- கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து கோயில் நகரமாக மதுரை மாநகரம் உருவான கதை நமக்குத் தெரியும். கடம்ப மரங்கள் அடர்ந்த கோயில்காடு ஒன்று மதுரை மாவட்டத்தில் இன்றைக்கும் உள்ளது என்பதை அறிவோமா?
- மதுரை மாவட்டம் இடையப்பட்டி - தெற்காமூர் ஊர்களின் மத்தியில் அமைந்துள்ளது வெள்ளிமலை கோயில்காடு.
கோயில்காடு:
- கோயில்காடுகள் என்பவை நாட்டார் இறைவழிபாட்டோடு தொடர்புடைய கிராமப்புற அமைப்பு. தமிழக, கர்நாடக, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் இயற்கையான காடுகளுக்கு நடுவில் நாட்டுப்புறக் கோயில்கள் இன்றைக்கும் பெருமளவில் காணப்படுகின்றன.
- இவை பன்னெடுங்காலமாக இருந்து வருபவை. ‘இந்தியாவில் கோயில்காடுகள் பற்றிய கருத்துரு வேளாண் காலத்திற்கு முன்பே, மனிதன் அலைந்து திரிந்த நாள்களிலேயே தோன்றி விட்டது’ என்கிறார் வரலாற்று அறிஞர் டி.டி.கோசாம்பி (1962). மக்களின் தெய்வம் உறைகின்ற இயற்கையான காடு கோயில்காடு என்று அழைக்கப்படுகிறது.
- அக்காட்டில் இயல்தாவரங்களே (Native Species) பெருமளவில் காணப்படும். தமிழர் இறைவழிபாட்டிலும் நாட்டார் வழக்காற்றியியலிலும் கோயில்காடுகள் மிகப் பழமையான அமைப்பாகும்.
வெள்ளிமலை கோயில்காடு:
- சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது வெள்ளிமலை கோயில் காடு. இடையப்பட்டி, தெற்காமூர், சொருகுளிப்பட்டி, முக்கம்பட்டி, ஆமூர், திருக்காணை, வெள்ளக்குப்பான், கருப்புக்கால், தச்சனேந்தல், இசலாணி, வெள்ளிமலைப்பட்டி, செவல்பட்டி, நெடுங்குளம், கா.புதூர், மீனாட்சிபுரம். வெள்ளாங்குளம் உள்ளிட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரமாக இன்று விளங்குகிறது இந்தக் கோயில்காடு.
- இக்காட்டின் நடுவில் உள்ள சிறுகுன்றின் மீது வெள்ளிமலை முருகன் ஆண்டி கோலத்தில் வீற்றிருக்கிறார். காட்டைச் சுற்றியுள்ள 15 கிராம மக்களும் ஒன்றுசேர்ந்து ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்தில் வெள்ளிமலையாண்டிக்குத் திருவிழா எடுத்து வழிபட்டு வருகின்றனர்.
- இப்பகுதியில் உள்ள அனைத்துக் கிராமங்களின் முதன்மைத் தொழில் கால்நடை வளர்ப்பு. அவர்களின் கால்நடை மேய்ச்சல் நிலமாகவும் வாழ்வாதாரமாகவும் வெள்ளிமலை கோயில்காடு விளங்குகிறது.
- தங்கள் தெய்வம் உறையும் காடு என்பதால் வெள்ளிமலை காட்டுக்குள் ஊர்க்காரர்கள் செருப்பணிந்து செல்வதில்லை, மரங்களை வெட்டுவதில்லை, காட்டில் உள்ள உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதும் இல்லை. மீறினால் தெய்வம் தண்டிக்கும் என்கிற நம்பிக்கை மூதாதையர் காலம் தொட்டுத் தொடர்ந்துவருகிறது.
- உதாரணமாக, வெள்ளிமலை காட்டில் உள்ள தேவாங்கு மீது கல்லெறிவது, தொந்தரவு செய்வது தவறு என்கிற நம்பிக்கையின் காரணமாக, தேவாங்குகளை வேட்டையாடும் நிகழ்வுகள் இத்தனை ஆண்டு காலம் தடுக்கப்பட்டிருக்கிறது.
- எனினும் வெளிநபர்களால் காட்டுக்குச் சேதம் ஏற்படலாம் என்பதால், இந்தக் கோயில்காட்டைப் பாதுகாக்க, 15 கிராம மக்களும் சேர்ந்து காவலர்களை நியமித்து, வீடுதோறும் வரி வசூலித்து ஊதியம் வழங்கியிருக்கிறார்கள். மேலும், வேளாண் அறுவடையில் ஒரு மரக்கால் நெல்லை காவலர்களுக்கு சன்மானமாக வழங்கி ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.
- அழிக்கப்படும் காடு:
- வெள்ளிமலை கோயில்காடு அமைந்துள்ள பகுதி அரசு ஆவணத்தில் புறம்போக்குத் தரிசு நிலம் என்று காட்டப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கோயில்காட்டில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களுக்காகக் காடு அழிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன. 2007ஆம் ஆண்டு இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி முகாம் (ITBPF), அமைக்க 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
- அதன் பிறகு மத்தியப் பாதுகாப்புப் படை (CRPF) முகாம் அமைக்க 50 ஏக்கர், தீயணைப்புத் துறை பயிற்சி மையம் அமைக்க 10 ஏக்கர், காவலர் பயிற்சிப் பள்ளி அமைக்க 75 ஏக்கர், தற்போது மதுரை மத்தியச் சிறைச்சாலை 85 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயில்காட்டின் சிறப்புகள்:
- மதுரைக்கு கடம்பவனம் என்றொரு தொன்மையான பெயருண்டு. ஆனால், மதுரை நகருக்குள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே கடம்ப மரங்கள் உள்ளன. இடையப்பட்டி வெள்ளியாண்டவர் கோயில் காட்டில் மதுரைக்குரிய கடம்ப மரமான நீர்க்கடம்ப மரம் (Mitragyna parvifolia) இயற்கையாகவே வளர்ந்து பரவியுள்ளது.
- தமிழகத்தில் ஒரு சமவெளிக் காட்டில், இதுபோல் நீர்க்கடம்ப மரம் நிறைந்த அடர்ந்த பகுதி வேறெங்கும் இல்லை என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். கடம்ப மரத்தினை முளைக்க வைத்து வளர்ப்பது மிகச் சிரமமாக உள்ள சூழலில், இது போன்ற காட்டைக் காப்பது மிகமிக அவசியமாகிறது. தற்சமயம் மதுரை மாவட்டத்தில் பல்லுயிர் சூழல் நிறைந்த ஒரே கோயில்காடு இடையப்பட்டி கோயில்காடு மட்டுமே என்கிறார் ‘நறுங்கடம்பு’ நூலாசிரியர் கார்த்திகேயன்.
- மரம், செடி, கொடி, புல், புதர், ஒட்டுண்ணி, நீர்த் தாவரம் என 100க்கும் மேற்பட்ட தாவர வகைகளை வெள்ளிமலை காட்டில் ஆவணப்படுத்தியுள்ளோம். இக்காட்டின் தன்மையைப் பார்க்கும்போது இதனை வறண்ட இலையுதிர் காடுகள் (Dry Decidious Forest) என்றே குறிப்பிட வேண்டும் என்கிறார் மதுரை தியாகராயர் கல்லூரியின் ஓய்வுபெற்ற தாவரவியல் பேராசிரியர் பாபுராஜ்.
- மதுரை மாவட்டத்தில் இடையப்பட்டி போன்ற வறண்ட சமவெளி காடுகளைக் கொண்ட பகுதிகள் மிகவும் அரிது. நீர்ப் பறவைகள், இரவாடிகள், புதர் சிட்டுகள், கழுகு, வல்லூறு என 60க்கும் மேற்பட்ட பறவையினங்களை வெள்ளிமலை கோயில்காட்டில் ஆவணப்படுத்தியுள்ளோம் என்கிறார் பறவையியலாளரும் மருத்துவருமான பத்ரி நாராயணன்.
- “வெள்ளிமலை காட்டில் 50க்கும் மேற்பட்ட தேவாங்குகளை ஆவணப்படுத்தியுள்ளோம். இப்பகுதியில் ஆவணப்படுத்திய தாவரங்கள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள் அடங்கிய பட்டியலை வனத்துறைக்கு மனுவாக சமர்பித்துள்ளோம்” என்கிறார் மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வா.
- “வெள்ளிமலை காட்டிற்கு அருகில் அமைந்துள்ள திருவாதவூர் சமணர் மலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. மதுரைக்கு என்று எஞ்சியிருக்கிற ஒரே கோயில்காட்டைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார் ‘இறகுகள் அமிர்தா இயற்கை அறக்கட்டளை’யின் நிறுவனர் இரவீந்திரன்.
அரசின் கவனத்திற்கு...
- “இன்றும் புள்ளிமான், தேவாங்கு, உடும்பு, முள்ளெலி, முயல் உள்ளிட்ட காட்டுயிர்கள் வாழும் வெள்ளிமலை கோயில்காட்டைப் பாதுகாக்கக் கடந்த 15 வருடங்களாக எங்கள் ஊர் மக்கள் மதுரை ஆட்சியர், அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரிடம் மனு கொடுத்து வருகிறோம்.
- தற்போது மத்தியச் சிறைச்சாலை அமைப்பதற்காக 85 ஏக்கர் இப்பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றி எஞ்சியிருக்கும் வெள்ளிமலை கோயில்காட்டைப் பாதுகாக்க வேண்டும்” என்கிறார் இடையப்பட்டியைச் சேர்ந்த வெ. கார்த்திக்.
- மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை பாரம்பரியப் பல்லுயிர் தலமாகத் தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. மற்றொரு புறம் கரூர்-திண்டுக்கல் பகுதியில் தேவாங்குகளுக்காக கடவூர் சரணாலயத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.
- அதேபோல் அரிய தேவாங்குகள் வாழும் வெள்ளிமலை கோயில்காட்டை அழித்து, சிறை வளாகம் அமைப்பது சரியா? மேற்கண்ட பகுதிகளுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தைப் போல வெள்ளிமலை கோயில்காட்டுக்கும் அளிப்பதுதானே சரியாக இருக்கும்.
நன்றி: தினமணி (29 – 04 – 2023)