- கரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு உலக நாடுகளின் பொருளாதாரம் மீட்சி கண்டு வருகிறது. இதையடுத்து, மின்னணு சாதனங்கள், வாகனங்களுக்கான தேவை சர்வதேச அளவில் பெருகியுள்ளது. ஆனால், செமிகண்டக்டர் எனப்படும் சிப் உற்பத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்படவில்லை.
- இதனால், மின்னணு சாதனங்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் தயாரிப்பில் சுணக்கம் நிலவி வருகிறது. குறிப்பாக, செமிகண்டக்டர் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட தொய்வுநிலை கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
- 169 தொழில்களுக்கு அடிப்படை: உலகளவில் ஏறக்குறைய 169-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு அடிப்படை ஆதாரமாக இருப்பது சிப். கார், கிராபிக்ஸ் கார்டு, வீடியோ கேம் கன்சோல், கம்ப்யூட்டர், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்ற பல தொழில்களின் தயாரிப்பு அதனையே நம்பி உள்ளது. எனவே, சிப்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது இந்த தொழில்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.
ஏன் பற்றாக்குறை?
- சீனா-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர், பாதகமான வானிலை, ரஷ்யா-உக்ரைன் போர் ஆகியவை சிப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. நிறுவனங்களின் ஒருங்கிணைந்த விநியோக நடவடிக்கைகளில் இவற்றின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
- மோட்டார் வாகனங்கள், கிரெடிட் கார்டு தயாரிப்பில் சிப் என்பது இதய பாகமாக கருதப்படுகிறது. தனிப்பட்ட தயாரிப்புகளுக்கான பிரத்யேகமான சிப் உற்பத்தியில் இன்னும் சீரற்ற நிலை காணப்படுவதாக மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
- சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு மின்சார வாகனங்களுக்கான தேவை தற்போது பெருகி வருகிறது. அதேபோன்று, ஹை எண்ட் எனப்படும் மிகவும் சொகுசான வாகனங்களுக்கான வரவேற்பும் வாடிக்கையாளரிடம் கூடியுள்ளது. இவற்றுக்கு தேவையான பிரத்யேக சிப் உற்பத்தியில்தான் தற்போது மந்த நிலை இருப்பதாக கூறப்படுகிறது.
- குறிப்பாக, ஏர்பேக் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் எலக்ட்ரானிக் சிப்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இது, வாடிக்கையாளர்கள் ஹை எண்ட் மாடல்களை பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்த நிலை நடப்பாண்டு மட்டுமின்றி 2024-லும் தொடரும் என்று மார்கன் ஸ்டான்லி ஆய்வு கணித்துள்ளது.
- கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் முதல் காலாண்டில் சிப் கிடைப்பதில் மீண்டும் நிச்சயமற்ற சூழல் உருவெடுத்துள்ளது. இதனால், மஹிந்திரா நிறுவனம் அதன் பிரபல மாடலான ஸ்கார்பியோ-என் தயாரிப்பில் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதேபோன்று, டொயோட்டா நிறுவனமும் அதன் உயர்ரக ஹைகிராஸ் எஸ்யுவி மாடலுக்கான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
புதிய வெளியீடுகள் தள்ளிவைப்பு:
- சர்வதேச அளவில் சிப்களுக்கு ஏற்பட்ட பற்றாக்குறையினை அடுத்து பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களும் தங்களது புதிய வெளியீட்டு திட்டங்களை ஒத்திவைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
1.70 லட்சம் வாகன உற்பத்தி பாதிப்பு:
- நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி தலைவர் ஆர்சி பார்கவா கூறும்போது, “ சிப் பற்றாக்குறை எதிரொலியின் பாதிப்பு நடப்பு நிதியாண்டுக்கான உற்பத்தியிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த 2022-23 நிதியாண்டின் கடைசி காலாண்டைக் காட்டிலும், நடப்பு 2023-24-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. சிப் பற்றாக்குறையால் கடந்த நிதியாண்டில் மட்டும் 1.70 லட்சம் வாகனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது" என்றார்.
- நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு தேவையான பிரத்யேகமான சிப் சந்தையில் கிடைப்பதில் இன்னும் மிகப்பெரிய அளவில் வேறுபாடு காணப்படுகிறது.
- நடப்பு நிதியாண்டில் வாகன உற்பத்தியை 6 முதல் 8 சதவீதம் வரை அதிகரிப்பதன் மூலம் 41 லட்சத்தை எட்ட நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளன. ஆனால், ஒவ்வொரு நிறுவனத்தின் வளர்ச்சியும் சிப் கிடைக்கும் தன்மை மற்றும் அவற்றை எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பொருத்தே அமையும்.
- லாபமீட்டலுக்கு நிறுவனங்கள் முக்கியத்துவம் தருவதால் அதிக விலையுடைய டாப் எண்ட்மாடல்களை தயாரிப்பதற்குதான் அவை முக்கியத்துவம் அளிக்கும். ஆனால், நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவு எளிமையாக மெய்ப்படுவதற்கு சிப் உற்பத்தி சீரடைவது முக்கியம்.
குறைந்த செலவில் சிப் உற்பத்தி
- “சிப் உற்பத்தியைப் பொருத்தவரை குறைந்த செலவில் அவற்றை தயாரிப்பதற்கு இந்தியா மிகச்சிறந்த இடமாக உள்ளது. அதற்கான திறமை உள்ள ஒரே நாடு இந்தியா. இந்த தொழிலில் களமிறங்க பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதையடுத்து செமிகண்டக்டர் வர்த்தகம் தற்போதைய 600 பில்லியன் டாலரிலிருந்து (ரூ.50 லட்சம் கோடி) இரட்டிப்பாகி 1 டிரில்லியன் டாலரைத் (ரூ.100 லட்சம் கோடி) தொடும்.
- திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, தொழில் துறை பங்கேற்பு ஆகியவற்றில் ஒத்துழைப்புக்காக இந்தியா செமிகண்டக்டர் மிஷன் (ஐஎஸ்எம்) மற்றும் அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசு கையெழுத்திட்டுள்ளது" என்று கூறி உள்ளார் மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.
முன்வரும் நிறுவனங்கள்:
- வேதாந்தா-ஃபாக்ஸ்கான் ஜேவி, ஐஜிஎஸ்எஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஐஎஸ்எம்சி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் சிப் தயாரிப்பு ஆலைகளை அமைக்க 13.6 பில்லியன் டாலர் (ரூ.1.11 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை முன்மொழிந்துள்ளன. மேலும், ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் அரசிடம் இருந்து 5.6 பில்லியன் டாலர் ஆதரவைக் கோரியுள்ளன.
சிப் வகைகள்:
- செயல்பாட்டின் அடிப்படையில் சிப் நான்கு பிரிவுகளாக உள்ளன. அவை லாஜிக் சிப், மெமரி சிப், அப்ளிகேஷன் சார்ந்த ஒருங்கிணைந்த சிப் (ஏஎஸ்ஐசி), சிஸ்டம் ஆன்-ஏ-சிப் சாதனங்கள் (எஸ்ஓசிஎஸ்) ஆகும். மொழிவுகளில், இரண்டு முன்மொழிவுகளுக்கும் அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
நன்றி: தி இந்து (15 – 05 – 2023)