TNPSC Thervupettagam

சிந்தனையின் அறிகுறி மெளனம்

July 20 , 2023 413 days 303 0
  • மன அமைதி, மகிழ்ச்சி, மெளனம், தன்னைக் கட்டுப்படுத்துதல், நற்சிந்தனை ஆகியவை தவம் எனப்படும். இவற்றில் சுட்டப்படும் மெளனம் என்பவ "சம்மதத்தின் அறிகுறி' என ஒரு குமிழுக்குள் அடைக்கப்பட்டு எத்தனையோ நல்ல சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டு வருகின்றன.
  • மெளனம் திறனுள்ளவர்களையும், திறனற்றவர்களாக்கி, அவர்களை பேசா மடந்தையாக்கி ஒருவரின் வாழ்க்கையையே சூனியமாக்கி விடுகிறது. மெளனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் சிந்தனைத் திறனாக்கி வாழ்வில் பயன்படுத்தி வெற்றியைக் கண்டிருக்கிறார்கள். ஒருவரின் மனக் கதவைத் திறக்கும் திறவுகோலாக சிந்தனை உள்ளது. தனி மனிதனின் வாழ்வைச் செம்மைப்படுத்துவது சிந்தனையும், செயலுமாம். ஒரு மனிதனுக்கு மெளனமும், சிந்தனையும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
  • உண்ணல், உறங்கல், ஊடல், கூடல், ஈனல், பேணல், முதிர்தல், இறத்தல் இவை எல்லா ஜீவராசிகளுக்கும் உரிய பொதுவான எட்டுத் தொழில்களாகும். ஆனால், மனிதன் மட்டும், "சிந்தித்தல்' எனும் ஒன்பதாவது தொழிலையும் கைக்கொண்டு உலகை நாளுக்கு நாள் மாற்றி வருகிறான். இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் நமக்குத் தேவை என்றார் சுவாமி விவேகானந்தர்.
  • எப்போது பேசாமல் மெளனமாக இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து, எதை, எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சிந்தனை ஆற்றல் நமக்கு கற்றுக் தருகிறது. மனம், வாக்கு, உடம்பு இம்மூன்றையும் அசையாமல் வைத்திருப்பதற்குப் பெயர் தான் மெளனம். ஒருவரின் மெளனத்தின் சக்தி அவரின் சிந்தனையில்தான் அடங்கியிருக்கிறது. நமது ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக இருப்பது நமது சிந்தனைதான்.
  • நற்சிந்தனை கொண்டவருக்கே மனமும் தெளிவாகும், வாழ்க்கையும் செழிக்கும். ஒரு லட்சியத்தை அடைய வேண்டுமானால், நேர்மையான, நம்பிக்கையான சிந்தனை முறைமையைக் கையாள வேண்டும். ஆனால், மெளனம் இந்த லட்சியத்தை அடைய விடாது, சில சமயம் எதிர்மறையான எண்ணங்களையே உருவாக்கும்.
  • மாசுடைய மனம் மெளனத்தின் கட்டுக்குள் இருக்காது. அப்போது எதிர்மறை சிந்தனையே அவரை அடக்கி ஆளும். தீய எண்ணங்களைப் போக்காத வரை மனதை மெளனமாக வைக்க முடியாது. அச்சமயத்தில், சிந்தனையை அடக்கிச் சும்மா இருப்பது என்பது அரிதான செயல். அவரின் அந்த சிந்தனையே, நல்லது எது, கெட்டது எது என்பதை எடுத்தியம்பி, அவரின் நேரிய நல்வழிக்கு அழைத்துச் செல்கிறது. மெளனம் என்பது ஒத்திகை என்றால், சிந்தனை என்பது அரங்கேற்றம்.
  • மனித இனம், இன்று மண் முதல் விண் வரை இயற்கையோடு ஒன்றி உயர்ந்தோங்கி வளர்ந்து நிற்பதற்கு காரணம், அவன் சிந்தனை என்னும் சிறந்த கருவியைப் பெற்று அதைப் பண்படுத்தி, பயன்படுத்த முற்பட்டதேயாகும். அவன் மெளமானவனாகவே இருந்திருந்தால் எந்த அரிய கண்டுபிடிப்புகளும் இன்று நிறைவேறியிருக்காது. அவனது சிந்தனை விரிவாலேயே உலகம் முழுவதும் பல சிந்தனைகள், செயல்களாகி எங்கும் முன்னேற்றம் காணப்படுகிறது. மக்கள் மெளனத்தால் புழுங்கி வாழும் வாழ்க்கையைவிட, சிந்தனைத் திறத்தால் சிறந்து வாழும் மக்களின் வாழ்க்கையே சிறந்தோங்கி நிற்கிறது. நம்முடைய நன்மைகளுக்குக் காரணமாக அமைகிற நல்ல எண்ணங்கள் உருவாவதற்கும் நல்ல செயல்கள் உருவாவதற்கும், நற்சிந்தனையே அடிப்படையாகிறது.
  • ஒருவரின் சொல்லும், தொண்டும், அதன் பயனும் அவரின் சிந்தனையால் விளைந்த விளைவே. எனவே, புலன்களால், பொறிகளால் வரும் செயலாக்கங்களைவிடச் சிந்தனையால் வரும் செயலாக்கம் கூடுதல் பயன் தரும் என்பதே உண்மை. செய்யும் செயலைவிட, தொழிலைவிட மனம் மூலம் எழும் நற்சிந்தனையே நல்விளைவுகளுக்குக் காரணமாக அமைகின்றன. அதனால், பலர் அடையும் பயன்கள் எண்ணிலடங்கா. மெளனம் வாழ்க்கையில் தேக்கத்தை ஏற்படுத்தும். சிந்தனை இல்லாமல் போனால் உயிரும், உடலும் வளராது, பக்குவப்படாது, அன்றாடம் நேர்மையான சிந்தனையே சிறந்த வாழ்வியல் முறையாகும். மனிதன் சிந்திக்க, சிந்திக்க விதியின் பிடியிலிருந்து விடுபடுகிறான். அதே சமயத்தில், மெளனம் அவனை கட்டுக்குள் வைக்கும்.
  • நற்சிந்தனையே நல்ல மனிதனை உருவாக்கும். சில நேரங்களில் மெளனம் நிறைய செய்திகளை எளிதாக சொல்லி விடுவதுண்டு. ஆனால், அதையெல்லாம் சரி என்று எடுத்துக்கொள்ள நமக்கு சிந்தனை அவசியமாகிறது. மெளன மொழி மூலமே நாம் சிந்தனைத் திறனை வளர்த்துக் கொள்ள முடிகிறது.
  • மெளனம் தன்னை மட்டுமே பக்குவப்படுத்திக் கொள்ள உதவுகிறது. ஆனால், சிந்தனை தன்னோடு சேர்ந்து பிறரையும் சிந்திக்கச் செய்து நேர்வழியில் பயணிக்க உதவுகிறது. உலகில் மிகவும் தெய்வீகமானதும், மிகவும் உன்னதுமானதும், சக உயிர்களிடையே நாம் காட்டும் அன்பும், இரக்கமும் தான். இது நற்சிந்தனையின் மூலமே பிறக்கும். மெளனம் கலைந்து, சிந்தித்து இதழ் திறந்து உரைக்க வேண்டும்.
  • நம்முள்ளே ஒளியைத் தேட சிந்தனையே உதவுகிறது. எல்லாவிதமான செயல்களுக்கும் சிந்தனையே அச்சாணியாக இருக்கிறது. நற்சிந்தனையை வளர்த்துக் கொண்டால் எல்லா செயல்களும் எளிதாக முடியும். தெளிவான சிந்தனை கொண்டவரின் உள்ளம் அமைதியானது. அதில் நிம்மதி நிலவும்; அந்த உள்ளம் திருப்தியில் திளைக்கும்; எப்போதும் நற்செயல்களிலேயே நாட்டம் கொள்ளும். மெளனம் செயல்களின் ஊற்றுக்கண் என்றால் சிந்தனை நதியின் பிரவாகம். மெளனம் மனதோடு பேசும், சிந்தனை வெளிப்பாடாகி ஒளிரும். அதனால் தான் நம் முன்னோர்கள் "சிந்தனை செய் மனமே' என்றனர், யாரும் "மெளனம் கொள்' என்று கூறவில்லை. சிந்தனை செய்தால் தீவினை அகன்றிடும், நல்வினை தோன்றும். மனம் வளர்ந்த வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஒருவருக்கு சிந்தனை உதவுகிறது. மனம் என்னும் கருவியை மெளனம் ஆட்கொண்டால், அது நம்மை அடிமைப்படுத்தி விடும், பிறரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் சூழ்நிலையை அது நமக்கு ஏற்படுத்தி ஆட்டி வைக்கும்.
  • நன்மை, தீமை எதுவென்பதை, நம் அறிவு கொண்டு தெளிந்த வழியில் இயக்க உதவுவது நம் சிந்தனை. சிந்தனை இல்லாவிட்டால் ஞானமில்லை. முன்னேற்றம், வளர்ச்சி, நாகரிகம் இல்லை. மனிதனுடைய சாதனை எல்லாம் சிந்தனையின் ஆற்றலைக் கொண்டுதான். எங்கு சிந்தனை தெளிவடைந்து, பரந்து, விரிந்து, ஆழ்ந்து ஓங்குகிறதோ, அங்கே வாழ்க்கையின் வளம் பெருகும். மனிதனுடைய பெருமை இடையீடின்றி ஓங்கி இலட்சிய சாகரமாகி விடும் என்கிறார் தமிழறிஞர் அ.சீநிவாசராகவன். சிந்தனையின் குரல் மெல்லியதாக எல்லார் காதிலும் விழுவதில்லை. ஆனால், அதன் தாக்கம் அதிகமானது, அழுத்தமானது. கடைசியில் உலகை வெற்றி கொள்வதும் அதுதான். ஆனால், மெளனத்துக்கு இந்த சக்தி இல்லை. எனவே, மெளனத்தை சம்மதத்துக்கு அறிகுறியாக கொள்ளாமல், சிந்தனையின் அறிகுறியாக கொள்வோம்.

நன்றி: தினமணி (20  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories