TNPSC Thervupettagam

சிறப்புக் குழந்தைகளின் குரலாக...

December 3 , 2024 2 days 40 0

சிறப்புக் குழந்தைகளின் குரலாக...

  • விளிம்பு நிலைச் சமூகங்களின் உரிமைகளைப் பற்றி உரக்கக் குரல் கொடுக்க அச்சமூகத்திலிருந்து மட்டுமே போராளிகள் வர வேண்டும் என்பதல்ல. குரலற்றவர்களின் குரலாக ஒலிக்கத் தேவைப்படுவதெல்லாம் சுயநலமற்ற அன்பும், மன விரிவும்தான். வாழ்நாள் முழுவதும் தகவல் தொடர்புத் திறன் குறைவாகவோ அல்லது முழுமையாக இல்லாதவராகவோ அமைந்துவிடும் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகளின் குரலாக ஒலிக்க வேண்டிய பணி அவர்களின் அல்லது குழந்தைகளின் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்தாக வேண்டியிருக்கிறது.

சிங்​கப்பூர் எழுத்​தாளர் விழா:

  • என் மகன் கனிக்கு ஆட்டிசம் இருப்​ப​தாகக் கண்டறிந்த நாள் தொடங்கி, அவனது 10 வயது வரையிலான வாழ்க்கை வரலாற்றை ‘எழுதாப் பயணம்’ (2019) என்னும் பெயரில் நூலாக்​கினேன். அந்நூலை அச்சுக்குத் தரும் முன்பே, ஐனோசிஸ் எனும் நிறுவனத்தின் உதவியுடன், முழுமை​யாகப் பேச இயலாத குழந்தை​களுக்கு உதவும் வகையிலான ‘அரும்பு மொழி’ என்னும் செயலியையும் உருவாக்​கினோம்.
  • இரண்டுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. சிங்கப்பூர் சர்வதேச எழுத்​தாளர் விழாவில் பங்கேற்க, 2024ஆம் ஆண்டு நிகழ்வில் எனக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டிருந்தது. மூன்று கலந்துரை​யாடல்​களில் பங்குபெற்​றேன். அவற்றில் முற்றிலும் இலக்கியம் சார்ந்த கலந்துரை​யாடல்கள் உண்டு எனினும் நான் முக்கியமாக முன்வைக்க விரும்​புவது ‘நாங்கள் அக்கறை கொள்கிறோம் – பேணுபவர்​களின் கதைகள்’ (Because we care: Writing stories on care giving) என்னும் தலைப்​பிலான அமர்வினைப் பற்றித்​தான்.
  • இந்த அமர்வில் சிங்கப்​பூரைச் சேர்ந்த ஆட்டிச நிலைச் சிறுவன் ஒருவரது தாயான லிடியாவதி என்பவரும் அழைக்​கப்​பட்​டிருந்​தார். ஒரு ‘A Worthy Race’, ‘A Hope Worth Having’ ஆகிய இரண்டு நூல்களின் ஆசிரியர் இவர். சர்மின் சான் என்னும் சிங்கப்பூர் எழுத்​தாளர் புற்று​நோயால் காலமான தன் தங்கை​யுடனான பயணம் குறித்து ‘The Magic Circle’ எனும் பெயரில் நூலாக்கியிருந்​தார்.
  • நாங்கள் மூவரும் எங்களது புத்தகங்​களி​லிருந்து ஒரு சிறிய பகுதியை வாசித்தோம். இப்படியான நூல்களை எழுத என்ன காரணம் என்கிற கேள்வி எங்களிடம் முன்வைக்​கப்​பட்டது. “சிறப்புத் தேவையுள்ள குழந்தை​களின் உலகுக்குள் நுழைந்தபோது அவர்களையும் உள்ளடக்கிய ஒரு மேன்மையான சமூகத்தைக் கனவு காணத் தொடங்​கினேன். அதன் விளைவாகவே ஆட்டிசம் குறித்த விழிப்பு​ணர்​வுக்கான கட்டுரைகளை எழுத ஆரம்பித்​தேன்.
  • என் மகனுக்கு 10 வயதானபோது அது வரையில் நாங்கள் எதிர்​கொண்ட சிக்கல்கள், வலிகள், நிராகரிப்புகள், அவமானங்​களை​யும், இன்னொரு​புறம் கண்டெடுத்த நம்பிக்கைகளை, வென்றெடுத்த இதயங்களை, ஆதரவளித்த நல்லவர்​களையும் முழுமை​யாகப் பதிவுசெய்ய விரும்​பியதால் இந்தப் புத்தகத்தை எழுதினேன்” என்று பதிலளித்​தேன்.

அனைத்துச் சிறப்புக் குழந்தை​களுக்​கு​மாக...

  • “சிறப்புக் குழந்தை வளர்ப்பின் வலிகளைத் தாங்கியபடி, அன்றாட வாழ்க்கைக்கான செயல்களில் பெரும் ஆற்றலைச் செலவழித்த பின்னரும் ஏன் எழுத நினைக்​கிறீர்​கள்?” என்பது அடுத்த கேள்வி. ஓர் அன்னையாக, பேணுபவராக, பாதுகாவலராக என் குழந்தைக்கு நல்வாழ்வை உறுதி​செய்வதே என் தலையாய பணி. நல்வாழ்வை உறுதி​செய்தல் என்பது அவனது முழுத் திறனும் வெளிப்பட உதவுதல், அவனது உடல், மன நலனைப் பேணுதல், எல்லோரையும் போன்றதொரு வாழ்க்கையை மாண்புடன் அவன் வாழ வகை செய்தல் ஆகிய அனைத்துச் செயல்​களையும் உள்ளடக்​கியது.
  • இதில் எந்தவொரு குறிக்​கோளையும் என் குழந்தைக்காக மட்டும் தனிப்பட்ட முறையில் நான் அமைத்​துத்தர முடியாது. எடுத்​துக்​காட்டாக என் மகன் ஒரு வழக்கமான பள்ளி​யில், சாமானியக் குழந்தை​களுடன் (Neuro Typical Children) பயில வேண்டு​மெனில், அப்பள்ளி சிறப்புக் குழந்தை​களுக்கு அனுமதி அளிப்பதாக இருக்க வேண்டும். என் பிள்ளைக்கு மட்டுமாக அந்த அனுமதியைப் பெற இயலாது என்பதால், ஒட்டுமொத்​த​மாகச் சிறப்புக் குழந்தை​களுக்கு அப்பள்​ளியில் அனுமதி வேண்டியே நான் போராட வேண்டி​யிருக்​கும்.
  • இப்படியே ஒவ்வொரு செயலிலும் என் குழந்​தையின் நல்வாழ்வு என்பது அவனை ஒத்த அனைத்து மாற்றுத்​திறன் குழந்தை​களின் நல்வாழ்வுடனும் முன்னேற்​றத்​துடனும் ஒருங்​கிணைந்த ஒன்று​தான். எனவே, ஒரு பிள்ளையின் அன்னை என்கிற நிலையில் மட்டும் என்னை நிறுத்​திக்​கொள்​ளாமல், அனைத்துச் சிறப்புக் குழந்தை​களின் உரிமை​களுக்கான செயல்​பாட்​டாளராக நான் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். என் கைவசம் இருக்கும் ஒரே கருவி எழுத்து என்பதால், அதைப் பயன்படுத்து​வ​தாகப் பதிலளித்​தேன்.

தொடரும் கேள்விகள்:

  • ஒவ்வொரு நாளும் எங்களுக்கு நூறு நூறு கேள்வி​களோடுதான் விடிகிறது. எது எப்படி​இருந்தாலும் நம் குழந்தை என்பது நமது உயிரியல்​ரீ​தியிலான கடமை என்பதால் மன நிறைவுடனே எங்கள் பயணத்தைத் தொடர்​கிறோம். இந்தச் சிறிய உலகில் நாம் எதிர்​கொள்ளும் மனிதர்களிட​மிருந்து அன்பின் கதகதப்​பை​யும், சக மனிதர் என்பதான மாண்பையும் நாம் எதிர்​பார்ப்பதைப் போலவே எங்கள் குழந்தை​களும் எதிர்​பார்க்​கிறார்கள் என்பதைப் பொதுச் சமூகத்​துக்கு உரக்கச் சொல்ல வேண்டியதும் எங்களது பொறுப்பே என்று உணர்கிறேன்.
  • அதனால்தான் பெற்றோரும் பாதுகாவலருமான நாங்கள் குரலற்ற எங்கள் குழந்தை​களின் குரலாக ஒலிக்கத் தொடங்​கு​கிறோம் என்பதை எடுத்துச் சொன்னேன். ஆட்டிசம், புற்றுநோய் போன்ற​வற்றைப் பற்றிய விழிப்பு​ணர்வை ஏற்படுத்​துதல் ஏன் அவசியம் என்கிற கேள்வி அடுத்து முன்வைக்​கப்​பட்டது. ஐக்கிய நாடுகள் அவையின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்​கோள்கள் (Sustainable Development Goals - SDGs) 17இல் மூன்று குறிக்​கோள்கள் சிறப்புத் தேவையுள்ளோரின் உரிமை​களோடு தொடர்​புடையவை.
  • அனைவருக்​குமான நல்வாழ்​வை​யும், சமத்து​வத்​தையும் வலியுறுத்தும் 3ஆவது, 10ஆவது குறிக்​கோள்கள் சிறப்புத் தேவையுள்​ளோருக்கும் பொருந்​து​வனவே. குறிப்பாக, 16ஆவது வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்​கோளான அமைதி - நீதி என்பது தெளிவாக அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் (Inclusive Society) தேவையை வலியுறுத்து​கிறது.
  • நிலையான, வளங்குன்றாத வளர்ச்​சிக்காக அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) சமூகங்களை உருவாக்​குதல், அனைவருக்கும் நீதி கிடைக்கச் செய்தல், எல்லா நிலைகளிலும் சிறப்பான, பொறுப்பான - உள்ளடக்கிய சூழல்களை உருவாக்​குதல். செயல்​திறமிக்க, பதிலளிக்கும் பொறுப்புடைய, யாவரையும் உள்ளடக்கிய நிறுவனங்களை எல்லா மட்டங்​களிலும் ஏற்படுத்​துதல் - இந்தக் குறிக்​கோள்கள் அனைத்தும் ஒட்டுமொத்த மானுடச் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்​சிக்காக உருவாக்​கப்​பட்டவை.
  • எனவே, அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்கிற கனவு சிறப்புத் தேவையுள்​ளோரின் தேவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மானுட குலத்தின் உயர்வுக்குமே அடிப்படை என்கிற கருத்தினை முன்வைத்​தேன். சிறப்புத் தேவையுள்​ளோரைப் பேணுபவரின் குரல்கள் வலுவாக உலக அரங்கில் முன்வைக்​கப்​பட்டு​வருவது மிகுந்த நிறைவைத் தருகிறது. தங்களின் தேவைகளைத் தாங்களே முன்வைக்கத் தெரிந்த சக விளிம்​புநிலைச் சமூகத்​தினர் மத்தியில், தங்கள் தேவை என்னவென்றே சரியாகப் புரிந்​து​கொள்ளவோ தெரிவிக்கவோ இயலாத சிறப்புக் குழந்தை​களின் குரல்​களும் அந்தப் பேணுபவர்​களின் இதயத்​திலிருந்து உதடுகளின் வழி அரங்கத்தில் ஒலிக்க வேண்டும்.
  • எப்படி செவித்​திறன் குறைபாடு உடையோ​ருக்கான சைகை மொழிபெயர்ப்​பாளர் செவித்​திறன் உடைய​வராக இருப்​ப​து தவிர்க்க இய​லாததோ, அதே​போலவே ​மாற்றுத்​திறன் ​கொண்ட சிறப்​புக் குழந்தை​களின் குரலாக அவர்​தம் பெற்​றோரின், பேணுபவரின் குரல் எழு​வதும் அவசிய​மானது என இந்த ​மாற்றுத்​திற​னாளி​கள் ​நாளில் ​நாம் உறு​தி​யேற்​போம்!
  • டிசம்​பர் 3: உலக ​மாற்​றுத்​திற​னாளிகள்​ ​நாள்.​

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories