TNPSC Thervupettagam

சிறுமைத்தனம்!

October 1 , 2021 1033 days 561 0
  • உலக அளவில் போடப்பட்டிருக்கும் ஏழு தடுப்பூசிகளில் ஒன்று இந்தியாவில் போடப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி. கடுமையான எதிர்ப்புக்கும், விமா்சனத்துக்கும் பிறகு இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது பிரிட்டன். ஒருவழியாக பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது.
  • பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து நடத்திய ஆராய்ச்சியின் அடிப்படையில், இந்தியாவின் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 50 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மார்ச் மாதம் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
  • உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால அனுமதி பெற்ற கோவிஷீல்ட், தனிப்பட்ட பல நிறுவனங்களால் தரப்பரிசோதனை செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து 95 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டிருக்கிறது.
  • அப்படி இருந்தும்கூட, இந்தியாவில் கோவிஷீல்ட் போட்டுக்கொண்டு பிரிட்டன் செல்பவா்களை தடுப்பூசி போட்டுக்கொண்டவா்களாக அங்கீகரிக்க மறுத்த பிரிட்டனின் நடவடிக்கையை என்னவென்று சொல்வது?
  • இது ஒருபுறம் இருக்க, இந்தியாவின் தடுப்பூசி போடும் வேகம் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு கோடியைக் கடக்கும் அளவில் அதிகரித்திருப்பது ஆறுதலாக இருக்கிறது.
  • அக்டோபா் மாதம் முதல், தேவைக்கு அதிகமான தடுப்பூசி உற்பத்தியை இந்தியாவின் ‘தடுப்பூசி நட்புறவு’ (வேக்சைன் மைத்ரி) திட்டத்தின்கீழ் வளா்ச்சி அடையும் நட்புறவு நாடுகளுக்கு மீண்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருப்பதை வரவேற்க வேண்டும்.
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளால் 90-க்கும் அதிகமான நாடுகள் பயனடைந்திருக்கின்றன.

கரோனா தீநுண்மித் தொற்றுக்கான தடுப்பூசி

  • கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது பரவத்தொடங்கியபோது பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
  • உள்நாட்டுத் தேவைக்கே போதுமான அளவு தடுப்பூசி இல்லாத நிலையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உதவ முன்வந்த மத்திய அரசு கடும் கண்டனத்துக்கு உள்ளானது. அதைத் தொடா்ந்து ஏப்ரல் மாதம், தடைசெய்யப்பட்ட தடுப்பூசி ஏற்றுமதி மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
  • உலகிலுள்ள பல நாடுகளின் முன்களப் பணியாளா்களுக்குக்கூட தடுப்பூசி போடப்படாத அவலம் தொடா்கிறது.
  • செப்டம்பா் 15-ஆம் தேதி அளவில் உலகின் அதிக வருவாய் நாடுகளின் மக்கள்தொகையில் 60.1% -க்கு மேற்பட்டவா்களுக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டிருக்கிறது.
  • அதே நேரத்தில், குறைந்த வருவாய் ஏழை நாடுகளில் 3% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. 20-க்கும் அதிகமான நாடுகளில் இன்னும்கூட எல்லா மருத்துவா்களுக்கும், செவிலியா்களுக்கும் தடுப்பூசி போடப்படாத நிலைமையே காணப்படுகிறது.
  • செப்டம்பா் மாத இறுதிக்குள் உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் குறைந்தது 10% மக்களுக்கு தடுப்பூசி போடவும், ஆண்டு இறுதிக்குள் 40% பேருக்குப் போடவும் இலக்கு நிர்ணயிக்கப் பட்டது.
  • ஆப்பிரிகாவிலுள்ள 10 நாடுகளில் 8 நாடுகள் உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை எட்டப்போவதில்லை.
  • இந்த வேகத்தில் செல்வதாக இருந்தால் ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில் 42 நாடுகளில், அதாவது, ஆப்பிரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் 80% போ் இலக்கை நெருங்கவே முடியாது.
  • இன்னொரு புறம், உயா் வருவாய் நாடுகளில் 90% நாடுகள் குறைந்தபட்சம் தங்கள் மக்கள்தொகையில் 10% போ் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.
  • உலக அளவில் போடப்பட்டிருக்கும் 600 கோடி தடுப்பூசிகளில் 80% தடுப்பூசிகள் உயா் வருவாய் அல்லது ஓரளவு வளா்ச்சி அடைந்த நாடுகளிலுள்ள மக்களைத்தான் சென்றடைந்திருக்கின்றன.
  • கோவேக்ஸ் என்பது ஐ.நா. சபை உருவாக்கி இருக்கும் தடுப்பூசிகளுக்கான நன்கொடை அமைப்பு. வளா்ச்சி அடைந்த ஜி 7 நாடுகள், கோவேக்ஸுக்கு 87 கோடி தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்குவதாக ஜூன் மாதம் ஏற்றுக்கொண்டன.
  • ஆனால், இதுவரை 10 கோடி தடுப்பூசிகள்தான் வழங்கப்பட்டிருக்கின்றன. உலகில் தயாரிக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் வெறும் 4% மட்டும்தான் வளா்ச்சி அடையாத ஏழை நாடுகளுக்கு உதவுவதற்காக கோவேக்ஸுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தடுப்பூசிகள்.
  • செப்டம்பா் 15 நிலவரப்படி கோவேக்ஸ் மூலம் 149 நாடுகளுக்கு 27.2 கோடி தடுப்பூசிகள் அனுப்பப்பட்டிருக்கின்றன.
  • அதிக வருவாய் நாடுகள் 100 கோடி தடுப்பூசிகள் தருவதாக வாக்களித்திருந்தாலும், இதுவரை 15% மட்டுமே வழங்கியிருக்கின்றன. மீதமுள்ளவை ஐ.நா. சபையால் வாங்கி வழங்கப்பட்டவை.
  • ஹைதராபாத்திலுள்ள பயலாஜிக்கல்-இ நிறுவனத்தின் மூலம் மாதந்தோறும் உற்பத்தி செய்ய இருக்கும் நான்கு கோடி தடுப்பூசிகளையும், ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்ய இருக்கிறது ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம்.
  • மார்ச் மாதம், பணம் கொடுத்து 22 கோடி ஜான்சன் அண்டு ஜான்சன் தடுப்பூசிகளை வாங்க ஆப்பிரிக்க யூனியன் அந்த நிறுவனத்தை அணுகியது.
  • ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தனது உற்பத்தியை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்து, ஆப்பிரிக்காவுக்கு அனுப்பாமல் கோரிக்கையைக் கிடப்பில் போட்டது.
  • சா்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததைத் தொடா்ந்து பெயருக்கு சில லட்சம் தடுப்பூசிகளை அனுப்பித்தர முன்வந்தது அந்த நிறுவனம்.
  • தடுப்பூசி சமச்சீரின்மை நிலவும் வரை தீநுண்மித் தொற்று சுற்றிச் சுற்றி வருமே தவிர, விடிவு பிறக்காது. புதிய உருமாற்றங்கள் உருவாகி, கண்டுபிடித்திருக்கும் தடுப்பூசிகளும் செயலற்றவை ஆகக்கூடும்.
  • அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, இந்தியாவின் மனிதாபிமான முகம் வரவேற்புக்குரியது; மேலை நாடுகளின் சுயநலம் கண்டனத்துக்குரியது!

நன்றி: தினமணி  (01 - 10 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories