- நடந்து முடிந்த மதுரைப் புத்தகக்காட்சியில் சிறுதெய்வ வழிபாட்டுப் பாடலுக்குப் பள்ளிச் சிறார் சிலர் ஆடியதைச் சாமி ஆடியதாக விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், நம்மில் எத்தனை பேர் அரங்குகளில் இருந்த புத்தகங்களை, அவற்றின் தரத்தை விமர்சனம் செய்தோம்?
- அரசே நடத்தும் புத்தகத் திருவிழாவில், சில அரங்குகளில் அரசுப் பள்ளிச் சிறாரை அனுமதிப்பது இல்லை என்பதை ஒவ்வோர் ஆண்டும் நேரில் பார்க்கிறேன். ஏன் சிறாரை உள்ளே அனுமதிக்கவில்லை என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டில் பெரும்பாலான அரங்குகளில் பள்ளிச் சிறாரை அரங்குகளுக்கு உள்ளே அழைத்தார்கள். புத்தகங்களை எப்படி எடுத்துப்பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனாலும் வழக்கம்போலச் சில அரங்குகளில் பள்ளிச் சிறாரை அனுமதிக்கவில்லை.
- அரசே புத்தகக்காட்சிகளை நடத்துகிறது என்றால், அது முழுவதும் வியாபார நோக்கத்தில் அல்ல என்பது தெளிவு. இச்சமூகத்தில் வாசிப்பு ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்பதே அதன் அடிப்படை நோக்கம். அதற்காகத்தான் அரசால் பெருமளவு நிதி செலவழிக்கப்படுகிறது.
- எனவே, புத்தகக்காட்சிகளின் நோக்கத்தைப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். பெரியவர்களை வாசிக்க வைப்பதைவிடப் பள்ளிச் சிறாரை வாசிக்கப் பழக்குவது எளிது. எனவே, பள்ளிச் சிறாரை அனுமதிக்காத அரங்குகளை உடனே கண்காட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
- மாவட்டங்களில் புத்தகக்காட்சிகளை நடத்துவதற்கு மாநில அளவிலான வழிகாட்டும் நெறிமுறைகள் அரசால் வெளியிடப்பட வேண்டும். மாவட்டங்களில் அரசு அலுவலர்கள், தன்னார்வ நிறுவனங்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவின் மூலமே புத்தகக்காட்சி நிகழ்வுகளைத் திட்டமிட வேண்டும்.
- அந்தந்த மாவட்டத்தில் உள்ள பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களை மட்டுமே மாலை நேர நிகழ்வுகளுக்கு அழைக்க வேண்டும். கலைத் திருவிழா போட்டிகளில் பங்குபெற்ற சிறப்பான கலைநிகழ்வுகளை அங்கே நிகழ்த்த வைக்கலாம்.
- பள்ளிச் சிறார் வந்ததும் அவர்களை அமர வைக்கத் தனியான அரங்கு இருக்க வேண்டும். தினமும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கவிஞர்கள், எழுத்தாளர்கள், வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களை அந்த அரங்கிற்கு அழைக்கலாம். அவர்கள் வாசிப்பு, எழுதுதல் பற்றிய அனுபவங்களைச் சிறாரிடம் சிறிது நேரம் பகிரலாம். புத்தகங்களை எவ்வாறு கையாள வேண்டும் என்று எடுத்துச்சொல்ல வேண்டும். அவர்களே சிறுசிறு குழுவாகச் சிறாரை அரங்குகளுக்கு அழைத்துச்சென்று புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். வாசித்தல், எழுதுதல், கலைகள் எனப் பல்வேறு அறிமுகப் பயிற்சிகளையும் சிறாருக்கு வழங்கலாம்.
- சிறார் புத்தகங்களுக்காக மட்டுமே தனியான அரங்குகளை ஒரு பகுதியில் ஒதுக்கலாம். பல்வேறு அரங்குகளில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களை விற்பனை செய்வதுபோலச் சிறாரின் வயதுக்கேற்ற அரங்குகளை அமைக்கலாம். மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலம் அந்த அரங்குகளை நிர்வகிக்கலாம். சிறாருக்கு ஏற்றபடி அந்த அரங்குகளை வடிவமைக்கவும் வேண்டும்.
- புத்தகக்காட்சிகள், புத்தகத் திருவிழாக்களாக மாற வேண்டும். வாசிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று புலம்புவதை விடுத்து, வருங்காலத் தலைமுறையை வாசிப்பவர்களாக மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பதே இன்றைய தேவை.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2024)