TNPSC Thervupettagam

சிறை இடநெருக்கடியைக் குறைக்க ஆக்கபூர்வமான ஆலோசனை

November 27 , 2024 8 days 31 0
  • மின்னணுக் கருவிகளின் மூலம் கண்காணிப்பதற்கான வழிமுறைகளுடன் விசாரணைக் கைதிகளைப் பிணையில் விடுவிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஆய்வு - திட்டமிடல் மையம் பரிந்துரைத்துள்ளது. ‘இந்தியச் சிறைகள் - சீர்திருத்தம் - நெரிசல் குறைப்புக்கான நடவடிக்கைகளைச் சிறைக் கையேடுகளோடு இணைத்தல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள அறிக்கையைக் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நவம்பர் 5, 2024 அன்று வெளியிட்டிருக்கிறார்.
  • இதில் குறைவான ஆபத்துக்குரிய கைதிகளைப் பிணையில் விடுவித்து, அவர்களின் நகர்வுகளை மின்னணுக் கண்காணிப்புக் கருவிகளின் மூலம் கண்காணிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை வரவேற்கத்தக்கது.
  • 2022 டிசம்பர் 31 அன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வப் புள்ளிவிவரத்தின்படி இந்தியச் சிறைகளில் 5.73 லட்சம் கைதிகள் உள்ளனர். ஆனால், சிறைகளில் சுமார் 4.25 லட்சம் கைதிகளுக்கு மட்டுமே இடம் உள்ளது. அதிகபட்சக் கொள்ளளவைவிட 30% அதிக எண்ணிக்கையில் சிறைவாசிகள் இருப்பது சிறைகளைப் பராமரிப்பதில் மிகப் பெரிய பிரச்சினையாக நீடித்துவருகிறது. குறிப்பாக, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களிலும் மத்திய ஆட்சிப் பகுதியான டெல்லியிலும் கொள்ளளவைவிட 80% அதிகச் சிறைவாசிகள் உள்ளனர்.
  • சிறைகள் - சீர்திருத்தப் பணிகளுக்கான மாதிரிச் சட்டம் 2023இல் மின்னணுக் கண்காணிப்புக் கருவிகளை அணிந்துகொள்ளச் சம்மதிக்கும் கைதிகளைப் பிணையில் விடுவிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இத்தகைய கண்காணிப்பின் மூலம் பிணை விதிகளை மீறும் கைதிகளின் பிணையை ரத்து செய்து, அவர்களை மீண்டும் கைது செய்வது குறித்து, இந்த மாதிரிச் சட்டத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் முதல் முறையாக ஒடிஷா மாநில அரசு சிறிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருப்பவர்களைக் கண்காணிப்புக் கருவியுடன் பிணையில் விடுவிப்பதற்கான திட்டத்தை முன்வைத்தது என்பதை உச்ச நீதிமன்ற மையத்தின் அறிக்கை நினைவுகூர்ந்திருக்கிறது. ஆனால், இத்தகைய கண்காணிப்புப் பிணையில் வெளியேறிய கைதியின் தனிநபர் உரிமைகளை மீறாமல் தடுப்பதற்கான விதிமுறைகளோ வழிகாட்டுதல்களோ இல்லாத நிலையையும் உச்ச நீதிமன்ற மையத்தின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இது மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டிய விஷயம்.
  • கடந்த சில ஆண்டுகளில் கைதிகள் தமது இருப்பிடத்தை ‘கூகுள் மேப்’ மூலம் விசாரணை அதிகாரியிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்னும் நிபந்தனையுடன் சில உயர் நீதிமன்றங்கள் கைதிகளுக்குப் பிணை வழங்கியுள்ளன. ஆனால், பிணைக் கைதிகளை எல்லா நேரமும் கண்காணிக்கும் வகையிலான இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று கடந்த ஜூலையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது நினைவுகூரத்தக்கது.
  • புகார் அளித்தவர்களைச் சந்தித்துச் சிறைக் கைதிகள் அச்சுறுத்துவது அல்லது சாட்சியங்களைக் கலைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்கு அவர்களின் நகர்வுகளைக் கண்காணிப்பது அவசியம்தான். அதற்குத் தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்துவதிலும் தவறில்லை. அதேநேரம், கைதிகளின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் ஊடுருவுவதும் இத்தகைய கண்காணிப்பு தனிநபர் உரிமைகளை மறுப்பதாக அமைவதும் தடுக்கப்பட வேண்டும்.
  • இதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றமோ அரசுகளோ வகுக்க வேண்டும். பிணையில் வெளியேறியுள்ள கைதிகளை மின்னணுக் கருவிகளின் மூலம் கண்காணிப்பது உலகில் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கும் திட்டம்தான். தனிநபர் உரிமைகளை மீறாத வகையில் இந்தியாவிலும் இதை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories