சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் நமக்குச் செய்தது என்ன?
- சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொருளாதாரத்தின் அங்கமாக விளங்கும் துறைமுகங்கள் மேம்பாடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கின்றன. இந்தியத் தொழில் துறையில் 45% உற்பத்தி, 40% ஏற்றுமதியில் பங்கு வகிக்கும் இந்நிறுவனங்கள் 11 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்குகின்றன.
கிராமப்புறங்களில்...
- இந்தியாவின் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் துறையானது குடிசை, சிறிய, நடுத்தரத் தொழில்கள் என மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு-நடுத்தர அளவிலான தொழில்கள் அமைச்சகத்தின் (Ministry of Micro, Small & Medium Enterprises) 2023ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, இந்தியாவில் சுமார் 6.3 கோடி குறு, சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (சிறிய தொழிற்கூடங்கள் 96%), இவற்றில் 3.5 லட்சம் சிறிய தொழில்கள், 60,000 நடுத்தரத் தொழில்கள் உள்ளன.
- தேசிய மாதிரி ஆய்வின்படி (73ஆவது சுற்று), சிறிய, நடுத்தர அளவிலான தொழில்களில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் உள்ளன. குறிப்பாக, விவசாயம் தொடர்பான நடைமுறைகள், கைவினைப் பொருள்கள், சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்கள் உள்ளன.
- நகர்ப்புறங்களில் சேவைகள், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத் துறைகளில் ஈடுபட்டுள்ள குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்களும் இதில் அடங்கும். குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்கள் அமைச்சகத்தின் 2021ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவின் 51% குறு, சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் கிராமப்புறங்களில் உள்ளன.
- இதில், 3.23 கோடி நிறுவனங்கள் விவசாயம் தொடர்பான தொழில்களில் - கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் உற்பத்தி, கைப்பைகள், சிறிய அளவிலான உற்பத்தித் தொழில்களில் ஈடுபட்டுள்ளன. மற்ற 49% நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் உள்ளன. இதில் தகவல் தொழில்நுட்பச் சேவைகள், உற்பத்தி, துணி, பொறியியல் தொழில்கள் முதன்மையாக உள்ளன.
சமூக மாற்றத்துக்குப் பங்களிப்பு:
- பாலினச் சமத்துவத்தை ஊக்குவிப்பதில் குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்கள் துறையின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாகத் துணி உற்பத்தி, கைவினைப் பொருள்கள், உணவுப் பொருள் தயாரிப்பு, அழகு சாதனப் பொருள் உற்பத்தி, சேவைத் துறை போன்ற துறைகளில் பெண்களுக்கு வேலை வழங்கிவரும் துறை இது. இத்துறையில் பெண்கள் பங்கேற்பு 20-30% என்பது கவனிக்கத்தக்கது. மேலும், பல்வேறு தொழில்களில் பரந்த பரிமாணங்களையும் இத்துறை கொண்டிருக்கிறது. இது உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
- ஆடை தயாரிப்பு, பட்டு நெசவு, கருவி தயாரிப்பு, ஒப்பனைப் பொருள் உற்பத்தி போன்றவை இதில் முக்கியமானவை.
- இந்தியாவில் தயாராகும் கைவினைப் பொருள்கள் உலக அளவில் புகழ்பெற்றவை. மரக்கூடைகள், மணிக் கண்ணாடிகள், நகைகள், உலோகக் கலைப்பொருள்கள், ஓவியப் பொருள்கள் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு முக்கியப் பங்காற்றி வருகின்றன.
- உணவு பதப்படுத்துதல் தொழிலில், ஏற்றுமதிக்கும் உள்ளூர் சந்தைக்கும் ஏற்ற உணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. கடலை உருண்டைகள், பழரசம், மிளகு, மசாலா வகைகள் போன்ற பண்டங்கள் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. பொறியியல் கருவிகள், உலோகக் கருவிகள், ஆட்டோ உதிரி பாகங்கள், மின்னணுப் பொருள்கள், ரசாயனப் பொருள்கள், மருந்துகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டின் நிலவரம்:
- இந்திய அளவில் தொழில்நுட்பத்தில் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்கிறது. சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள், மாநிலத்தின் தொழில் துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவற்றோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் மையமாக உள்ளது. 15 லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர அளவிலான தொழில்களைத் தமிழ்நாடு கொண்டுள்ளது.
- 2021-2022இல் இத்தொழில்கள் மாநிலத்தின் தொழில் உற்பத்தியில் 40% பங்கு வகித்தன. கார் உற்பத்தி, அதன் உதிரி பாகங்கள் தயாரிப்பு, துணி, தோல் பொருள்கள், உணவுப் பொருள் பதப்படுத்துதல் போன்ற பல்வேறு துறைகளில் இத்துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
- தமிழ்நாட்டின் ஏற்றுமதி ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் குறிப்பாக ஆடை, தோல், பொறியியல் சாதனங்கள், உணவுப் பொருள்கள் ஆகிய துறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதேவேளையில், முதலீடுகளின் பற்றாக்குறை, தொழில்நுட்பம், ஒழுங்குமுறை, அடித்தளப் பிரச்சினைகள், மனிதவளச் சவால்கள் என இந்தத் தொழில் துறைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றன. இந்தச் சூழலில், இந்நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (06 – 12 – 2024)