TNPSC Thervupettagam

சிறைக்குள் கேள்விக்குள்ளாகும் பெண்களின் பாதுகாப்பு

March 4 , 2024 141 days 187 0
  • நீதிமன்றக் காவலின்போது, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டவர்கள் தொடர்பாக 275 வழக்குகள் பதிவாகியுள்ளது, இந்தியச் சிறைகளில் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல்படி, 2017 முதல் 2022 வரை பதிவான வழக்குகளின் எண்ணிக்கை இது.
  • உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 92 வழக்குகளும் மத்தியப் பிரதேசத்தில் 43 வழக்குகளும் பதிவாகியுள்ளன. பதிவான வழக்குகளின் எண்ணிக்கையே இவ்வளவு என்றால் உண்மையான பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என அச்சம் எழுகிறது.
  • சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவும் குற்றவாளிகளாகவும் இருக்கும் பெண்களில் பலர், சிறைக்குள் நடக்கும் பாலியல் வல்லுறவால் கருவுறுவதும் குழந்தை பெறுவதும் அதிகரித்துவருவது குறித்து, கொல்கத்தா உயர் நீதிமன்றம் அண்மையில் கவலை தெரிவித்துள்ளது.
  • சிறைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை குறித்து ஆய்வுசெய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் (Amicus Curiae) ஒருவர் ஜனவரி 25 அன்று சமர்ப்பித்த ஆவணத்தில், சிறைத் துறை/காவல் துறை ஆண் ஊழியர் ஒருவரைக்கூடப் பெண்கள் சிறைக்குள் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியிருந்தார்.
  • விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண்கள் தங்கியிருந்த இல்லம் ஒன்றுக்குச் சென்றதையும் ஆவணத்தில் அந்த குறிப்பிட்டிருந்தார். பெண் ஒருவர் கருவுற்றிருந்ததாகவும் சிறையில் பிறந்த 15 குழந்தைகள் அங்கே தங்கவைக்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். தவிர, மேற்கு வங்கத்தின் பல்வேறு சிறைகளில் 196 குழந்தைகள் வளர்ந்துவருவதாக அவர் குறிப்பிட்டிருந்தது, சிறைகளுக்குள் பெண்கள் சந்தித்துவரும் அநீதிகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
  • அந்நியர்கள் யாரும் உள்நுழைய முடியாத பாதுகாப்பான கட்டமைப்பு கொண்ட சிறைக்குள், பெண்கள் மீது நிகழ்த்தப்படுகிற பாலியல் கொடுமைகள் சிறைத் துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் நிகழச் சாத்தியமில்லை. 2022 டிசம்பர் 31 நிலவரப்படி, இந்தியச் சிறைகளில் 1,537 பெண் கைதிகளும் 1,764 குழந்தைகளும் இருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது; இவர்களில் 1,312 பேர் விசாரணைக் கைதிகள். இவர்களுடன் 1,479 குழந்தைகள் தங்கியுள்ளனர்.
  • இந்த எண்ணிக்கை இரண்டுவிதமான தகவல்களைத் தருகிறது. பெண்களின் எண்ணிக்கையைவிடக் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, சிறைக்குள் அல்லது விசாரணைக்காகத் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வல்லுறவைச் சுட்டிக்காட்டுகிறது.
  • மறுபுறம், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் குழந்தை பிறக்கிற காலம்வரைக்கும் பெண்கள் விசாரணைக் காவலில் இருக்கிறார்கள் என்பது வழக்குகளைக் கையாள்வதில் உள்ள தேக்கநிலையை வெளிப்படுத்துகிறது. மொத்தத்தில், பாதிக்கப்படுகிறவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள்.
  • சிறைத் துறை/காவல் துறை அதிகாரிகள், மருத்துவமனை ஊழியர்கள், வெளியிலிருந்து சிறைக்கு வரும் சேவைப் பணியாளர்கள், சீர்திருத்த இல்லப் பணியாளர்கள் உள்ளிட்டோரால் விசாரணைக் காவலில் இருக்கும் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதைத் தடுக்கச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • விசாரணைக் காவல், சிறை, நீதிமன்றம் போன்றவற்றுக்கு இடையே அலைக்கழிக்கப்படும் பெண்களை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்கிற அதிகார – ஆதிக்க மனநிலையும், பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கிவிடும் பொதுப்புத்தியும், தண்டனைக்கு உள்படாத அதிகாரக் கட்டமைப்பும் சிறைக்குள் இருக்கும் பெண்கள் மீதான வன்முறைக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன.
  • வீட்டில் இருந்தாலும் சிறையில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். சிறைகளுக்குள் எந்தவொரு பெண்ணும் பாதிப்புக்கு ஆளாகாத சூழலை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories