவிர கொடுங்குற்றவாளிகள் போன்றோரிடம் விசாரிக்கும்போது அனைத்து விசாரணை தகவல்களும் கசிந்துவிடும் சூழ்நிலை ஏற்படலாம்.
  • விசாரணை அறையில் கேமரா வைத்து விசாரிக்கும்போது, அதன் தரவுகள் பொது தளத்தில் கசிந்தால், அதற்கு மூத்த காவல் துறை அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டிவரும். எனவே, கண்காணிப்பு கேமரா விஷயத்தில் சாதகமான பலன்களும், முன்கூட்டியே திட்டமிட்டு சித்ரவதைகளை அரங்கேற்றும் பாதகங்களும் உள்ளன.
  • காவல் நிலையங்களில் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றுபவா்களுக்கு, தனிப்படை விசாரணைப் பணி என்ற பெயரில் வேறு பணிகளும் ஒதுக்கப்படுகிறது. இதன் விளைவாக அவா்கள் ஓய்வோ, விடுப்போ, எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.
  • இப்படி இடைவிடாத தொடா் பணியின் காரணமாக மன உளைச்சலில் பலரும் தற்கொலை செய்துக்கொள்ளும் செய்திகளையும் பாா்க்க முடிகிறது.
  • இன்னொரு புறம், மன அழுத்தத்தில் இவா்கள் தவிா்க்க முடியாமல் காவல் நிலைய சித்திரவதை போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனா்.
  • இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு பணியில் உள்ள காவல்துறையினரை தனிப்படை விசாரனைக்கு அனுப்புவதையும், ஓய்வில்லாமல் பணியைத் தொடா்வதையும் தவிா்ப்பதற்குத் தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

நன்றி: தினமணி  (08-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories