TNPSC Thervupettagam

சிறுநீரக நோய்கள்: ஆரோக்கியமான வாழ்க்கை முறையே நம்மைக் காக்கும்

July 22 , 2023 411 days 305 0
  • சிறுநீரக நோயே உலக அளவில் மிகப்பெரும் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. 2015இல் ‘குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ்’ மேற்கொண்ட ஆய்வின்படி, உலக அளவில் இறப்புக்கான 12ஆவது காரணமாகச் சிறுநீரக நோய் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், சிறுநீரக நோயின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் 32 சதவீதம் அதிகரித்துள்ளன.
  • இதே காலகட்டத்தில் இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் பத்து சதவீதம் குறைந்துள்ளன; நுரையீரல் நோயினால் ஏற்படும் உயிரிழப்புகள் மூன்று சதவீதம் குறைந்துள்ளன. சிறுநீரக நோயின் ஆபத்தை உணர்த்தும் தரவுகள் இவை.
  • சிறுநீரக நோயின் மட்டற்ற வளர்ச்சிக்கு இன்றைய நவீன வாழ்க்கைமுறை முக்கியக் காரணமாக உள்ளது. இன்றைய நவீன வாழ்க்கை முறையில், ஒரு பக்கம் ஊட்டச்சத்து மிகுந்த உணவு அதிக அளவில் கிடைக்கிறது; மறுபக்கம் உடல் உழைப்பு குறைவாக உள்ளது. இவற்றுக்கு இடையிலான ஏற்றத் தாழ்வே, நமது உடல் எடையை அதிகரித்து, சிறுநீரக நோய்க்குப் பாதையமைத்துத் தருகிறது.

சிறுநீரக நோய் என்றால் என்ன?

  • ஆரோக்கியமான உடலுக்குச் சிறுநீரகங்கள் மிகவும் அவசியம். சிறுநீரகங்கள் விலா எலும்புக்கூட்டின் அடிப்பகுதியில் அமைந்துள்ள அவரை விதை வடிவிலான உறுப்புகள். முதுகுத் தண்டின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு சிறுநீரகம் உள்ளது. ஒவ்வொரு சிறுநீரகத்துக்குள்ளும் பத்து லட்சம் நெப்ரான்கள் உள்ளன.
  • ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருள்கள், அதிகப்படியான நீர், பிற அசுத்தங்களையும் வடிகட்டுவது சிறுநீரகங்களின் முக்கியமான பணி. சிறுநீரகத்துக்குள் உள்ள நெப்ரான்கள் ரத்தத்திலிருந்து இத்தகைய கழிவுகளைப் பிரித்தெடுத்து சிறுநீர் மூலம் வெளி யேற்றுகின்றன.
  • சிறுநீரகங்கள் உடலில் உள்ள pH, உப்பு, பொட்டாசியம் ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்துகின்றன. ரத்த அழுத்தத்தையும் ரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தி யையும் கட்டுப்படுத்தும் ஹார் மோன்களைச் சிறுநீரகங்களே உற்பத்தி செய்கின்றன; நமது உடல் கால்சியத்தை உறிஞ்சுவதற்கும் சிறுநீரகங்கள் உதவுகின்றன. சிறுநீரகத்தில் கால்சியம் அதிகம் தேங்கினால், சிறுநீரகக் கற்கள் ஏற்படும்.
  • சிறுநீரகங்கள் சேதமடைந்து, ரத்தத்தை வடிகட்டும் செயல்திறனை இழக்கும் நிலை ஏற்பட்டால், அதுவே சிறுநீரக நோய். நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறுநீரக நோய் ஏற்படும் ஆபத்து அதிகம். சிறுநீரக நோய் எலும்பு பலவீனம், நரம்புச் சேதம், ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
  • சிறுநீரக நோய், காலப்போக்கில் மோசமாகி விட்டால், பாதிக்கப்பட்டவரின் சிறுநீரகங்கள் வேலை செய்வதை முழுமையாக நிறுத்திவிடும். அப்போது ரத்தத்திலிருந்து கழிவைப் பிரித் தெடுக்க டயாலிசிஸ் தேவைப்படும். டயாலிசிஸ் என்பது ஓர் இயந்திரத்தைப் பயன்படுத்தி ரத்தத்தை வடிகட்டிச் சுத்திகரிக்கும் ஒரு சிகிச்சை முறை. இதன் மூலம் சிறுநீரக நோயைக் குணப்படுத்த முடியாது; ஆனால், அது உங்கள் ஆயுளை நீட்டிக்கும். பாதிப்பு மிகவும் முற்றிய நிலையில், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே நோயாளியின் உயிரைக் காக்க உதவும்.

ஆபத்து காரணிகள்:

  • நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் உண்டு. ஆம், நீரிழிவு நோயே சிறுநீரக நோய்க்கான முதன்மை காரணி. சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட வர்களில் 44 சதவீதத்தினர் நீரிழிவு நோயாளிகள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், ஆசியர்கள், அமெரிக்க இந்திய வம்சாவளியினருக்குச் சிறுநீரக நோய் அதிகம் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவை தவிர்த்துச் சிறுநீரக நோய் வருவதற்கான சாத்தியங்களை அதிகரிக்கும் காரணிகள்:
  • உயர் ரத்த அழுத்தம்.
  • குடும்பத்தில் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பது.
  • வயதானவர்கள்.

சிகிச்சை:

  • சிறுநீரக நோய்க்கான அடிப்படைக் காரணங்களைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவதே சிறுநீரக நோய்க்கான சிகிச்சையின் முக்கிய நோக்கம். அதாவது, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவருவதில் மருத்துவர் கூடுதல் கவனம் செலுத்துவார். உணவுப் பழக்கத்தை மாற்றியமைப்பது, மருந்து மாத்திரைகளைச் சாப்பிடும் அளவுக்கு முக்கியம்.

என்ன செய்ய வேண்டும்?

  • சிறுநீரக நோயானது கண்டறியப் பட்டவுடன் மறைந்துவிடாது. ஆரோக்கி யத்தை மேம்படுத்தும் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதும், உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவதுமே சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான சிறந்த வழி. குழந்தைகளுக்கு கிரியாட்டினின் அளவு 2.0 மில்லி கிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் இருக்கக் கூடாது.
  • சிலருக்கு, சிறுநீரக நோய் காலப்போக்கில் மோசமடையலாம்; அது சிறுநீரகச் செயலிழப்புக்குக்கூட வழிவகுக்கலாம். சிறுநீரகச் செயலிழப்புக்கு டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். டயாலிசிஸ் என்பது சிறுநீரகத்தின் செயல்பாட்டை வெளியிலிருந்து நிர்வகிக்கும் ஒரு செயல்முறையாகும். இந்தச் செயல்முறையில், ரத்தத்திலிருந்து கழிவுகளை வடிகட்ட ஓர் இயந்திரம் பயன்படுத்தப்படும். சில சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவருக்குச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
  • தினமும் நிறைய தண்ணீர் (2 முதல் 3 லிட்டர்) குடிப்பது நல்லது. நீரிழிவு நோய் இருந்தால், தகுந்த சிகிச்சையின் மூலம் ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்த வேண்டும். ரத்த அழுத்தத்தை முறையாக நிர்வகிப்பது அவசியம். உணவுக் கட்டுப்பாடு மிகவும் முக்கியம். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஊறுகாய், கருவாடு, அப்பளம் போன்ற உப்பு மிகுந்த உணவுப் பொருள்களைத் தவிர்ப்பது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்வது ஒட்டுமொத்த உடல்நலத்தையும் காக்க உதவும். கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. சக்கை உணவு வகைகளை (Junk Foods) தவிர்ப்பது சிறுநீரக நோயின் ஆபத்தைக் குறைக்க உதவும்.
  • பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருள்கள் அடங்கிய இதயத்துக்கு ஆரோக்கியமான உணவைச் சாப்பிடலாம். மது அருந்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். புகைப்பவராக இருந்தால், அதை உடனே நிறுத்த வேண்டும். தகுந்த உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். மருத்துவரின் பரிந்துரையின்றி வலி நிவாரணிகளைச் சாப்பிடக் கூடாது. முக்கியமாக, இரவில் போதுமான அளவு நன்கு தூங்குவது, சிறுநீரக ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (22  – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories