TNPSC Thervupettagam

சித்திரை வந்தது, வேங்கை பூத்தது

April 16 , 2023 641 days 727 0
  • தமிழகக் கல்வெட்டுகளில் 60 வருடம் சுழற்சி பற்றிய செய்தி 14ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கிறது என்கின்றனர். இந்த 60 வருடங்களில் இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் பிறப்பது சோபகிருது வருடம் எனப்படும். இது 37ஆவதாக வருகிறது. இந்த சோபகிருது வருடம் இதற்கு முன் 1963 - 1964இல் வந்தது. 15ஆம் நூற்றாண்டினராகக் கருதப்படும் இடைக்காடர் இந்த சோபகிருது ஆண்டை
  • சோபகிருது தன்னில் தொல் உலகெல்லாம் செழிக்கும்
  • கோப மகன்று குணம் பெருகும் - சோபனங்கள்
  • உண்டாகும் மாரி பொழியாமல் பெய்யும் எல்லாம்
  • உண்டாகும் என்றே உரை - என்று பாடியிருக்கிறார்.

தமிழருக்கு மட்டுமல்ல

  • சித்திரை முதல் நாள் வழக்கம் தமிழகத் தில் மட்டுமல்ல கேரளம், அசாம், மேற்கு வங்கம், திரிபுரா போன்ற மாநிலங்களிலும் கம்போடியா, தாய்லாந்து, இலங்கை போன்ற கீழை நாடுகளிலும் அறிமுகமாகி இருக்கிறது. சிங்கள பௌத்தர்கள் பாலி மொழியில் இந்த மாதத்தை ‘சித்தா’ என்கிற சொல்லால் குறிக்கின்றனர்.
  • இலங்கைத் தமிழரிடமும் சிங்கள பௌத்தரிடமும் சித்திரை நாள் முக்கியமானது. இங்கே பெரியவர்கள் இளைஞர்களுக்கு ஆசிர்வாதம் செய்வதை ‘கை விசேஷம்’ என்பர். இந்த ‘கை விசேஷம்’ தமிழகத்துக் கை நீட்டத்திலிருந்து வேறுபட்டது. இளையோர் தலையில் முதியவர்கள் மூலிகையை வைத்து ஆசிர்வாதம் செய்வர்.
  • இந்த நாளில் வழுக்கு மரம் ஏறல், போர் தேங்காய் உடைத்தல், கிளித்தட்டு விளையாடுதல், ஊஞ்சலாடுதல், மகுடி கூத்து நடத்தல், வசந்தனாட்டம் நிகழ்த்தல் எனப் பலவகை விளையாட்டுகளை விளை யாடுவார்கள். இவை எல்லாமே நாட்டார் விளையாட்டுகள் அல்லது நாட்டார் வழக்காறு கள் சார்ந்தவை. கேரள எல்லைப் பகுதியில் கிடைத்த கண்ணகி கதைப் பாடல் ஒன்றில் சித்திரை விழாவில் மகுடிக் கூத்து நடத்தியது பற்றிய குறிப்பு வருகிறது. இதன் பின்னணிக் கதை கேரளத்துடன் தொடர்புடையது.

பௌர்ணமியும் நவமியும்

  • தமிழகத்தில் சித்திரை பௌர்ணமியும் நவமியும் முக்கியமானதாகக் கொள்ளப்படு கின்றன. முதல் ராஜராஜ சோழனின் கல்வெட்டு ஒன்று சித்திரை முழு நிலவிற்கும் சித்திரை முதல் நாள் விழாவிற்கும் நிவந்தம் கொடுத்த செய்தியைக் குறிப்பிடுகிறது.
  • தென் மாவட்டங்களில் சில சமூகங்களில் சித்திரை நவமியில் தோல்பாவைக் கூத்து நிகழ்வை நடத்துவதற்குக் கலைஞர்களை அழைக்கும் வழக்கம் இருந்தது. சித்திரை நவமி தொடக்கத்தில் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்கும். அதன் பின் தொடர்ந்து பாலகாண்ட நிகழ்வில் ஆரம்பித்து மறுபடியும் பட்டாபிஷேகத்தில் கூத்து முடியும். ரங்கம் ரங்கநாதர் கோயில் கல்வெட்டு (பொ.ஆ.1478) ஒரு சிற்றரசன் சித்திரை மாத  ராமநவமிக்குச் சிறப்பு நடத்த ஒரு கிராமத்தை நிவந்தம் கொடுத்ததைக் கூறுகிறது.

பஞ்சாங்கம்

  • தமிழ் ஆண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கருதப்படுவதால் இந்த மாதம் முதல் நாளில் ஓர் ஆண்டுக்குரிய பஞ்சாங்கத்தைக் கணித்துச் சொல்வது என்கிற மரபு இருந்தது. பழைய நாஞ்சில் நாட்டில் கும்ப கோணம் பஞ்சாங்கத்தை (பாம்பு பஞ்சாங்கம்) வாங்கி னார்கள். இப்போதும் அந்த நிலை தொடர்கிறது. சித்திரை முதல் நாளில் மாலை நேரத்தில் ஊர் வெளியில் மரத்தின் கீழே மக்கள் கூடிப் பேசுவது, மரக்கன்றுகளை நடுவது என்பது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது.

புண்ணிய காலம்

  • இந்த மாதம் புண்ணிய காலமாகக் கருதப்படு கிறது. இந்த நாளில் மனதில் ஓடும் எண்ணமும் உடல் சுத்தமும் ஆண்டு முழுவதும் நிலைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. கேரளத்தில் இதே நாளை ‘விஷு’ என்கின்றனர். இந்த நாளில் அதிகாலையில் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொள்வது, பல வகையான பழங்களையும் சரக்கொன்றை மலரையும் பார்ப்பது நல்லது என்கிற நம்பிக்கை இப்போதும் உள்ளது. கன்னியா குமரி மாவட்டத்தில் இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது. மஞ்சள் சரக்கொன்றை செழிப்புடன் அடையாளப்படுத்தப்படுகிறது.

அவலும் வேப்பம்பூவும்

  • சித்திரை மாதத்தில் வேப்பம்பூவை வறுத்து, இனிப்பு சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் சில கிராமங்களில் உள்ளது. சித்திரை முதல் நாளில் காலை ஆகாரமே அவல்தான். இதில் இனிப்பு, எரிப்பு என இரண்டு சுவைகளிலும் சமைக்க வேண்டும் என்பது மரபு. சம்பா அவல் உத்தமம். சர்க்கரை, தேங்காய், ஏலம், சுக்கு சேர்த்து உரலில் இட்டு இடித்துச் செய்யப்படும் அவலுக்குத் தனி ருசி. இடித்த அவலுடன் ஏலம், சுக்கு சேர்த்துச் சர்க்கரைப்பாகில் வறட்டி எடுப்பது ஒரு வகை. இதைத் தயாரிப்பதில் கொஞ்சம் சிரமம் உண்டு.
  • மிளகாய் வற்றல், தேங்காய், பூண்டு, புளி, உப்பு சேர்த்து அரைத்த துவையலுடன் நனைத்துப் பக்குவமான அவலைச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து செய்யப்படும் அவலுக்குத் தனி ருசி. இதைச் சாதாரணமான நாள்களிலும் செய்வர். சின்ன வெங்காயம், பச்சை மிளகு, கறிவேப்பிலை, கடுகு சேர்த்துத் தாளித்த கலவையுடன் நனைத்த, பக்குவமான அவலைக் கலந்து வாணலியில் சூடாக்குவது ஒரு வகை. இந்த வகையான அவல் உணவைச் சித்திரை முதல் நாளில் சாப்பிடும் வழக்கம் இன்றும் சிலரிடம் உள்ளது.

ஆட்ட விசேஷம்

  • சூரியன் மேஷ ராசியில் நுழைவது சித்திரை முதல் நாளின் சிறப்பு. மேஷ ராசி மண்டலத்தின் முதல் பகுதி. மேஷத்திற்கு ஆடு என்னும் பொருள் உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ‘நெடுநல்வாடை’ நூலில், ‘ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலம்’ என்கிற தொடர் வருகிறது. இதற்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர், ‘திண்ணிய கொம்பையுடைய மேஷ ராசி’ எனப் பொருள் கூறுகிறார். இவர் (பொ.ஆ.) 14ஆம் நூற்றாண்டினர். இதனால் சித்திரை முதல் நாள் வழக்கம் பழமையானது என்று கருதலாம்.
  • மேஷம் (ஆடு, -யாடு). ஆண்டு, ஆட்டை எனவும் படும். கன்னியா குமரி மாவட்டக் கோயில் ஆண்டு விழாக்களை ஆட்ட விசேஷம் என்று கூறுகின்றனர்.

சித்திரபுத்திரன் நோன்பு

  • சித்திரை முதல் நாளில் வேங்கைப் பூ பூப்பது சிறப்பானதாகக் கருதப்பட்டது. ‘தலை நாள் பூத்த வேங்கை’ என்று பழம் இலக்கியமான மலைபடுகடாம் கூறும். சித்திரை மாதப் பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரத்தில் சித்திரபுத்திரனுக்கு நோன்பு நோற்கப்படும். மரண தேவனான எமனின் உதவியாள் சித்திரபுத்திரன் (சித்திரகுப்தன்) உயிர்களின் பாவ புண்ணியங்களைப் பதிவு செய்பவர். சிவன் வரைந்த சித்திரத்திலிருந்து எழுந்து வந்தவர். கௌதமர் அகலிகை கதையில் பசுவின் மைந்தனாகக் காட்டப்படு கிறார். இவரைப் பற்றிய கதைகள் மதுரையை மையமாகக் கொண்டவை. தென் மாவட்டங்களில் இவரது வழிபாடு பரவலாக உள்ளது.
  • அன்று குத்து விளக்கேற்றி வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து நீண்ட பனை ஓலையில் எழுதப்பட்ட சித்திரபுத்திரன் ஏட்டை வைத்து வழிபடுவர். பின்னர் சித்திரபுத்திரன் அம்மானைப் பாடலை ஒருவர் படிக்க மற்றவர் கேட்பர். இதில் அமராவதியின் கதையை முக்கியமாகப் படிக்க வேண்டும். இந்தச் சடங்கு உணவில் அகத்திக்கீரையைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். இந்த நோன்பும் விழாவும் ஒரு காலத்தில் பரவலாக வழக்கில் இருந்தன. இன்றும் தென் மாவட்டங்களில் இந்த நோன்பு நடைமுறையில் உள்ளது.

நன்றி: தி இந்து (16 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories