TNPSC Thervupettagam

சின்னகுத்தூசி 90: சில நினைவுகள்

June 14 , 2024 211 days 235 0
  • இன்றைய தேதியில், திருவல்லிக்கேணி வல்லப அக்கிரகாரம் அறை எண் 13 எவ்வித ஓசையுமின்றி அமைதியாக இருக்கிறது. அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை அவ்வறையில் எப்போதும் பத்திரிகையாளர்களும் அரசியல் ஆய்வாளர்களுமாக ஏராளமானோர் குழுமியிருப்பார்கள். எந்த விஷயத்தில் ஐயம் ஏற்பட்டாலும், அவர்கள் தெளிவுபெறத் தஞ்சமடையும் ஒரே இடம், சின்னகுத்தூசி என்னும் இரா.தியாகராசனின் அந்த அறைதான். தம் நினைவாற்றலால் தன்னை நாடி வருபவர்களின் ஐயத்தை சின்னகுத்தூசி தெளிவுபடுத்துவார்.
  • இளம்பருவத்திலேயே நகர திராவிட இயக்க முன்னோடிகளான சிங்கராயர், முத்துக்கிருட்டிணன், வி.எஸ்.பி.யாகூப், ‘தண்டவாளம்’ ரங்கராஜன் ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பால், திராவிட இயக்கக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டார். குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக மேற்படிப்பைத் தொடர இயலாமல், நண்பர்களின் சிபாரிசுக் கடிதம் பெற்றுக்கொண்டு, திருச்சியில் பெரியாரைச் சந்தித்து, அவர் மூலம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். புத்தகங்களைக்கூட மணியம்மை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வறுமை அவரை வாட்டியது. ஆசிரியர் பயிற்சியை முடித்ததும் குன்றக்குடி அடிகளாரின் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி, அடிகளாரின் பாராட்டைப் பெற்றார்.
  • பின்னர், தமிழ்த் தேசியக் கட்சிமீது ஈடுபாடு கொண்டு, ஈ.வெ.கி.சம்பத்தைத் தலைவராக ஏற்றுக்கொண்டார். அக்கட்சியின் அதிகாரபூர்வ ஏடான ‘தமிழ்ச் செய்தி’ வார இதழ், நாளிதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்த் தேசியக் கட்சி, காமராசரின் காங்கிரஸில் இணைந்த பின், ‘நவசக்தி’யின் தலையங்க ஆசிரியராகச் செயல்பட்டார். ‘அலை ஓசை’, ‘எதிரொலி’, ‘நாத்திகம்’, ‘முரசொலி’, ‘நக்கீரன்’, ‘ஜூனியர் விகடன்’ உள்ளிட்ட பல இதழ்களில், பல தலைப்புகளில் ஏராளமாக எழுதிக் குவித்தார்.
  • இளம் வயதிலேயே திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்றிருந்ததால் சாதி களைந்து (Decast) இறுதிவரை சாதியற்றவராகவே வாழ்ந்தவர் சின்னகுத்தூசி. பொதுவுடைமைக் கோட்பாடு, திராவிட இயக்கக் கோட்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டு, தம் வாழ்நாள் முழுவதும் மனிதநேயராகத் திகழ்ந்தார். அரசியல் கட்சிகளுக்கு எப்படிக் கொள்கைகள் முக்கியமோ அதைப் போலவே அவ்வரசியலை விமர்சனம் செய்யும் பத்திரிகையாளர்களுக்கும் சீரிய கொள்கைகள் இருக்க வேண்டும்; இல்லையெனில், அது அரசியல் விமர்சனமாக அல்லாமல், பொருளற்ற வீண் அரட்டைக் கச்சேரியாகவே இருக்கும் என்பார்.
  • திராவிட இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளரான குருசாமியின் எழுத்துகள் அரசியல் எதிரிகளுக்குக் குத்தூசி குத்துவதுபோல் அமைத்ததால் ‘குத்தூசி குருசாமி’ என அவர் அழைக்கப்பட்டார். அவரது எழுத்துகளை அடியொற்றிக் கூர்மையான அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதிய தியாகராசன் ‘சின்னகுத்தூசி’ என்ற சிறப்புப் புனைபெயரைப் பெற்றார்.
  • அவரது மறைவுக்குப் பின் ‘சின்னகுத்தூசி’ நினைவு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் அவருடைய பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் ரூ.1 லட்சம் பொற்கிழியும் வழங்கப்பட்டு வருகிறது. மூன்று கட்டுரைகளுக்குச் சிறந்த எழுத்தாளர்களுக்கான விருதுடன் ரூ.10,000 பொற்கிழியும் வழங்கப்பட்டுவருகிறது. கரோனா நெருக்கடியில் தாமதமான இத்தொடர் நிகழ்வு, தற்போது மீண்டும் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
  • ஜூன் 15: சின்னகுத்தூசியின் 90ஆவது பிறந்தநாள்

நன்றி: இந்து தமிழ் திசை (14 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories